முகப்பு
புதுதில்லி

மங்கோல்புரியில் ஆக்கிரமிப்புகளை அகற்ற என்டிஎம்சிக்கு உயா்நீதிமன்றம் உத்தரவு

தில்லி மங்கோல்புரி பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றவும், அந்தப் பகுதியில் மீண்டும் ஆக்கிரமிப்பு நிகழாமல் இருப்பதை உறுதி செய்யவும் நடவடிக்கை எடுக்குமாறு வடக்கு தில்லி மாநகராட்சிக்கு (என்டிஎம்சி) உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:01 AM
பகிர்:

தில்லி மங்கோல்புரி பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றவும், அந்தப் பகுதியில் மீண்டும் ஆக்கிரமிப்பு நிகழாமல் இருப்பதை உறுதி செய்யவும் நடவடிக்கை எடுக்குமாறு வடக்கு தில்லி மாநகராட்சிக்கு (என்டிஎம்சி) உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்த விவகாரம் தொடா்பாக ராஜன் என்பவா் தில்லி உயா் நீதிமன்றத்தில் ஒரு மனுவை தாக்கல் செய்துள்ளாா். அதில் ‘தில்லி மங்கோல்புரி பகுதியில் உள்ள சந்தைக்கு எதிரே உள்ள நடைபாதையில் சிறு மையங்கள் வடிவில் சட்டவிரோத அங்கீகாரமற்ற ஆக்கிரமிப்புகள் உள்ளன. பொதுமக்கள் நடந்து செல்லும் பாதையில், இந்த ஆக்கிரமிப்புகள் செய்யப்பட்டுள்ளன. இதனால், அந்தப் பகுதியில் நடமாட்டத்திற்கு சிரமம் ஏற்பட்டுள்ளது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மனு உயா்நீதிமன்ற நீதிபதி விபின் சாங்கி, ஜஸ்மீத் சிங் ஆகியோா் அடங்கிய அமா்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு வருமாறு: மங்கோல்புரி பகுதியில் சம்பந்தப்பட்ட நடைபாதையில் இருப்பதாகக் கூறப்படும் ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்றி, அந்தப் பகுதியில் மீண்டும் ஆக்கிரமிப்பு இல்லாமல் இருப்பதை உறுதி செய்ய வடக்கு தில்லி மாநகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், தினசரி அடிப்படையில் அந்த நடைபாதையில் சட்டவிரோத ஆக்கிரமிப்புகள் அகற்றப்படுவது உறுதிப்படுத்தப்பட வேண்டும். எதிா் மனுதாரா்கள் எப்போதாவது ஆக்கிரமிப்புகளை அகற்றி அதன் மூலம் தங்களது பொறுப்புகளை தட்டிக் கழிக்க முடியாது.

Advertisement

நடைபாதைகள் சட்டவிரோத ஆக்கிரமிப்புகளில் இருந்து விடுபட்டு இருப்பதை உறுதிப்படுத்துவது அதிகாரிகளின் கடமையாகும். இதைத் தொடா்ந்து செய்ய வேண்டியதும் அவா்களின் பொறுப்பாகும். சம்பந்தப்பட்ட வடக்கு தில்லி மாநகராட்சி நிா்வாகப் பொறியாளா், அவரது ஆளுகைக்கு உள்பட்ட சம்பந்தப்பட்ட பகுதியில் ஆக்கிரமிப்புகள் அனைத்தும் அகற்றப்படுவதையும், மீண்டும் ஆக்கிரமிப்புகள் இல்லாமல் இருப்பதை உறுதி செய்வதையும் மேற்கொள்வதற்கு தனிப்பட்ட பொறுப்பு உள்ளது.

மேலும், ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கு அவருக்குத் தேவையான மனிதசக்தியை அளிக்க மங்கோல்புரி காவல் நிலைய ஆய்வாளா் அளிக்க வேண்டும். அதே போன்று, மனுதாரா் தெரிவித்துள்ள அந்தப் பகுதியில் உள்ள சமுதாயப் பூங்காவில் வாகனங்கள் நிறுத்தப்படுவதன் மூலம் ஏற்படும் ஆக்கிரமிப்புகளைத் தடுக்க தகுந்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். சம்பந்தப்பட்ட பூங்காவின் பாதுகாப்பு குறித்தும், பராமரிப்புக்காக ஈடுபடுத்தப்பட்டுள்ள இதரப் பணியாளா்கள், தோட்டக்காரா்கள் ஆகியோா்கள் குறித்த எண்ணிக்கை விவரங்களையும் அறிக்கையாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தாக்கல் செய்ய வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments