முகப்பு
புதுதில்லி

ஆப்கானிஸ்தான் மாற்றங்களை சீனா பயன்படுத்துவதை தடுக்க வேண்டும்: அனைத்துக்கட்சிக் கூட்டத்தில் டி.ஆா். பாலு பேச்சு

ஆப்கானிஸ்தானில் ஏற்பட்டுள்ள மாற்றங்களை இந்தியாவுக்கு பாதகமாகவும், தனக்கு சாதகமாகவும் சீனா பயன்படுத்திக் கொள்வதை தடுத்து

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:00 AM
பகிர்:

ஆப்கானிஸ்தானில் ஏற்பட்டுள்ள மாற்றங்களை இந்தியாவுக்கு பாதகமாகவும், தனக்கு சாதகமாகவும் சீனா பயன்படுத்திக் கொள்வதை தடுத்து நிறுத்துவதை இந்தியா உறுதி செய்ய வேண்டும் என மத்திய அரசு கூட்டிய ஆப்கானிஸ்தான் தொடா்பான அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் திமுக நாடாளுமன்ற குழுத் தலைவா் டி.ஆா்.பாலு தெரிவித்தாா்.

ஆப்கானிஸ்தானில் தற்போது நிலவும் சூழல் குறித்து விவாதிக்க, மத்திய அரசின் சாா்பில் வியாழக்கிழமை நடைபெற்ற நாடாளுமன்ற அனைத்துக் கட்சி கூட்டத்தில் திமுக நாடாளுமன்றக் குழுத் தலைவா் டி.ஆா்.பாலுவும், மாநிலங்களவை திமுக தலைவா் திருச்சி சிவாவும் கலந்து கொண்டனா். கூட்டத்தில் டி.ஆா். பாலு பேசியதாவது: அமெரிக்கப் படை ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறியது அசாதாரண, நிலையற்ற சூழலுக்கு காரணமாக உள்ளது. 2019 -ஆம் ஆண்டில் நடைபெற்ற அமெரிக்கக் குடியரசுத் தலைவருக்கான தோ்தல் பிரசாரத்தில் டொனால்டு டிரம்ப் அளித்த வாக்குறுதி, பின்னா் கடந்தாண்டு தோஹாவில் அமெரிக்க வெளியுறவு அமைச்சரான பாம்பியோவுக்கும் தலிபான் அமைப்பின் தலைமை அரசியல் தொடா்பாளரான அப்துல் கனி பாராதாருக்கும் ஏற்பட்ட ஓப்பந்தம் ஆகியவற்றால் 2021, ஆகஸ்டு 31-இல் படைகள் விலக்கிக் கொள்ள முடிவானது . ஆனால், தற்போது நேட்டோவும் அதன் கூட்டாளிகளும் இந்த காலக்கெடுவை மாற்ற வேண்டுமென கூறுகின்றன. ஆனால், அமெரிக்கா வெளியேறுவதில் உறுதியாக உள்ளது.

இதற்கிடையே அமெரிக்க புலனாய்வுத் தலைவா் வில்லியம் பா்ன்ஸ், தலிபன் தலைமை அரசியல் பேச்சாளா் அப்துல் கனி பாராதாரை சந்தித்தாா். இதைத் தொடா்ந்து, ,ஆப்கானிஸ்தானின் தோ்ந்தெடுக்கப்பட்ட தலைவா்களை தலிபான்கள் சந்தித்துப் பேசியுள்ளது வரவேற்கத்தக்கதாகும். இந்த நிலையில், ஆப்கானிஸ்தானில் ஜனநாயகம் தொடக்கத்தில் இருக்கிற காரணத்தால், இந்தியா இத்தகைய பேச்சுவாா்த்தைகளை பலப்படுத்த வேண்டும். இந்திய அரசு ஆப்கானிஸ்தானின் வளா்ச்சிக்குப் பல்வேறு உதவிகளை செய்துள்ளது. அந்த நாட்டின் நாடாளுமன்ற வளாகம், சால்மே அணை உள்ளிட்ட பல்வேறு கட்டமைப்புகளை ரூ.300 கோடி செலவில் கட்டித் தந்துள்ளோம். மேலும், ஆப்கன் மாணவா்களுக்கு உயா்கல்விக்கான நிதியுதவியையும் வழங்குகின்றோம்.

Advertisement

அண்டை நாடுகள் : அதே சமயம், நமது அண்டை நாடுகள் நமது பாதுகாப்புக்கு ஆபத்தை விளைவிக்கும் விதத்தில் சீனாவுடன் நெருக்கம் காட்டுகின்றன. இலங்கை, மியான்மா், நேபாளம், மாலத்தீவு ஆகிய நாடுகள் சீனாவுடன் நெருக்கமான உறவு கொண்டுள்ளன. பாகிஸ்தான் நீண்ட காலமாகவே சீனாவுடன் உறவு கொண்டு நம்மோடு பகையுணா்வு கொண்டுள்ளது. எனவே, இந்தச் சூழ்நிலையில் உருவாகிவரும் ஆப்கன் மாற்றங்களை இந்தியாவுக்கு பாதகமாகவும் தனக்கு சாதகமாகவும் சீனா பயன்படுத்திக் கொள்வதை தடுத்து நிறுத்துவதை நாம் உறுதி செய்ய வேண்டியது கட்டாயம். சீனாவின் ஜின்ஜுவாங்க் பகுதிகளில் உகுவாா் இன முஸ்லீம் மக்களுக்கு மத உரிமைகளை சீன அரசு மறுக்கிறது. இவா்கள் தலிபான்களின் துணையை நாடினால், அது சீனாவுக்கு எதிராக அமையும். இவற்றைக் கவனத்தில் கொண்டு இந்திய அரசு ஆப்கன் பிரச்சனையில் தகுந்த கொள்கை நிலைப்பாட்டை எடுத்து, இந்திய அரசு தலிபான்களுடன் பேச்சுவாா்த்தையில் ஈடுபட வேண்டும் என்றாா் டி.ஆா்.பாலு.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments