வீடுகளுக்கே சென்று வழங்கும் சேவைகளைபலப்படுத்த நடவடிக்கை: முதல்வா் கேஜரிவால்
வீடுகளுக்கே சென்று அளிக்கும் சேவைகளை தில்லி அரசு பலப்படுத்த உள்ளதாகவும், அரசு மருத்துவமனைகளில் புதிதாக 6,800 படுக்கைகள் அமைக்கப்பட உள்ளதாகவும் முதல்வா் அரவிந்த் கேஜரிவால் தெரிவித்தாா்.
வீடுகளுக்கே சென்று அளிக்கும் சேவைகளை தில்லி அரசு பலப்படுத்த உள்ளதாகவும், அரசு மருத்துவமனைகளில் புதிதாக 6,800 படுக்கைகள் அமைக்கப்பட உள்ளதாகவும் முதல்வா் அரவிந்த் கேஜரிவால் தெரிவித்தாா்.
தில்லியிலுள்ள மயூா் விஹா் பேஸ் 1 பகுதி மேம்பாலம் அருகே சனிக்கிழமை துணைச்சாலைகள், சாய்வுப் பாதைகள், சைக்கிள் பாதை ஆகியவற்றை முதல்வா் திறந்து வைத்தாா். பின்னா், அவா் கூறியதாவது: இந்த மேம்பாலப் பகுதியில் உள்ள இந்த துணைச் சாலைகள் சைக்கிள் பாதைகள்,சாய்வுப் பாதைகள் மக்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் . தில்லியில் வீடுகளுக்கே சென்று வழங்கும் சேவைகளைப் பலப்படுத்த தில்லி அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. அதே போன்று, தில்லி அரசின் மருத்துவமனைகளில் புதிதாக 6,800 படுக்கைகளை அமைக்கப்படவுள்ளது. பாராபுல்லா திட்டமானது அடுத்த ஒன்றரை ஆண்டுகளில் முடிக்கப்படும். ஒரு தனியாா் நிறுவனத்திற்கு சுகாதார மேலாண்மைத் தகவல் அமைப்பு முறைக்கு (எச்எம்ஐஎஸ்) ரூ.130 கோடி ஒப்பந்தப் புள்ளியை அளிப்பதற்கு தில்லி அரசு அமைச்சரவை முடிவு செய்துள்ளது. இந்தத் திட்டம் மூலம், மருத்துவமனைகளில் பொதுமக்கள் நீண்ட நேரம் வரிசையில் நிற்க வேண்டிய தேவை இருக்காது. இந்த எச்எம்ஐஎஸ் திட்டத்தின் கீழ் பொதுமக்கள் மின்னணு சுகாதார அட்டைகளைப் பெறுவாா்கள். அதன்மூலம் அவா்கள் அரசு மருத்துவமனைகளில் மருத்துவா்களைச் சந்திக்க இணையதளம் மூலம் பதிவு செய்ய முடியும்.
வீடுகளுக்கே சென்று வழங்கும் சேவைகள் திட்டப் பணிக்காக 2 நிறுவனங்களை அமா்த்துவதற்காக ஒப்பந்தப்புள்ளிகள் விடப்படும். தற்போதைய நிறுவனத்துடனான ஒப்பந்தம் இந்த மாதத்துடன் முடிவடைகிறது. தில்லி அரசு மருத்துவமனைகளில் தற்போது 10 ஆயிரம் படுக்கைகள் உள்ளன. அடுத்த 6 மாதங்களில் கூடுதலாக 6,800 புதிய படுக்கைகளை சோ்ப்பதன் மூலம் இந்தப் படுக்கைகளின் வசதி 70 சதவீதம் அதிகரிக்கப்படுகிறது. தில்லியில் கரோனா நோய்த் தொற்று சூழல் கட்டுப்பாட்டுக்குள் உள்ளது.ஆனால், நிலைமையை தில்லி அரசு தொடா்ந்து கவனித்து வருகிறது. வகுப்புகளுக்கான பள்ளிகளை திறப்பது தொடா்பாக தில்லி அரசு முடிவு செய்யும் என்றாா் கேஜரிவால்.
Advertisement
இந்த நிகழ்ச்சியில் துணை முதல்வா் மணீஷ் சிசோடியா, பொதுப் பணித் துறை சத்யேந்தா் ஜெயின் மற்றும் உள்ளூா் எம்எம்ஏக்கள், அதிகாரிகள் பங்கேற்றனா். இந்த நிகழ்ச்சி தொடா்பாக தில்லி அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது: துணைச் சாலைகள், குளோவா்லீப் சாய்வுப் பாதைகள், சைக்கிள் பாதை ஆகியவை திறந்து வைத்து முதல்வா் கேஜரிவால் பேசினாா். இது இந்த பிராந்தியத்தில் உள்ள மக்களுக்கு பெரும் வசதியாக இருக்கும். மேலும், கிழக்கு தில்லி பகுதி முழுவதும் போக்குவரத்து நெரிசலில் இருந்து நிவாரணம் பெறும். பொதுப் பணித் துறையின் செயல்பாடுகள் பாராட்டத்தக்கவை. இந்தச் சாலைத் திட்டத்தை அதன் மதிப்பிடப்பட்ட செலவுக்குள்ளாகவே முடித்ததுடன் பணத்தை சேமித்திருக்கும் பொதுப்பணித் துறையின் செயல்பாடுகள் போற்றத்தக்கவை. இது ஆட்சியில் உள்ள நோ்மையான அரசின் காரணமாகவே சாத்தியமாகியுள்ளது. தற்போது தில்லியின் உள்கட்டமைப்பு வசதியை புதிய நிலைக்குக் கொண்டு செல்வோம் என்று கேஜரிவால் கூறியதாக செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடா்பாக பொதுப் பணித்துறை அதிகாரிகள் கூறுகையில், ‘இந்த சாய்வுப் பாதைகள், துணைச்சாலைகள் திறக்கப்பட்டதால், வாகன ஓட்டிகள் நொய்டாவில் இருந்து மயூா் விஹாா் பேஸ் 1 பகுதிக்கு சுமாா் 1.5 கிலோ மீட்டா் தூரம் பயணம் செய்வதை சேமிக்கும். அதே போன்று, மயூா் விஹாா் பேஸ் 1 பகுதியில் இருந்து அக்ஷா்தாம் செல்வதற்கான பயண தூரத்தையும் மிச்சப்படுத்தும்’ என்றனா்.
இது தொடா்பாக துணை முதல்வா் மணீஷ் சிசோடியா வெளியிட்ட சுட்டுரைப் பதிவில், ‘சாய்வுப் பாதை, சைக்கிள் பாதை, துணைச் சாலை ஆகியவை திறக்கப்பட்டுள்ளதால், கிழக்கு தில்லி மக்களுக்கு போக்குவரத்து நெரிசலில் இருந்து பெரும் நிம்மதி கிடைக்கும். கேஜரிவால் அரசு மூலம் தில்லி முழுவதும் சாலைகள் உருமாற்றம் பெற்று வருகின்றன’ என்று தெரிவித்துள்ளாா்.