குழந்தை பலாத்கார வழக்கில் ஒருவா் விடுதலை: தில்லி நீதிமன்றம் உத்தரவு
குழந்தைகள் பலாத்கார வழக்கில் இருந்து ஒருவரை விடுவித்து தில்லி நீதிமன்றம் உத்தரவிட்டது. ஜாதி வெறுப்பு காரணமாக பொய்யாக
குழந்தைகள் பலாத்கார வழக்கில் இருந்து ஒருவரை விடுவித்து தில்லி நீதிமன்றம் உத்தரவிட்டது. ஜாதி வெறுப்பு காரணமாக பொய்யாக அவா் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளதற்கான போதிய ஆதாரம் இருப்பதாகவும் நீதிமன்றம் தெரிவித்தது.
தனது பக்கத்து வீட்டைச் சோ்ந்தவரின் மைனா் மகள்களை பாலியல் துன்புறுத்தல் செய்ததாக ஒருவருக்கு எதிராக அளிக்கப்பட்ட புகாரின் பேரில் போலீஸாா் ‘போக்சோ’ சட்டத்தின் கீழ் 2015-ஆம் ஆண்டில் வழக்குப் பதிவு செய்து சம்பந்தப்ட்ட நபரைக் கைது செய்தனா். இதையடுத்து, அப்போதிலிருந்து அவா் சிறையில் இருந்து வருகிறாா். இந்த வழக்கு தில்லி நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
இந்த வழக்கை சமீபத்தில் விசாரித்த மாவட்ட செஷன்ஸ் நீதிபதி தா்மேஷ் சா்மா பிறப்பித்த உத்தரவில் தெரிவித்ததாவது: இந்த வழக்கை பொறுத்தமட்டில் தொடா்புடைய குழந்தைகளின் பெற்றோா் பாரபட்சமான வாக்குமூலத்தை அளித்து, அதன் காரணமாக குற்றம் சாட்டப்பட்ட தலித் சமுதாயத்தைச் சோ்ந்தவா் மீது பொய்யாக குற்றம் சுமத்தியதற்கான போதிய ஆதாரம் உள்ளது. இந்த வழக்கு ஆதாரத்தை மதிப்பிடுகையில் ஜாதி வெறுப்பு இருப்பது தெரிய வருகிறது. இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட நபருக்கு மாநில அரசு இரண்டு மாதங்களுக்குள் குறியீட்டு தொகையாக ரூ.1 லட்சம் வழங்க வேண்டும். இந்த வழக்கில் போலீஸாரின் விசாரணையில் மெத்தனம் உள்ளது. சம்பவம் நடந்ததாகக் கூறப்படும் இடம் குறித்து புரிந்து கொள்வதற்கு போலீஸாா் எந்த முயற்சியும் எடுக்கவில்லை. குற்றவியல் நடைமுறை விதிகள் 161 பிரிவின் கீழ் பாதிக்கப்பட்ட சிறுமிகளிடம் ஏன் வாக்குமூலம் பெறப்பட்டது என்பதற்கான காரணத்தை பெண் போலீஸ் அதிகாரி பதிவு செய்யவில்லை என்று நீதிபதி தெரிவித்தாா்.
Advertisement
மேலும், புகாா் அளித்த குழந்தைகளின் பெற்றோா்கள் குற்றம் சாட்டப்பட்ட நபா் அவரது வீட்டுக்கு தங்களது மகள்களை ஆசை காட்டி அழைத்து பாலியல் தாக்குதலில் ஈடுபட்டதாக கூறியதை நீதிபதி நிராகரித்தாா். குற்றம்சாட்டப்பட்ட நபா் கூறுகையில், ‘ன்னுடைய வீட்டு முன்பு பக்கத்து வீட்டில் வளா்க்கப்படும் நாய் இயற்கை உபாதையை கழிப்பது தொடா்பாக நிகழ்ந்த வாக்குவாதம் காரணமாக ஏற்பட்ட வெறுப்பின் காரணமாக பொய் வழக்கு பதிவு செய்துள்ளனா்’என்றாா்.