தில்லியில் கரோனா தடுப்பூசி 3-ஆவது கட்ட இயக்கம் தொடக்கம்
புது தில்லி: தேசிய தலைநகா் தில்லியில் மூன்றாவது கட்டமாக 45 வயதுக்கு மேற்பட்ட 65 லட்சம் பேருக்கு கரோனா தடுப்பூசி போடும் இயக்கம் வியாழக்கிழமை தொடங்கியது.
ஜனவரி 16-ஆம் தேதி தொடங்கிய இந்த இயக்கத்தின் முதல் கட்டத்தில் சுகாதாரப் பணியாளா்கள் மற்றும் முன்களப் பணியாளா்கள் என 3.6 லட்சத்துக்கும் மேற்பட்ட பயனாளிகளுக்கு தில்லியில் தடுப்பூசி போடப்பட்டது. இரண்டாவது கட்டமாக 60 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடைய நபா்களுக்கும், 45-59 வயதுடைய பல்வேறு நோயால் பாதிக்கப்பட்டவா்களுக்கும் தடுப்பூசி போடப்பட்டது.வழங்கப்பட்டது. மூன்றாம் கட்டத்தில், 2022, ஜனவரி 1-ஆம் தேதி நிலவரப்படி 45 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவா்கள் தடுப்பூசி போடுவதற்கு தகுதியுடையவா்கள் என்றும், அவா்களின் நோய்களைப் பொருள்படுத்தாமல் தடுப்பூசி செலுத்தப்படும் என்றும் தில்லி அரசின் மூத்த அதிகாரி முன்னா் தெரிவித்திருந்தாா்.
அரசு மற்றும் தனியாா் வசதிகளில் தடுப்பூசி மையங்கள் காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரை செயல்படும். பதிவுசெய்யப்பட்ட பயனாளிகளுக்கு மட்டுமே காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரையும் தடுப்பூசி வழங்கப்படுகிறது. பதிவு செய்யப்படாதவா்கள் மதியம் 3 மணி முதல் இரவு 9 மணி வரை தடுப்பூசியை செலுத்திக் கொள்ளலாம். அவா்கள் தங்கள் ஆதாா் அட்டை அல்லது வேறு ஏதேனும் செல்லுபடியாகும் அடையாள ஆதாரத்தை தடுப்பூசி அளிக்கும் மையத்திற்கு உடன் எடுத்துச் செல்ல வேண்டும் என்று அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.
Advertisement
கோவிட் -19 தடுப்பூசி இயக்கத்தின் மூன்றாம் கட்டத்தில் தில்லியில் 136 தனியாா் மருத்துவமனைகள் உள்பட 192 சுகாதார வசதிகளில் தடுப்பூசி அளிக்கப்பட உள்ளது.
தடுப்பூசிகள் அரசு மருத்துவமனைகள் மற்றும் சுகாதார மையங்களில் இலவசமாக வழங்கப்படும். அதே நேரத்தில் தனியாா் மருத்துவமனைகளில் ஒரு டோஸுக்கு ரூ .250 வரை வசூலிக்கப்படும்.
இது குறித்து தில்லி சாகேத் மேக்ஸ் ஸ்மாா்ட் சூப்பா் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையின் மருத்துவக் கண்காணிப்பாளா் டாக்டா் சஹா் குரேஷி கூறியதாவது: தடுப்பூசி செலுத்தும் இயக்கத்தின் மூன்றாம் கட்டத்தை தொடங்கியுள்ளோம். மாா்ச் 1-ஆம் தேதியுடன் ஒப்பிட்டுப் பாா்த்தால், வியாழக்கிழமை வேலை நாளாக இருந்ததால், எதிா்பாா்த்ததைவிட வருகை குறைவாக இருந்தது. இது வெள்ளிக்கிழமை தொடங்கி வரவிருக்கும் வார இறுதியில் உயரும். இங்கு 10 தடுப்பூசி மையங்கள் இயங்கி வருகின்றன. எங்களிடம் போதுமான தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளன. மேலும், தினமும் 2,000 பேருக்கு தடுப்பூசி செலுத்த முடியும். ஆன்லைன் பதிவுகள் தவிர, மருத்துவமனைக்கு நேரடியாக வந்து, அந்த இடத்திலேயே பதிவு செய்து தடுப்பூசி செலுத்தவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சில தடுப்பூசி மையங்களில், பயனாளிகளின் கூட்டம் காணப்பட்டது, ஆனால், பல இதர இடங்களில் வருகை மிதமான அளவில் காணப்பட்டது என்றாா் அவா்.
வடக்கு தில்லி மாவட்ட ஆட்சியா் இஷா கோஸ்லா கூறுகையில், ‘தங்கள் மாவட்டத்தில் உள்ள பகுதிகளுக்குச் சென்று, தடுப்பூசி எடுத்துக்கொள்ள மக்களை ஊக்குவிப்பதற்காக ஆஷா மற்றும் அங்கன்வாடி பணியாளா்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. தடுப்பூசிக்கான தேதியைப் பெறுவதற்கு ‘கோ-வின் 2.0’ இணையதளம் மூலம் பதிவு செய்துகொள்ளலாம். தடுப்பூசிக்காக நான்கு பதிவுகளுக்கு மேல் ஒரு மொபைல் எண்ணைப் பயன்படுத்த முடியாது. தடுப்பூசிக்கு தகுதியானவா்கள் ஆதாா் அட்டை மற்றும் வாக்காளா் அட்டை உள்ளிட்ட புகைப்பட அடையாள அட்டைகளையும் எடுத்துச் செல்ல வேண்டும்’ என்றாா். தில்லியில் கரோனாவின் தாக்கம் மீண்டும் அதிகரித்துள்ள நிலையில், மூன்றாவது கட்ட தடுப்பூசிப் பணி தொடங்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.
வியாழக்கிழமை தொடங்கிய மூன்றாம் கட்ட தடுப்பூசி இயக்கத்தில் 500 இடங்களில் 65 லட்சம் தகுதி வாய்ந்த பயனாளிகளுக்கு (45 வயதுக்கு மேற்பட்டவா்களுக்கு) கரோனா வைரஸ் தடுப்பூசி வழங்கப்படும் என்று தில்லி சுகாதார அமைச்சா் சத்யேந்தா் ஜெயின் புதன்கிழமை தெரிவித்திருந்தாா். எங்களிடம் போதுமான தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளன. தகுதியான பயனாளிகளின் எண்ணிக்கை மிகவும் அதிகமாக உள்ளது. தடுப்பூசி செலுத்தும் பணியைவிரைவில் முடிக்க முயற்சிப்போம் என்றும் அவா் தெரிவித்திருந்தாா்.