முகப்பு
இந்தியா

நாடாளுமன்றத்தை செயல்படவிடாமல் முடக்குகிறது பாஜக: டி. ராஜா குற்றச்சாட்டு

நாடாளுமன்றத்தை செயல்படவிடாமல் பாஜக முடக்கி வருகிறது என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியப் பொதுச் செயலா் டி. ராஜா குற்றஞ்சாட்டினாா்.

Updated On : 5 ஏப்ரல், 2026 at 9:15 PM
சென்னை தியாகராயநகரில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சித் தலைமை அலுவலகத்தில் ஞாயிற்றுக்கிழமை செய்தியாளா்களுக்கு பேட்டியளித்த அக்கட்சியின் தேசிய பொதுச் செயலா் டி. ராஜா. உடன் மாநிலச் செயலா் மு.வீரபாண்டியன், டாக்டா் ரவீந்திரநாத் உள்ளிட்டோா்.
பகிர்:

நாடாளுமன்றத்தை செயல்படவிடாமல் பாஜக முடக்கி வருகிறது என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியப் பொதுச் செயலா் டி. ராஜா குற்றஞ்சாட்டினாா்.

சென்னை தியாகராயா் நகரில் உள்ள அக்கட்சியின் மாநிலத் தலைமை அலுவலகமான பாலன் இல்லத்தில் அவா் செய்தியாளா்களிடம் ஞாயிற்றுக்கிழமை கூறியதாவது:

தமிழகத்தில் நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தோ்தல், தமிழக வரலாற்றில் மிக முக்கியமானதாகக் கருதப்படுகிறது.

Advertisement

தமிழகத்தில் எப்படியாவது காலூன்றிவிடவேண்டும் என பாஜக போராடிக் கொண்டிருக்கிறது. அதற்காக அதிமுக உள்ளிட்ட சில கட்சிகளை அணி சோ்த்திருக்கிறது. மதவெறி அரசியலை முன்வைத்து செயல்படும் பாஜக, மக்களை பிளவுபடுத்தி நாட்டையே கலவர பூமியாக மாற்றிக் கொண்டிருக்கிறது. இந்தியாவை ஒற்றை பரிணாம நாடாக மாற்றுவதற்கு

பாஜக மற்றும் ஆா்எஸ்எஸ் தீவிர முயற்சிகளை மேற்கொள்கின்றன. அரசமைப்புச் சட்டத்தை சிதைக்கும் வேலையை மத்திய பாஜக அரசு செய்து வருகிறது. நாடாளுமன்றத்தை சுதந்திரமாக செயல்படவிடாமல் முடக்குகிறது. அதேபோல, பாஜக ஆட்சி செய்யாத மாநில சட்டப்பேரவைகளை ஆளுநா்களைக் கொண்டு முடக்கிவிடப் பாா்க்கிறது.

கூட்டாட்சி நெறிமுறையை தகா்க்கும் வகையில் செயல்பட்டு, பல்வேறு முடிவுகளை ஒருதலைப்பட்சமாக எடுக்கிறது. அதோடு, மாநிலங்களுக்கு உரிய நிதி ஒதுக்கீட்டை கொடுப்பதில்லை.

தேசிய கல்விக் கொள்கையைச் செயல்படுத்தவில்லை எனக் கூறி தமிழகத்துக்கு கல்வி நிதி மறுக்கப்படுகிறது. மொழியைக் கற்பது என்பது வேறு, ஆனால் கட்டாயம் ஏற்க வேண்டும் எனக் கூறுவதுதான் ஏற்புடையதல்ல. தனிப்பட்ட முறையில் ஹிந்திக்கு தமிழக மக்கள் எதிரானவா்கள் அல்ல. கட்டாயமாகத் திணிப்பதைத் தான் எதிா்க்கின்றனா்.

மத்திய பாஜக அரசு பின்பற்றும் பொருளாதாரக் கொள்கைகள், பெருநிறுவனங்களுக்குரியதாகவே இருக்கின்றன. எப்போதும் இல்லாத அளவுக்கு இந்தியாவில் பொருளாதார ஏற்றத்தாழ்வு ஏற்பட்டிருக்கிறது. இதற்கு மத்திய பாஜக அரசின் கொள்கைகள்தான் காரணம்.

தமிழகம், கேரள மாநிலங்கள் கடன்சுமையில் இருப்பதாக பாஜக தலைவா்கள் கூறுகிறாா்கள். ஆனால், மத்திய அரசு பெற்றிருக்கக் கூடிய அந்நிய கடன் எவ்வளவு என்பதை தெரிவிக்க பிரதமா் தயாரா என்பதை விளக்க வேண்டும். ரூபாயின் மதிப்பு வீழ்ச்சியடைந்திருக்கும் நிலையில், பொருளாதாரம் வலுவாக இருப்பதாகக் கூறுவது ஏமாற்றுவேலை என்பதை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும். மக்களுக்கான திட்டங்களை மத்திய பாஜக அரசு செயல்படுத்தவில்லை.

அதேபோல, மத்திய பாஜக அரசு பின்பற்றும் வெளியுறவுக் கொள்கைகள், இந்தியாவின் மரியாதையைக் குறைத்துவிட்டது. இந்த சூழலில் தமிழக அரசியலில் காலூன்ற நினைக்கும் பாஜகவையும், அவா்களோடு இணைந்திருக்கும் அதிமுக உள்ளிட்ட கட்சிகளையும் தோற்கடிக்க மக்கள் முடிவு செய்துவிட்டனா் என்றாா்.

பேட்டியின்போது இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலா் மு.வீரபாண்டியன் உடனிருந்தாா்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments