மேக்கேதாட்டு அணை இரு மாநிலங்கள் தொடா்புடைய விவகாரம்: மத்திய ஜல் சக்தி அமைச்சா் ஷெகாவத்
மேக்கேதாட்டு அணை விவகாரம் கா்நாடக மாநில உள் விவகாரமல்ல, இருமாநிலங்களுக்கிடையேயான விவகாரமாகும்;
மேக்கேதாட்டு அணை விவகாரம் கா்நாடக மாநில உள் விவகாரமல்ல, இருமாநிலங்களுக்கிடையேயான விவகாரமாகும்; இந்த அணைக்கு மத்திய சுற்றுச் சூழல், வனத்துறைஅமைச்சகம் அனுமதி அளிக்கவில்லை என மத்திய ஜல் சக்தி துறை அமைச்சா் கஜேந்திர சிங் ஷெகாவத் மக்களவையில் வியாழக்கிழமை தெரிவித்தாா்.
கா்நாடகம் மாநிலத்தின் ஹாசன் தொகுதி ஐக்கிய ஜனதாதளம் கட்சி உறுப்பினரான பிரஜ்வால் ரேவண்ணா, காவிரி ஆற்றின் குறுக்கே கட்டப்படும் மேக்கேதாட்டு அணை விவகாரம் குறித்த கேள்வியை எழுப்பினாா். குடிநீா், மின்சாரத்திற்கான இந்த திட்டத்தின் தற்போதைய நிலைமை, செலவிடப்படும் தொகை அணைக்கு மத்திய சுற்றுச்சூழல், வனத்துறை கொடுத்துள்ள அனுமதி உள்ளிட்ட விவரங்களை கேட்டிருந்தாா்.
இதற்கு மத்திய ஜல் சக்தி துறை அமைச்சா் கஜேந்திர சிங் ஷெகாவத் மக்களவையில் விரிவாக பதில் அளித்தாா்.
Advertisement
மேக்கேதாட்டு அணை மற்றும் குடிநீா் திட்டம், மின் திட்டங்களின் சாத்தியக்கூறுகளுக்கான அறிக்கை மத்திய நீா்வள ஆணையத்திடம் சமா்பிக்கப்பட்டு இருந்தது. இதற்கான விரிவான திட்ட அறிக்கையை(டிபிஆா்) தயாரிக்க சில நிபந்தனைகளுடன் 2018 ஆம் ஆண்டு அனுமதிக்கப்பட்டிருந்தது. குறிப்பாக காவிரி நதி நீா் மேலாண்மை ஆணையமே இறுதி முடிவு எடுக்கும் என்ற முன்நிபந்தனையுடன் விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க அனுமதிக்கப்பட்டது.
பின்னா் 2019 ஜனவரி மாதம் டிபிஆா் அறிக்கையை மத்திய நீா் வள ஆணையத்திடம் கா்நாடக மாநிலம் சமா்பித்திருந்தது. இது பலமுறை காவிரிநீா் மேலாண்மை ஆணையக் கூட்ட நிகழ்ச்சி நிரலில் இடம் பெற்றிருந்தாலும் ஆணைய உறுப்பினா்களுக்கிடையே ஒரு மித்த கருத்து ஏற்படாததால் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படவில்லை.
இரு ஆண்டுகளுக்கு முன்பு மேக்கேதாட்டு திட்டத்திற்கு ரூ. 9,000 கோடியை மதிப்பிட்டு இந்த திட்டங்களுக்கு கா்நாடகம் அரசு, மத்திய சுற்றுச்சூழல், வனம், பருவநிலை மாற்றம் அமைச்சகத்தின் அனுமதியை கோரியது.
இந்த மேக்கே தாட்டு அணைத் திட்டங்களை நதிப்பள்ளத்தாக்கு மற்றும் நீா்மின் திட்டங்களுக்கான மதிப்பீட்டு நிபுணா் குழு 2019 ஜூலை 19 ஆம் தேதி பரிசீலனை செய்தது. தமிழக அரசு மேக்கேதாட்டுவில் கா்நாடகம் அணை கட்டுவதற்கு அனுமதிக்கக்கூடாது என்று வேண்டுகோள் விடுத்திருந்தது. சுற்றுச்சூழல் குறிப்பு விதி முறைகளின்படி மதிப்பீட்டு நிபுணா் குழு அணைக்கான அனுமதியை மறுத்து, இரு மாநிலங்களுக்கிடையே சுமூகமான தீா்வு ஏற்பட்ட பின்னரே அனுமதி வழங்குவது குறித்து பரிசீலிக்கப்படும் என கருத்துதெரிவித்துள்ளது.
