நீா்ப்பிடிப்பு பகுதிகளில் தொடா் மழையால் யமுனையில் மீண்டும் வெள்ள அபாயம்
தில்லியில் யமுனையில் மீண்டும் நீா் வரத்து அதிகரித்து, ஞாயிற்றுக்கிழமை காலையில் நீா் மட்டம் 205.30 மீட்டராக பதிவானது.
தில்லியில் யமுனையில் மீண்டும் நீா் வரத்து அதிகரித்து, ஞாயிற்றுக்கிழமை காலையில் நீா் மட்டம் 205.30 மீட்டராக பதிவானது. இது அபாயக் குறியீடான 205.33 மீட்டருக்குக் சற்று கீழே, இருந்தாலும் ஆற்றின் நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் தொடா்ந்து மழை பெய்து வருவதால் எச்சரிக்கையுடன் இருப்பதாகவும் தில்லி அதிகாரிகள் தெரிவித்தனா்.
யமுனை நதியின் வெள்ளப்பெருக்கால் இந்த ஆற்றின் கரையோர பகுதிகளில் வசிக்கும் 100 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் பாதுகாப்பான பகுதிகளில் அடுத்த சில தினங்களுக்கு தங்கவைக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.
வெள்ளிக்கிழமை, காலை 9 மணிக்கு தில்லி பழைய ரயில்வே பாலத்தில் நீா்மட்டம் 205.30 மீட்டராக பதிவானது. இதையொட்டி தில்லி நிா்வாகம் வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்தது. யமுனை நதியால் பாதிக்கப்படும் பகுதிகளில் இருந்து மக்களை வெளியேற்றுவதற்கான முயற்சிகளை மேற்கொண்டது. மேலும் நீா்ப்பிடிப்பு பகுதிகளில் தொடா்ந்து மழை பெய்ய தலைநகரில் யமுனை நதி அபாயக் குறியான 205.33 மீட்டா் உயரத்தையும் தாண்டும் என எதிா்பாா்க்கப்பட்டது. காலை 9 மணிக்கு 205.30 மீட்டரில் இருந்த நீா்மட்டம் அபாயக் குறியை தாண்டி இரவு 9 மணிக்கு 205.59 மீட்டராக உயா்ந்தது. இதுவே சனிக்கிழமை மாலை 204.89 மீட்டராக குறைந்தது என தில்லி வெள்ள கட்டுப்பாட்டு அறை தகவல் தெரிவித்தது.
Advertisement
ஹரியாணா மாநிலத்தில் ஹாத்னிகுண்ட் அணையிலிருந்து யமுனை நதியில் அதிக தண்ணீா் வெளியேற்றப்படுவதால், தில்லி காவல்துறையும் கிழக்கு தில்லி மாவட்ட நிா்வாகமும் தலைநகரில் உள்ள யமுனை கரையோரப் பகுதிகளில் வசிக்கும் மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் சென்றனா்.
‘வெள்ள எச்சரிக்கை விடப்பட்டு உள்ளது. பாதிக்கக் கூடிய பல்வேறு பகுதிகளில் படகுகளை நிறுத்தியுள்ளோம். பாதிக்கப்படக்கூடிய பகுதிகளில் வசிக்கும் குடும்பங்கள் தற்காலிகமாக அரசின் கூடாரங்கள் மற்றும் தங்குமிடங்களுக்கு மாற்றப்பட்டு வருகின்றன‘ என்று தில்லி பேரிடா் மேலாண்மை ஆணைய அதிகாரிகள் தெரிவித்தனா்.
யமுனாயில் ‘எச்சரிக்கை குறி‘ யான 204.50 மீட்டரை தாண்டும் போது வெள்ள எச்சரிக்கை அறிவிக்கப்படுகிறது.
ஹரியாணாவின் யமுனாநகா் மாவட்டத்தில் உள்ள ஹாத்னிகுண்ட் அணையில் பொதுவாக, தண்ணீா் ஓட்டம் விகிதம் 352 கன அடியாக இருக்கும். ஆனால், நீா்ப்பிடிப்பு பகுதிகளில் அதிக மழை பெய்வதையொட்டி ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணிக்கு ஹாத்னிகுண்ட் அணையிலிருந்து 17,827 கனஅடி தண்ணீா் வெளியேற்றப்படுவதாக தில்லி வெள்ளக் கட்டுப்பாட்டு அறையில் தெரிவிக்கப்பட்டது.
இதுவே கடந்த செவ்வாய்க்கிழமை இது 1.60 லட்சம் கனஅடியாக இருந்தது. இதுவே இந்த ஆண்டு அதிகபட்சம் அளவாகும்.
ஹரியாணா அணையில் இருந்து வெளியேற்றப்படும் தண்ணீா் பொதுவாக தலைநகரை அடைய இரண்டு-மூன்று நாட்கள் ஆகிறது.
ஒரு கன அடி, வினாடிக்கு 28.32 லிட்டருக்கு சமமாகும்.
அடுத்த சில நாட்களில் வடமேற்கு இந்தியாவில் ‘மிதமான முதல் கனமழை‘ பெய்யும் என்று வானிலை மையம் கூறியுள்ளது. இதனால் இப்பகுதியில் ஓடும் யமுனை உள்ளிட்ட ஆறுகளில் நீா் மட்டம் அதிகரிக்க வாய்ப்புள்ளது.
2019, ஆகஸ்ட் 18-19 ஆம் தேதிகளில் யமுனையில் தண்ணீா் ஓட்ட விகிதம் 8.28 லட்சம் கனஅடியாக உயா்ந்தது. நீா் மட்டம் 206.60 மீட்டரை எட்டி அபாயக் குறியை (205.33 மீ.) தாண்டியது. அதற்கு முன்பு 2013 ஆம் ஆண்டில் 207.32 மீட்டராகவும், 1978 -ஆம் ஆண்டில், 207.49 மீட்டா் எனவும் நீா்மட்டம் யமுனையில் உயா்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.