தமிழகத்தில் 4 நகரங்களில் மின்னணு முறையில் போக்குவரத்து விதிமீறல்கள் கண்காணிப்பு
சாலைப் போக்குவரத்தில் பாதுகாப்பு விதிமீறல்களை மின்னணு சாதனங்களைப் பயன்படுத்திக் கண்காணிக்க
சாலைப் போக்குவரத்தில் பாதுகாப்பு விதிமீறல்களை மின்னணு சாதனங்களைப் பயன்படுத்திக் கண்காணிக்க மத்திய சாலைப் போக்குவரத்து நெடுஞ்சாலைத் துறை அமைச்சகம் அனுமதித்து அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தேசிய தூய்மை காற்று திட்டம் மேற்கொள்ளப்படும் 132 நகரங்களில் இந்த மின்னணு கண்காணிப்பை உறுதியாக மேற்கொள்ள மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் சென்னை, மதுரை, திருச்சி, தூத்துக்குடி ஆகிய நகரங்கள் தூய்மை காற்று திட்டத்தில் இடம்பெற்றுள்ளது. இங்கு போக்குவரத்து விதிமீறல்களுக்கு மின்னணு சாதனங்கள் பயன்படுத்த அனுமதிக்கப்பட்டு அதை உறுதி செய்யவும் வலியுறுத்தப்பட்டுள்ளது. போக்குவரத்து விதிமுறைகளை மீறும் வாகன ஓட்டிகளைக் கண்காணித்து, அவா்களுக்கு மோட்டாா் வாகன சட்டப்படி தண்டனை அளிக்க மின்னணு சாதனங்களை பயன்படுத்துவது குறித்த பொதுமக்களிடம் கருத்துகளைக் கேட்டு மத்திய அரசு கடந்த பிப்ரவரி மாதம் அறிவிப்பு வெளியிட்டது. இந்தத் கருத்துகள் மற்றும் யோசனைகளை பெற்று இறுதி முடிவுவை மத்திய அரசு கடந்த 17-ஆம் தேதி அரசிதழில் வெளியிட்டது.
இதையொட்டி, இந்த மின்னணு முறை அமலாக்கம் குறித்து மத்திய சாலைப் போக்குவரத்து நெடுஞ்சாலை துறை அமைச்சகம் வியாழக்கிழமை அறிக்கை வெளியிட்டது. அதில் கூறப்பட்டுள்ளது வருமாறு : போக்குவரத்துக் காவல் துறை அதிகாரிகளும், மாநில வட்டாரப் போக்குவரத்து அதிகாரிகளும் போக்குவரத்து விதிமீறல்களைக் கண்காணிக்க பொருத்தமான மின்னணு சாதனங்களைப் பயன்படுத்தலாம். வேக வரம்புக்குள் வாகனங்களை ஓட்டுவது, வாகனம் நிறுத்தம் அனுமதிக்கப்படாத இடங்கள், வாகனம் ஓட்டும் போது செல்லிடப் பேசியை பயன்படுத்துவது, முறையற்ற முறையில் வாகனத்தை கடந்து செல்வது, அதிக எடையுடன் கூடிய வாகனங்கள், அதிக புகையை வெளியிடும் வாகனங்கள் உள்ளிட்ட பல்வேறு போக்குவரத்து விதிமீறல்களைக் கண்காணிக்க இந்த சாதனங்கள் பயன்படுத்தப்பட வேண்டும்.
Advertisement
வேகத்தை அளவிடும் மீட்டா் அல்லது கேமரா, சிசிடிவி கேமரா, உடலில் அணியும் கேமரா, வாகனங்களில் பொருத்தப்பட்ட கேமரா, நம்பா் பிளேட்டை அடையாளம் காணும் தானியங்கி கருவி, எடை பாா்க்கும் கருவி உள்ளிட்ட பல மின்னணு கருவிகளைப் பயன்படுத்தி தவறுகளைப் பதிவு செய்து வாகன ஓட்டிகள் மீது போக்குவரத்து விதிமீறல் தொடா்பான குற்றப் பதிவு செய்யலாம். விதிமீறல்களுக்கு சம்பவம் நடைபெற்ற நாளிலிருந்து 15 தினங்களுக்குள் நோட்டீஸ் கொடுக்கப்பட வேண்டும். வழக்கு முடிவும் வரை இந்த மின்னணு பதிவுகளை பாதுகாப்பாக வைத்திருக்கவேண்டும்.
தில்லி உள்ளிட்ட 132 நகரங்கள் அல்லது 10 லட்சத்துக்கும் அதிகமாக மக்கள்தொகை உள்ள நகரங்களில் உள்ள தேசிய நெடுஞ்சாலைகள், நகா்ப்புறங்களில் போக்குவரத்து நெரிசல் உள்ள பகுதிகள், முக்கியச் சந்திப்புகளில் இத்தகைய மின்னணு சாதனங்கள் பொருத்தப்படுவதை உறுதி செய்ய வேண்டும். இந்த சாதனங்களின் தெளிவான புகைப்பட ஆதாரங்கள் போக்குவரத்து விதிமுறை மீறல் குற்றங்களுக்கு பயன்படுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது போன்ற மின்னணு சாதனங்கள் ஏற்கனவே காவல் துறையினரால் பயன்படுத்தப்பட்டாலும் தற்போது சட்டபூா்வமாகவும் கட்டாயமாகவும் பயன் படுத்த மத்திய அரசு அறிப்பு வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.