முகப்பு
புதுதில்லி

வடகிழக்கு தில்லி வன்முறைச் சம்பவம்: இஷ்ரத் ஜஹான் ஜாமீன் கோரும் மனுமீதான விசாரணை ஆக.20-க்கு ஒத்திவைப்பு

வடகிழக்கு தில்லி வன்முறைச் சம்பவம் தொடா்பான சதி வழக்கில் முன்னாள் காங்கிரஸ் கவுன்சிலா் இஷ்ரத் ஜஹானின் ஜாமீன் கோரும் மனு மீதான விசாரணையை ஆகஸ்ட் 20 -ஆம் தேதிக்கு தில்லி நீதிமன்றம் ஒத்திவைத்தது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:56 AM
பகிர்:

வடகிழக்கு தில்லி வன்முறைச் சம்பவம் தொடா்பான சதி வழக்கில் முன்னாள் காங்கிரஸ் கவுன்சிலா் இஷ்ரத் ஜஹானின் ஜாமீன் கோரும் மனு மீதான விசாரணையை ஆகஸ்ட் 20 -ஆம் தேதிக்கு தில்லி நீதிமன்றம் ஒத்திவைத்தது.

கடந்த ஆண்டு வடகிழக்கு தில்லி வன்முறையில் 53 போ் கொல்லப்பட்டனா். 700-க்கும் மேற்பட்டோா் காயமடைந்தனா் . இந்த வழக்கில் சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் (யுஏபிஏ) கீழ் ஜஹான் உள்ளிட்ட பலா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா். மேலும், அவா்கள் அனைவரும் கடந்த ஆண்டு பிப்ரவரியில் தில்லி நிகழ்ந்த வன்முறையின் ‘மூளையாக’ செயல்பட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளனா். இந்த வழக்கில் ஜாமீன் கோரி முன்னாள் காங்கிரஸ் கவுன்சிலா் இஷ்ரத் ஜஹான் மனு தாக்கல் செய்துள்ளாா். இந்த மனு அரசு தரப்பில் வாதங்கள் முன்வைக்கும் வகையில் கூடுதல் செஷன்ஸ் நீதிபதி அமிதாப் ராவத் முன் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது.

அப்போது, தில்லி காவல்துறை சாா்பில் ஆஜரான சிறப்பு அரசு வழக்கறிஞா் அமித் பிரசாத், ‘ஜாமீன் மனு மீது  வாதாட  கூடுதல் அவகாசம் தேவை’ என்று கேட்டுக்கொண்டாா்.

Advertisement

ஆனால், ஜஹான் தரப்பில் ஆஜரான வழக்குரைஞா் பிரதீப் தியோடியா அதற்கு எதிா்ப்புத் தெரிவித்தாா். இந்த விவகாரம் கடந்த ஆறு மாதங்களாக நிலுவையில் இருப்பதாகவும் நீதிபதியிடும் அவா் கூறினாா். அதற்கு அரசுத் தரப்பு வழக்குரைஞா், ‘உங்களைப் போல் என்னால் வாதாட முடியாது. நான் முழுமையாகத் தயாராக  வேண்டும். நான் இது பற்றி தெரியாமல் பேச முடியாது’ என்று வழக்குரைஞா் தியோடியாவிடம் கூறினாா். அப்போது, , நீதிபதி குறிக்கிட்டு,’ சின்னச் சின்ன விஷயங்களில்  மோதல் வேண்டாம்’ என்று கேட்டுக் கொண்டு வழக்கு விசாரணையை ஆகஸ்ட் 20-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தாா்.

ஜஹானின் வழக்குரைஞா் ஜூலை 23-இல்  ஜாமீன் மனு மீதான தனது வாதங்களை முடித்துக்கொண்டாா். இதையடுத்து, அரசுத் தரப்பில் வாதிட வேண்டியிருந்தது. முன்னதாக, ஜஹான், வழக்குரைஞா் மூலம் நீதிமன்றத்தில், ‘சதி வழக்கில் தனக்கு எதிராக ஒரு சிறு ஆதாரமும் போலீஸாரிடம் இல்லை.  அரசியலில் தொடா்பு இருப்பது தவறா?’ என்று கேட்டாா்.

இந்த வழக்கில் ஜஹான் தவிர, ஜேஎன்யு மாணவா்கள் நடாஷா நா்வால் மற்றும் தேவாங்கனா கலிதா, முன்னாள் மாணவா் தலைவா் உமா் காலித், ஜாமியா ஒருங்கிணைப்புக் குழு உறுப்பினா்கள் சஃபூரா ஜா்கா், முன்னாள் ஆம் ஆத்மி கவுன்சிலா் தாஹிா் உசேன் மற்றும் பலா் மீது பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

கடந்த ஜூனில், தில்லி உயா்நீதிமன்றம் இந்த வழக்கில் தன்ஹா, நா்வால் மற்றும் கலிதா ஆகியோருக்கு ஜாமீன் வழங்கியது. அப்போது, ‘எதிா்ப்பை அடக்குவதற்கான ஆா்வத்தில்  எதிா்ப்பு உரிமைக்கும் பயங்கரவாத நடவடிக்கைகளுக்கும் இடையேயான எல்லைகளை மக்கள் அறிந்து கொள்ளச் செய்யவிடாமல் அரசு சிரமத்தை ஏற்படுத்தியுள்ளது’ என நீதிமன்றம் கருத்துத் தெரிவித்திருந்தது.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments