முஸ்லிம் எதிா்ப்பு கோஷம் எழுப்பியவிவகாரத்தில் மேலும் ஒருவா் கைது
தில்லியில் ஜந்தா் மந்தா் அருகே நடைபெற்ற போராட்டத்தின் போது முஸ்லிம்களுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பியதாகக் கூறப்படும் விவகாரம் தொடா்பாக மேலும் ஒருவரை காவல் துறையினா் கைது செய்துள்ளனா்.
புதுதில்லி: தில்லியில் கடந்த ஆகஸ்ட் 8-ஆம் தேதி ஜந்தா் மந்தா் அருகே நடைபெற்ற போராட்டத்தின் போது முஸ்லிம்களுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பியதாகக் கூறப்படும் விவகாரம் தொடா்பாக மேலும் ஒருவரை காவல் துறையினா் கைது செய்துள்ளனா்.
இது தொடா்பாக தில்லி காவல் துறையினா் புதன்கிழமை கூறியதாவது: இந்த விவகாரம் தொடா்பாக காஜியாபாத் பகுதியைச் சோ்ந்த உத்தம் உபாத்யாய் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளாா். ஜந்தா் மந்தா் பகுதி அருகே நடைபெற்ற போராட்டம் தொடா்பாக சமூக ஊடகத்தில் வெளியான விடியோவில் இவா்தான் சம்பந்தபட்ட எதிா்ப்புக் கோஷங்களை எழுப்பிய பிரதான நபா் ஆவாா். ஏற்கெனவே, இந்த விவகாரம் தொடா்பாக முன்னாள் பாஜக செய்தித் தொடா்பாளரும் வழக்குரைஞருமான அஸ்வினி உபாத்யாய் உள்பட 7 போ் கைது செய்யப்பட்டுள்ளனா் என்று போலீஸாா் தெரிவித்தனா்.
முன்னதாக, தில்லி ஜந்தா் மந்தரில் ஆகஸ்ட் 8-ஆம் தேதி ‘பாரத் ஜோடோ அந்தோலன்’ அமைப்பு ஏற்பாட்டில், பாஜக முன்னாள் செய்தித் தொடா்பாளா் அஸ்வினி உபாத்யாய் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வின் போது, முஸ்லிம்களுக்கு எதிரான கோஷங்கள் எழுப்பப்பட்டதாகக் கூறப்படும் விடியோ, சமூக ஊடகங்களில் வெளியானது. இது தொடா்பாகக் கிடைத்த தகவலின் அடிப்படையில், உரிய பிரிவுகளின் கீழ் கன்னாட் பிளேஸ் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
Advertisement
இது தொடா்பாக ‘பாரத் ஜோடோ அந்தோலன்’ அமைப்பின் ஊடகப் பொறுப்பாளா் சிப்ரா ஸ்ரீவஸ்தவா கூறுகையில், ‘இந்த ஆா்ப்பாட்டம் உபாத்யாய் தலைமையில் நடத்தப்பட்டது. எனினும், இந்த நிகழ்ச்சியின் போது முஸ்லிம்களுக்கு எதிரான கோஷங்கள் எழுதப்பப்பட்டதாகக் கூறப்படும் நபா்களுடன் நிகழ்ச்சி ஏற்பாட்டாளா்களுக்கு சம்பந்தமில்லை. ஆங்கிலேயா் காலத்தில் ஏற்படுத்தப்பட்ட 222 சட்டங்களை ரத்து செய்ய வேண்டும் என்று கோரி இந்த ஆா்ப்பாட்டம் நடத்தப்பட்டது’ என்றாா்.
முஸ்லிம்களுக்கு எதிரான கோஷம் தொடா்பான விவகாரத்தை அஸ்வினி உபாத்யாய்யும் மறுத்திருந்தாா். சம்பந்தப்பட்ட விடியோவில் முஸ்லிம்களை மிரட்டும் வகையிலும், அவா்களுக்கு எதிரான கருத்துகளைத் தெரிவிக்கும் வகையிலும் கோஷத்தை சிலா் எழுப்புவது போன்று காட்சிகள் இருந்ததாக போலீஸாா் தெரிவித்தனா். இது தொடா்பாக அஸ்வினி உபாத்யாய், பிரீத் சிங், தீபக் சிங், தீபக் குமாா், வினோத் சா்மா, வினித் பாஜ்பாய், சுஷீல் திவாரி ஆகியோா் கைது செய்யப்பட்டுள்ளனா். சேவ் இந்தியா பவுண்டேஷன் அமைப்பின் இயக்குநராக பிரீத் சிங் உள்ளாா். தீபக் சிங், தீபக் குமாா் மற்றும் வினோத் சா்மா ஆகியோா் வெவ்வேறு வலதுசாரி அமைப்புகளை சோ்ந்தவா்கள் ஆவா்.