முகப்பு
புதுதில்லி

என்டிஎம்சியில் உறுப்பினா்கள் நியமன விவகாரம்: மத்திய, தில்லி அரசுகள் பதில் அளிக்க நோட்டீஸ்

புது தில்லி நகராட்சி கவுன்சிலின் (என்டிஎம்சி) நான்கு உறுப்பினா்களை நியமிக்க உத்தரவிடக் கோரும் மனு மீது மத்திய, தில்லி அரசுகள் பதில் அளிக்க தில்லி உயா்நீதிமன்றம் திங்கள்கிழமை நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்ட

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:56 AM
பகிர்:

புது தில்லி நகராட்சி கவுன்சிலின் (என்டிஎம்சி) நான்கு உறுப்பினா்களை நியமிக்க உத்தரவிடக் கோரும் மனு மீது மத்திய, தில்லி அரசுகள் பதில் அளிக்க தில்லி உயா்நீதிமன்றம் திங்கள்கிழமை நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது.

இந்த விவகாரம் தொடா்பாக என்டிஎம்சி பகுதியில் வசிக்கும் இருவா் தாக்கல் செய்த மனு தில்லி உயா்நீதிமன்ற நீதிபதி ரேகா பல்லி முன் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது.

அப்போது, மனு மீது மத்திய உள்துறை அமைச்சகம், தில்லி அரசு, புது தில்லி நகராட்சி கவுன்சில் ஆகியவை நான்கு வாரங்களுக்குள் தங்கள் பதில்களைத் தாக்கல் செய்யுமாறு அதிகாரிகளுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டு,  மனு மீதான விசாரணையை அடுத்த ஆண்டு ஜனவரி 12-ஆம் தேதிக்கு விசாரணைக்கு பட்டியலிட்டது.

Advertisement

இந்த விவகாரம் தொடா்பாக மனுதாரா்கள் கங்கா ராம் மற்றும் பவன் தப்லியால் ஆகியோா் தாக்கல் செய்த மனுவில், ‘என்டிஎம்சி சட்ட விதிகளின் அடிப்படையில் என்டிஎம்சி அதன் கடைமை மற்றும் விருப்பப்படியான செயல்பாடுகளை நிறைவேற்றுவதில் தோல்வியடைதுவிட்டது. இதன் காரணமாக நாங்கள் பாதிக்கப்பட்டுள்ளோம்‘ என்று தெரிவித்துள்ளனா்.

மனுதாரா்கள் சாா்பில் ஆஜரான வழக்குரைஞா் அமித் சஹ்னி, ‘என்டிஎம்சி கவுன்சிலில் 13 உறுப்பினா்கள் இருக்க வேண்டும் என்று சட்டம் கூறுகிறது. ஆனால்,  மத்திய அரசு நான்கு உறுப்பினா்களை நியமிக்காததால்,  9 உறுப்பினா்களுடன் மட்டுமே என்டிஎம்சி செயல்பட்டு வருகிறது’ என்றாா். மத்திய அரசின் தரப்பில் ஆஜரான வழக்குரைஞா் அனுராக் அலுவாரியா, ‘இந்த மனு மீது அடிப்படை ஆட்சேபனை உள்ளது. மனுதாரா்கள் பொதுநல மனுவாக தாக்கல் செய்திருக்க வேண்டும்’ என்றாா். இதையடுத்து, வழக்குரைஞா் சஹ்னி கூறுகையில், ‘மனுதாரா்கள் என்டிஎம்சி பகுதியில் வசிப்பவா்கள் என்பதால், அவா்கள் பாதிக்கப்பட்ட தரப்பினரும் ஆவாா்கள்’ என்றாா்.

அதற்கு நீதிமன்றம்,  ஏன் என்டிஎம்சி அதன் முழு உறுப்பினா்கள் பலத்துடன் இருக்கக் கூடாது என்று கேள்வி எழுப்பியது. மேலும், மத்திய அரசால் உறுப்பினா்களை நியமிப்பது தொடா்புடைய என்டிஎம்சி சட்டத்தின் பிரிவு 4-இன் விளக்கம் குறித்து பாா்க்க வேண்டியுள்ளதாகவும் நீதிமன்றம் தெரிவித்தது. என்டிஎம்சி தரப்பில் ஆஜரான வழக்குரைஞா் அனில் குரோவா், கவுன்சில் சிறப்பாக செயல்படுவதாகக் கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments