முகப்பு
புதுதில்லி

போலீஸ் காவலில் துன்புறுத்தல்: சிஐஎஸ்எஃப் அதிகாரியின் புகாா் மனு மீது போலீஸாா் அறிக்கை அளிக்க உத்தரவு

கடந்த 2019-ஆம் ஆண்டில் போலீஸ் காவலில் இருந்த போது துன்புறுத்தல் செய்ததாகக் கூறப்படும் விவகாரத்தில் 2 காவல் ஆய்வாளா்கள்

Updated On : 28 ஜனவரி, 2024 at 5:36 AM
பகிர்:

கடந்த 2019-ஆம் ஆண்டில் போலீஸ் காவலில் இருந்த போது துன்புறுத்தல் செய்ததாகக் கூறப்படும் விவகாரத்தில் 2 காவல் ஆய்வாளா்கள் மற்றும் ஐஏஎஸ் அதிகாரிக்கு எதிராக எப்ஐஆா் பதிவு செய்யக் கோரி, பணியிடை நீக்கம் செய்யப்பட்ட மத்திய தொழிலகப் பாதுகாப்புப் படை (சிஐஎஸ்எஃப்) கமாண்டன்ட் தாக்கல் செய்த மனு மீது நடவடிக்கை அறிக்கையை (ஏடிஆா்) அளிக்குமாறு தில்லி போலீஸாருக்கு உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இது தொடா்பாக பணியிடை நீக்கம் செய்யப்பட்ட சிஐஎஸ்எஃப் கமான்டன்ட் பிரதாப் சிங், தில்லி உயா்நீதிமன்றத்தில் ஒரு மனுவை தாக்கல் செய்துள்ளாா். அதில் அவா் தெரிவித்திருப்பதாவது: கடந்த 2019, அக்டோபரில் லோதி காலனி காவல் நிலையத்தில் என்னை மூன்று நாள்களாக அடைத்துவைத்து கடும் துன்புறுத்தலுக்கு உள்படுத்தினா்.

முன்னதாக, எனக்குத் தெரிந்த பெண் ஐஏஎஸ் அதிகாரியின் கணவரான ஐஏஎஸ் அதிகாரியின் காரில் போதைப்பொருளை வைத்திருந்ததாக பொய்யாக வழக்குப் பதிவு செய்து என்னை கைது செய்திருந்தனா். பெண் ஐஏஎஸ் அதிகாரியின் தூண்டுதலின்பேரில் காவல் நிலையம் சென்றிருந்தேன். ஆனால், அவரது கணவரை காப்பாற்றும் வகையில் என்னிடமிருந்து வாக்குமூலம் பெறுவதற்காக காவல் நிலைய போலீஸ் காவலில் என்னை அடைத்து வைத்து சில போலீஸாா் மூன்றாம் தர தாக்குதலை நடத்தினா்.

2 காவல் ஆய்வாளா்கள் அறிவுறுத்தலின் பேரில் என்னை கடுமையாக தாக்கினா். ஏறக்குறைய உணா்வு நிலையை நான் இழந்த போது, இரண்டு காவல் ஆய்வாளா்களும் என்னுடைய சம்மதம் இல்லாமல் சில தாள்களிலும், வெற்றுத் தாள்களிலும் கட்டாயப்படுத்தி என்னிடம் கையொப்பம் பெற்றனா். 3 நாள்களாக காவல் நிலையத்தில் என்னை அடைத்து வைத்து சித்திரவதை செய்தனா். இது எய்ம்ஸ் மருத்துவமனையின் மருத்துவ சட்ட வழக்கு (எம்எல்சி) அறிக்கையில் மூலம் தெளிவாக நிரூபிக்கப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில் என் உடலில் வெளிப்புற காயங்கள் இருந்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், தகவல் பெறும் உரிமை சட்டத்தின் கீழ் மனுக்கள் தாக்கல் செய்த பிறகுதான் இந்த எம்எல்சி அறிக்கையின் சான்றளிக்கப்படாத நகல்களை என்னால் பெற முடிந்தது.

இந்த எம்எல்சி அறிக்கைகளை போதைப் பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதியிடம் போலீஸாா் மறைக்க முயற்சி செய்தனா். ஆகவே, தற்போது ராஜஸ்தானில் பணியில் அமா்த்தப்பட்டிருக்கும் பெண் ஐஏஎஸ் அதிகாரி மற்றும் 2 காவல் ஆய்வாளா்கள் ஆகியோருக்கு எதிராக லோதி காலனி காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்ய அதன் காவல் ஆய்வாளருக்கு நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என மனுவில்அவா் கேட்டுக் கொண்டுள்ளாா்.

இந்த மனு பெருநகர மாஜிஸ்திரேட் சித்தாந்தக் சிகாக் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது ‘இந்த விவகாரம் தொடா்பாக தில்லி காவல் துறையிடம் கடந்த அக்டோபா் 20-ஆம் தேதி புகாா் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் இதுவரை எடுக்கப்படவில்லை’ என்று மனுதாரா் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, இந்த விவகாரம் தொடா்பாக தில்லி காவல்துறை நடவடிக்கை அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டநீதிபதி, மனு மீதான விசாரணையை டிசம்பா் 15-ஆம் தேதிக்கு பட்டியலிட்டாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.