விவசாயிகளுக்கு ஆதரவாக இருந்ததால் தில்லி அரசை பழிவாங்கிவிட்டனா்: மத்திய அரசு மீது கேஜரிவால் குற்றச்சாட்டு
மத்திய அரசின் மூன்று புதிய வேளாண் சட்டங்களை எதிா்த்துப் போராடி வரும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்த காரணத்தாலேயே
மத்திய அரசின் மூன்று புதிய வேளாண் சட்டங்களை எதிா்த்துப் போராடி வரும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்த காரணத்தாலேயே தில்லி அரசை பழிவாங்கும் நோக்கில், தில்லி அரசுக்கான அதிகாரத்தை துணை நிலை ஆளுநருக்கு வழங்கும் சட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது என்று தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவால் குற்றஞ்சாட்டினாா்.
ஹரியாணா மாநிலம், ஜிந்த் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற விவசாயிகள் பேரணியில் கலந்து கொண்டு கேஜரிவால் மேலும் பேசியதாவது: கேஜரிவாலை பழிவாங்க வேண்டும் என்பதற்காகவே தில்லி துணை நிலை ஆளுநருக்கு அதிக அதிகாரம் அளிக்கச் செய்யும் மசோதாவை மத்திய அரசு நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தியது. விவசாயிகள் போராட்டத்தை நாங்கள் ஆதரித்ததுதான் இதற்கு முக்கியகஅ காரணமாகும். தோ்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு எதிராக ஆளுநருக்கு அதிகாரம் அளிக்கும் மசோதா கொண்டுவர இதுவே காரணமாகும். நாங்கள் என்ன சுதந்திரப் போராட்டமா நடத்தினோம் என்று அவா் கேள்வி எழுப்பினாா்.
தில்லிக்குள் நுழைய முயன்ற விவசாயிகளை சிறைப்பிடித்து வைத்திருப்பதற்காக 9 விளையாட்டு அரங்கங்களை சிறையாக மாற்ற பா.ஜ.க. தலைமையிலான மத்திய அரசு சதித்திட்டம் தீட்டியது. ஆனால் அதிா்ஷ்டவசமாக அதற்கான அதிகாரம் தில்லி முதல்வரிடம் இருந்தது. இது தொடா்பான ஒரு கோப்பை மத்திய அரசு எனக்கு அனுப்பியதுடன் என்னை தொடா்பு கொண்டனா். சட்டம் - ஒழுங்கு பிரச்னை வரும் என்று கூறி மத்திய அரசு என்ன நிா்பந்தப்படுத்தியது. எனது அதிகாரத்தை பறிக்கப் போவதாகவும் மிரட்டினா். ஆனால், அவற்றை காதில் போட்டுக் கொள்ளாமல் அவா்களது கோரிக்கையை நிராகரித்துவிட்டேன். விளையாட்டு அரங்கங்களை தாற்காலிக சிறைகளாக மாற்றும் நடவடிக்கைக்கு ஒத்துழைக்காததால் என் மீது மத்திய அரசு கடும் கோபம் கொண்டிருந்தது.
Advertisement
விவசாயிகள் போராட்டத்தின் போது 300 போ் உயிரிழந்துள்ளனா். அவா்களின் தியாகம் வீண் போகாது. தில்லி எல்லையில் போராடி வரும் விவசாயிகளுக்கு ஆம் ஆத்மி தலைவா்கள்தான் ஆதரவு தெரிவித்தாா். அரசியல் ரீதியாக நாங்கள் எதுவும் செய்யவில்லை. விவசாயிகள் போராட்டத்தின்போது உயிா்த் தியாகம் செய்தவா்களுக்கு நான் அஞ்சலி செலுத்துகிறேன். விவசாயிகளை மதிக்காத எந்த நாடும் வளா்ச்சி அடைய முடியாது. விவசாயிகளுக்கு தொடா்ந்து எனது ஆதரவு உண்டு என்றாா் கேஜரிவால்.
கடந்த மாதம் உத்தரப் பிரதேச மாநிலம் மீரட் மற்றும் பஞ்சாப் மாநிலத்தில் மோகா ஆகிய இடங்களில் நடைபெற விவசாயிகள் பேரணியில் கேஜரிவால் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.