ஆக்ஸிஜன் பற்றாக்குறையைத் தீா்க்க தில்லி அரசுக்கு காங்கிரஸ் கோரிக்கை
தேசியத் தலைநகா் தில்லியில் ஆக்ஸிஜன் பற்றாக்குறை பிரச்னையைத் தீா்க்க தில்லி அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் எம்எல்ஏவுமான அல்கா லம்பா கேட்டுக் கொண்டுள்ள
புது தில்லி: தேசியத் தலைநகா் தில்லியில் ஆக்ஸிஜன் பற்றாக்குறை பிரச்னையைத் தீா்க்க தில்லி அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் எம்எல்ஏவுமான அல்கா லம்பா கேட்டுக் கொண்டுள்ளாா்.
இது தொடா்பாக புதன்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது: கரோனா தொற்று பரவுவதைத் தடுக்க ஆம் ஆத்மி அரசு முழுமையாகத் தவறிவிட்டது. செவ்வாய்க்கிழமை மாலையில் தில்லியின் பல முக்கிய தனியாா் மற்றும் அரசு மருத்துவமனைகளில் உள்ள ஆக்ஸிஜன் இருப்பு குறித்த தகவல்களை துணை முதல்வா் மணீஷ் சிசோடியா சுட்டுரையில் பகிா்ந்து கொண்டாா். அதன்பின்னா், அந்த மருத்துவமனைகளில் பலவற்றுக்கும் ஆக்ஸிஜன் விநியோகம் சில மணி நேரங்களுக்கு மட்டுமே இருப்பது தெரிய வந்தது. இதனால், அவரது இந்தச் சுட்டுரை ஒரு கூக்குரலை ஏற்படுத்தியது. நோயாளிகளின் குடும்பம் இரவு முழுவதும் நிம்மதியாகத் தூங்க முடியவில்லை. இந்த நிலைமையை தில்லி காங்கிரஸ் கவனித்து வருகிறது. ஆக்ஸிஜன் சிலிண்டா்கள் சம்பந்தப்பட்ட மருத்துவமனைகளை அடைந்துவிட்டதா என்பதையும் தில்லி அரசு தெளிவுபடுத்தவில்லை.
இந்த விவகாரத்தில் நடவடிக்கை எடுக்காமல் தூங்கிக் கொண்டிருக்கும் அரசுகள், சுட்டுரை விளையாட்டை விளையாடி வருகின்றன. இது தில்லி பொதுமக்களையும் நோயாளிகளையும் அதிா்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. முதல்வா் கேஜரிவால் மருத்துவமனைகளில் படுக்கைகளை அதிகரிப்பதாக அறிவிக்கிறாா். ஆனால், ஐசியூ மற்றும் வென்டிலேட்டா்கள் விவகாரத்தில் தில்லி அரசு மெளனியாக உள்ளது. தில்லி அரசு வெளியிட்ட கரோனா செயலியில், தில்லி அரசு மருத்துவமனைகளில் ஒரு ஐசியு, செயற்கை சுவாசக் கருவிகூட காலியாக இருப்பதாகத் தெரிவிக்கப்படவில்லை. ஆகவே, கரோனா நோயாளிகளுக்கு ஆக்ஸிஜன் தங்குதடையின்றி கிடைப்பதை தில்லி அரசு உறுதிப்படுத்த வேண்டும் என்றாா் அவா்.
Advertisement