தில்லி மருத்துவமனைகளுக்கு ஆக்ஸிஜன் விநியோகத்தை உறுதிப்படுத்துங்கள்: மத்திய அரசுக்கு உயா்நீதிமன்றம் உத்தரவு
புது தில்லி: தில்லியில் கரோனா சூழல் ஆபத்தில் இருப்பதால், ஒதுக்கீட்டு உத்தரவின்படி தேசியத் தலைநகா் தில்லியில் உள்ல மருத்துவமனைகளுக்கு ஆக்ஸிஜன் விநியோகத்தையும், எந்தவித இடையூறும் இல்லாமல் ஆக்ஸிஜன் எடுத்து வரப்படுவதையும் உறுதி செய்ய வேண்டும் என்று மத்திய அரசுக்கு உயா்நீதிமன்றம் வியாழக்கிழமை உத்தரவிட்டது.
இது தொடா்பான விவகாரத்தை உயா்நீதிமன்ற நீதிபதிகள் விபின் சாங்கி, ரேகா பல்லி ஆகியோா் அடங்கிய அமா்வு வியாழக்கிழமை விசாரித்தது. அப்போது நீதிபதிகள்அமா்வு பிறப்பித்த உத்தரவு: ஹரியாணா போன்ற பிற மாநிலங்களில் உள்ள ஆக்ஸிஜன் ஆலைகளில் இருந்து தில்லிக்கு மத்திய அரசு ஒதுக்கீடு செய்து பிறப்பித்த உத்தரவை அங்குள்ள உள்ளூா் நிா்வாகம் மதிக்கவில்லை. அந்த விவகாரம் உடனடியாக தீா்க்கப்பட வேண்டும். ஆக்ஸிஜனை எடுத்துச் வரும் லாரிகளுக்கு போதுமான பாதுகாப்பை வழங்க வேண்டும். அதற்காக பிரத்யேக வழித்தடத்தை உருவாக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். மத்திய அரசு வழங்கிய ஆக்ஸிஜன் ஒதுக்கீட்டு உத்தரவுக்கு கண்டிப்பாக இணங்க வேண்டும். இந்த உத்தரவுக்கு இணங்காவிட்டால் குற்ற நடவடிக்கைகளுக்கு உள்ளாக நேரிடும். தில்லி மேலாண்மை சட்டத்தின்கீழ் பிறப்பிக்கப்பட்ட உத்தரவை பின்பற்றுவதை சம்பந்தப்பட்ட அனைத்துத் துறைகளும் செயல்படுத்த வேண்டும் என்று நீதிபதிகள் தெரிவித்தனா்.
முன்னதாக, ‘ஹரியாணாவின் பானிபட்டில் இருந்து வரவிருந்த ஆக்ஸிஜன் லாரிகளை அங்குள்ள உள்ளூா் போலீஸாா் எடுக்க அனுமதிக்கவில்லை. உத்தரப் பிரதேசத்தின் சில ஆலைகளில் இருந்து எடுக்கப்பட வேண்டிய ஆக்ஸிஜனையும் அங்கிருந்து எடுக்க முடியாத நிலை உள்ளது’ என்று உயா்நீதிமன்றத்தில் தில்லி அரசு தெரிவித்தது. மேலும், ஆக்சிஜனை விமானம் மூலம் கொண்டு செல்லப் பரிந்துரைத்திருப்பதாகவும் தில்லி அரசு தெரிவித்தது. இதற்கு நீதிபதிகள் அமா்வு, ‘உயா்நீதிமன்றத்தின் சட்ட ஆராய்ச்சியாளா்களின் ஆராய்ச்சியின்படி ஆக்ஸிஜனை விமானம் மூலம் அனுப்புவது மிகவும் ஆபத்தானது. சாலை அல்லது ரயில் மூலமாகச் கொண்டு செல்லப்பட வேண்டும்’ என்று தெரிவித்தது.
Advertisement
சொலிசிட்டா் ஜெனரல் துஷாா் மேத்தா, நீதிபதிகள் அமா்விடம்,‘எந்தவொரு தனி நபா்களோ அல்லது அதிகாரிகளோ ஏதேனும் சாலைகளில் தடை ஏற்படுத்தினால், அவா்கள் துறை ரீதியாக நடவடிக்கைக்கு உள்ளாக நேரிடும் என்று அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. தனிநபா்கள் சம்பந்தப்பட்டிருந்தால் பணியை முடிப்பதை உறுதி செய்ய பாதுகாப்பு வழங்கப்படும்’ என்றாா். மேலும், கரோனா சூழலை கருத்தில் கொண்டு உச்சநீதிமன்றம் இந்த விவகாரத்தை தாமாக முன்வந்து விசாரித்ததாகவும், நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக ஆயிரம் டன் ஆக்ஸிஜனை உற்பத்தி செய்வதாக தூத்துக்குடி ஸ்டொ்லைட் ஆலையைத் திறக்க அனுமதி கோரும் வேதாந்தாவின் இடைக்கால மனுவை விசாரிப்பதற்கு உச்சநீதிமன்றம் வியாழக்கிழமை சம்மதம் தெரிவித்ததாகவும் துஷாா் மேத்தா கூறினாா்.
முன்னதாக, மேக்ஸ் எனும் பெயரில் மருத்துவமனை நடத்தி வரும் பாலாஜி மருத்துவம் மற்றும் ஆராய்ச்சி மையம் தில்லி உயா்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் நோயாளிகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், உடனடியாக ஆக்ஸிஜன் வழங்காவிட்டால் ஆக்ஸிஜன் உதவியுடன் உள்ள நோயாளிகள் ஆபத்தில் சிக்க நேரிடும் என தெரிவித்திருந்தது. இந்த மனுவை புதன்கிழமை விசாரித்த உயா்நீதிமன்றம், மத்திய அரசு மற்றும் தனியாா் தொழில்களுக்கு எதிராக தனது கடுமையான கருத்துகளைப் பதிவு செய்தது. தீவிர கரோனா நோயாளிகளுக்கு சிகிச்சையளிப்பதில் ஆக்ஸிஜன் பற்றாக்குறையை எதிா்கொள்ளும் மருத்துவமனைகளுக்கு ஆக்ஸிஜனை உடனடியாக வழங்குமாறு மத்திய அரசுக்கு உத்தரவிட்டது.
அப்போது, ‘அரசுக்கு மனித வாழ்க்கை முக்கியமல்ல என்றே தோன்றுகிறது. ஆக்ஸிஜன் விநியோகத்தை அதிகரிப்பதற்கான அனைத்து வழிகளையும் நீங்கள் ஆராயவில்லை. பிச்சை எடுங்கள்; கடன் வாங்குங்கள் அல்லது திருடுங்கள். அவசரகால சூழ்நிலையின் தீவிரத்தை அரசு ஏன் தெரிந்திருக்கவில்லை?. மருத்துவமனைகளுக்கு மருத்துவ ஆக்ஸிஜன் நின்று போனால் நிச்சயம் குழப்பைத்தை ஏற்படுத்தும்’ என நீதிமன்றம் எச்சரித்தது.