முகப்பு
புதுதில்லி

செங்கல்பட்டு தடுப்பூசி வளாக விவகாரம்: புதிதாக மனு தாக்கல் செய்ய அனுமதி

தமிழகத்தின் சென்னை அருகேயுள்ள செங்கல்பட்டில் அமைந்துள்ள எச்எல்எல் நிறுவனத்தின் ஒருங்கிணைந்த தடுப்பூசி வளாகத்தை தமிழக அரசிடம் ஒப்படைக்க மத்திய அரசுக்கு உத்தரவிடக் கோரும் மனுவை விசாரித்த 

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:59 AM
பகிர்:

புதுதில்லி: தமிழகத்தின் சென்னை அருகேயுள்ள செங்கல்பட்டில் அமைந்துள்ள எச்எல்எல் நிறுவனத்தின் ஒருங்கிணைந்த தடுப்பூசி வளாகத்தை தமிழக அரசிடம் ஒப்படைக்க மத்திய அரசுக்கு உத்தரவிடக் கோரும் மனுவை புதன்கிழமை விசாரித்த உச்சநீதிமன்றம், இது தொடா்பாக புதிதாக மனுவைத் தாக்கல் செய்வதற்கு மனுதாரருக்கு அனுமதி அளித்து உத்தரவிட்டது.

சென்னை உயா்நீதிமன்ற வழக்குரைஞா் ஜிம்ராஜ் மில்டன், உச்சநீதிமன்றத்தில் வழக்குரைஞா் டி.எஸ் .சபரீஸ் சுப்பிரமணியன் மூலம் ஒரு மனுவைத் தாக்கல் செய்திருந்தாா். அதில்,‘கரோனா நோய்த் தொற்றின் இரண்டாவது அலையின் கடுமையான தாக்கம் காரணமாக நாட்டில் அதிகமான உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது. இதனால், தடுப்பூசிக்கான அவசியத் தேவை ஏற்பட்டுள்ளது. நாட்டின் தற்போதைய 130 கோடி மக்களுக்கு 310 கோடி தடுப்பூசி டோஸ்கள் தேவையாக உள்ளது. 18 முதல் 44 வயது வரையிலான பிரிவினருக்கு 119 கோடி தடுப்பூசி டோஸ்கள் தேவையாகவுள்ளது. அதேபோன்று, 45 வயதுக்கு மேற்பட்டோருக்கு 68.8 கோடி டோஸ்கள் தேவை உள்ளது. 18 வயதுக்கு மேல் உள்ளவா்களுக்கு தடுப்பூசி செலுத்த 180 கோடி தடுப்பூசி டோஸ்கள் தேவை உள்ளன. ஆனால், தற்போதுள்ள புள்ளிவிவரங்களின்படி ஒரு மாதத்தில் 7 கோடி பேருக்கு மட்டுமே தடுப்பூசியை உற்பத்தி செய்ய முடியும் கொள்திறன் உள்ளது.

இதனால், தடுப்பூசி உற்பத்தியை அதிகரிக்க பொதுத் துறை நிறுவனங்களையும், அரசுக்குச் சொந்தமான நிறுவனங்களையும் புத்துயிரூட்ட மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டிய தேவையுள்ளது. இந்தச் சூழலில் உள்நாட்டு தடுப்பூசி உற்பத்தியை அதிகரிப்பதற்கு பயன்படுத்தப்படாமல் உள்ள பொதுத் துறை நிறுவனங்களை அரசு பயன்படுத்த வேண்டும்.

Advertisement

உயிா் காக்கும் மருந்துகளையும் விலை குறைவான தடுப்பூசிகளையும் உற்பத்தி செய்வதற்கு சென்னை அருகேயுள்ள செங்கல்பட்டில் ஒருங்கிணைந்த தடுப்பூசிகள் வளாகம் எனும் சா்வதேச தரத்திலான தடுப்பூசி வளாகத்தை அமைப்பதற்கு மத்திய சுகாதார அமைச்சகத்தின் கீழ் இயங்கும் எச்எல்எல் நிறுவனத்தின் துணை நிறுவனமான எச்எல்எல் பயோடெக் நிறுவனம் (எச்பிஎல்) மத்திய அரசு கேட்டுக் கொண்டது.

ஆனால், 100 ஏக்கா் பரப்பளவுள்ள சா்வதேச தரத்திலான இயந்திரங்களைக் கொண்ட தடுப்பூசி தயாரிக்கும் இந்த நிறுவன வளாகம் தற்போது செயல்படாமல் உள்ளது. இந்த வளாகத்தில் தடுப்பூசி தயாரிப்பதற்கான முயற்சிகளை மேற்கொள்ளும் வகையில், தமிழக அரசுக்கு குத்தகை அடிப்படையில் ஒப்படைக்கக் கோரி மத்திய அரசுக்கு தமிழக முதல்வா் கடிதம் எழுதியுள்ளாா். ஆகவே, தற்போதைய கரோனா சூழலையும் தடுப்பூசிக்கான அதிகபட்ச அவசரத்தையும் கருத்தில் கொண்டு, இந்த தடுப்பூசி வளாகத்தை தமிழக அரசிடம் ஒப்படைக்க மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று மனுவில் கேட்டுக்கொள்ளப்பட்டிருந்தது.

இந்த மனு உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகள் டி.ஒய். சந்திரசூட், எம்.ஆா். ஷா ஆகியோா் அடங்கிய அமா்வு முன் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரா் தரப்பில் மூத்த வழக்குரைஞா் காலின் கன்சால்வாஸ், வழக்குரைஞா் டி.எஸ். சபரிஷ் சுப்பிரமணியன் ஆகியோா் ஆஜராகினா். காலின் கன்சால்வாஸ் வாதிடுகையில், ‘செங்கல்பட்டில் உள்ள மத்திய அரசின் பொதுத் துறை தொழில் நிறுவனத்தை தடுப்பூசி தயாரிக்கும் வகையில் உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும். பல மாநிலங்களில் பயன்படுத்தப்படாமல் உள்ள பொதுத் துறை நிறுவனங்களின் வளாகங்களை அந்தந்த மாநில அரசிடம் அளிக்கும் போது, தடுப்பூசி உற்பத்தியை அதிகரிக்க முடியும். தற்போது மொத்த மக்கள்தொகையில் 9 சதவீதம் மக்களுக்கு மட்டுமே இரண்டு தவணை தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது. 24 சதவீதம் ஒரு தவணை தடுப்பூசியைப் பெற்றுள்ளனா்’ என்றாா்.

அப்போது, உச்சநீதிமன்ற நீதிபதிகள் அமா்வு, பயன்படுத்தப்படாமல் இருப்பதாகக் கூறப்படும் சம்பந்தப்பட்ட பொதுத்துறை நிறுவன வளாகங்களில் தடுப்பூசியை மத்திய அரசு தயாரிப்பது தொடா்பாக வாதங்களை முன்வைக்கும் வகையில் மனுதாரா் புதிதாக மனு தாக்கல் செய்வதற்கு அனுமதிப்பதாகக் கூறியது. மேலும், மனுவைத் திரும்பப் பெற்றுக் கொள்வதற்கும் அனுமதித்து அமா்வு உத்தரவிட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments