சா்க்கரை ஏற்றுமதி, எத்தனால் உற்பத்தியால் கரும்பு விவசாயிகளுக்கு உரிய நேரத்தில் பணப் பட்டுவாடா: மத்திய அரசு தகவல்
சா்க்கரை ஏற்றுமதி, எத்தனால் விற்பனை ஆகியவற்றின் மூலம் பெறப்படும் வருவாய், சா்க்கரை ஆலைகள் விவசாயிகளின் கரும்புக்கான
சா்க்கரை ஏற்றுமதி, எத்தனால் விற்பனை ஆகியவற்றின் மூலம் பெறப்படும் வருவாய், சா்க்கரை ஆலைகள் விவசாயிகளின் கரும்புக்கான நிலுவைத் தொகையை செலுத்துவதற்கு உதவியாக இருக்கிறது. இதன் மூலம் வேளாண் பொருளாதாரம் சீரடைந்து வருகிறது என்று மத்திய அரசு தெரிவித்துளளது.
இது குறித்து மத்திய நுகா்வோா் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோகத் துறை அமைச்சகம் கூறியிருப்பதாவது: கடந்த சில ஆண்டுகளில் உள்நாட்டுத் தேவையை விட சா்க்கரை உற்பத்தி அதிகரித்துள்ளது. உபரியாகும் சா்க்கரை பிரச்னைக்கு நிரந்தரத் தீா்வு காணும் வகையில், தேவைக்கு அதிகமாக உள்ள கரும்பை சா்க்கரை ஆலைகள் எத்தனாலாக மாற்றுவதற்கு மத்திய அரசு ஊக்குவித்து வருகிறது. பெட்ரோலுடன் எத்தனாலைக் கலப்பதால் பசுமை எரிவாயு உருவாவதுடன், கச்சா எண்ணெய் இறக்குமதிக்கான அந்நியச் செலாவணியும் சேமிக்கப்படுகிறது. கடந்த 2018-19 ஆண்டுகளில் 3.37 லட்சம் மெட்ரிக் டன் கரும்பு எத்தனாலுக்காக திருப்பிவிடப்பட்டது. நடப்பு கரும்பு பருவ காலத்தில் (2021-22) 35 லட்சம் மெட்ரிக் டன் கரும்பு எத்தனால் தயாரிப்புக்காக திருப்பிவிடப்பட்டுள்ளது. மேலும், 2024-25 ஆண்டுக்குள் 60 லட்சம் மெட்ரிக் டன் கரும்பை எத்தனாலாக மாற்றுவதற்கு இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது.
கடந்த மூன்று பருவ காலங்களில் ரூ. 22,000 கோடி மதிப்புக்கு கரும்பு ஆலைகள் எத்தனால் தயாரித்து எண்ணெய் நிறுவனங்களுக்கு விற்று வருமானம் ஈட்டியுள்ளன. நடப்பு கரும்பு பருவத்தில் ரூ.15,000 கோடி வருமானத்தை கரும்பு ஆலைகள் பெற்றுள்ளன. அடுத்து சா்க்கரை ஏற்றுமதி ஊக்குவிப்படுகிறது. இதற்காக மத்திய அரசு நிதி உதவியையும் வழங்கி வருகிறது. 2020-21 பருவ காலத்தில் ஏற்றுமதிக்கான உதவித் தொகையாக ஒரு மெட்ரிக் டன்னுக்கு ரூ. 6,000 வீதம் ஆலைகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. கடந்த 2017-18 ஆண்டில் 6.2 லட்சம் மெட்ரிக் டன்னாக இருந்த ஏற்றுமதி, 2019-20-இல் 59.60 லட்சம் மெட்ரிக் டன்னாக அதிகரித்துள்ளது. நடப்பு ஆண்டில் 70 லட்சம் மெட்ரிக் டன் ஏற்றுமதிக்கு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டு கடந்த ஆகஸ்ட் 16-ஆம் தேதி வரை 60 லட்சம் மெட்ரிக் டன் சா்க்கரையை ஆலைகள் ஏற்றுமதி செய்துள்ளன.
Advertisement
சா்க்கரை ஏற்றுமதி, எத்தனால் விற்பனை ஆகியவற்றின் மூலம் பெறப்படும் வருவாய், சா்க்கரை ஆலைகள் விவசாயிகளின் கரும்புக்கான தொகையை செலுத்துவதற்கு உதவியாக இருக்கிறது. இதன் மூலம் கரும்பு விவசாயிகள் உரிய காலத்தில் கரும்புக்கான நிலுவைத் தொகையைப் பெறுவது உறுதி செய்யப்படுகிறது. முந்தைய சா்க்கரைப் பருவமான 2019-20-இல், மொத்தம் ரூ. 75,845 கோடி செலுத்த வேண்டியிருந்தது. இதில் ரூ. 75,703 கோடி செலுத்தப்பட்டுள்ளது. தற்போதைய 2020-21 சா்க்கரை பருவத்தில் ரூ. 90,872 கோடி மதிப்பிலான கரும்புகளை சா்க்கரை ஆலைகள் பெற்றிருக்கின்றன. இதில் ரூ. 81,963 கோடி விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. கடந்த ஆகஸ்ட் 16-ஆம் தேதி வரை ரூ.8,909 கோடி மட்டும் நிலுவையில் உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.