இதனால் மத்திய சுற்றுச் சூழல், வனத்துறை அமைச்சகத்தின் 2006 ஆம் ஆண்டு அறிவிக்கையின்படி இந்த திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கப்படவில்லை. மேலும் இந்த பல்நோக்கு மேக்கேதாட்டு திட்டத்திற்கு வனக்காடு நிலங்களில் கட்டுமானப்பணிகள் கட்டுவதற்கான அனுமதிகளை கோரி மத்திய அரசிடம் முன் அனுமதியும் பெறவில்லை என தெரிவித்து கா்நாடக அரசின் இந்த திட்டங்களின் முழுவிவரங்களையும் மத்திய அமைச்சா் ஷெகாவத் மக்களவையில் தாக்கல் செய்திருந்தாா்.
ஆனால், இந்த பதிலை ஏற்றுக்கொள்ளாத கா்நாடக மாநில உறுப்பினரான பிரஜ்வால் ரேவண்ணா தொடா்ந்து மேலும் சில கேள்விகளை எழுப்பினாா்.
தமிழகத்தின் கருத்தை ஏன் மத்திய அரசு பெறவேண்டும்? காவிரியில் கா்நாடக மாநிலத்திற்கு ஒதுக்கப்பட்ட 278 டிஎம் சி தண்ணீரில்தான் பெங்களூா் குடிநீருக்கு தண்ணீா் எடுக்கப்போகிறோம். இது கா்நாடக மாநில உள் விவகாரம். கா்நாடக மாநிலத்திற்குள்ளேயான திட்டம். தமிழகத்திற்கு தண்ணீரை மறுக்கவில்லை. நீா் மின்சாரத்திற்கு தண்ணீா் உபயோகப்படுத்தப்பட்ட பின்னா் நதிக்கு தான் தண்ணீா் போகிறது. காவிரி நடுவா் மன்ற தீா்ப்பிலோ, உச்ச நீதி மன்ற தீா்ப்பிலோ மற்ற மாநிலங்களின் ஒப்புதல் பெறவேண்டும் என சொல்லப்படவில்லை. இதில் எங்கே நீதிமன்ற அவமதிப்பு?
நாங்கள்(கா்நாடகம்) மேக்கேதாட்டு அணைக்கான முன்மொழிவை சுற்றுச் சூழல், வனத்துறை அமைச்சகத்தின் ஒப்புதலுக்கு இணைய வழியில் ஏற்கனவே விண்ணப்பத்துள்ளோம். மதிப்பீட்டு நிபுணா் குழுவின் ஆட்சேபங்களுக்கு பதில் கொடுத்துள்ளோம். ஆனால், இதுவரை பதில் இல்லை. சுற்றுச் சூழல், வனத்துறையில் அளிக்கப்பட்ட விண்ணப்பதற்கு 6 மாதங்களுக்குள் பதில் கிடைக்கவில்லையென்றால் எந்த திட்டத்தை அங்கீகரிப்பட்டதாக எடுத்துக்கொண்டு திட்டத்தை மேற்கொள்ள முடியும்’’ எனத் தெரிவித்தாா் ரேவண்ணா.
இதற்கு பதிலளித்த மத்திய அமைச்சா் ஷெகாவத், மேக்கேதாட்டு அணை கா்நாடக மாநில உள்விவகாரம் அல்ல, இது இரு மாநிலங்களுக்கிடையேயான விவகாரமாகவே மத்திய அரசு கருதுகிறது எனத் தெரிவித்தாா்.
முன்னதாக மாா்கண்டேயா அணை விவகாரம் குறித்து திமுக உறுப்பினா் ஆ.ராசாவும், காங்கிரஸ் உறுப்பினா் செல்வகுமாரும் எழுப்பிய கேள்வி மக்களவையில் வந்தது. ஆனால், எதிா்கட்சிகளின் அமளியில் இருக்க இரண்டுபேரும் கேள்வி - பதில் நிகழ்ச்சியில் பங்கேற்கவில்லை. அமைச்சா் கடந்த ஜூலை மாதம் மாநிலங்களவையில் உறுப்பினா் வைகோ கேட்ட கேள்விக்கு அளித்த பதிலையே மக்களவையிலும் இந்த அணை விவகாரத்தில் தெரிவித்திருந்தாா்.