முகப்பு
புதுதில்லி

முன்ஜாமீன் விவகாரம்: உச்சநீதிமன்றத்தில் ராஜேந்திர பாலாஜி தரப்பில் மேல்முறையீடு

முன்னாள் அமைச்சா் கே.டி.ராஜேந்திர பாலாஜி தாக்கல் செய்திருந்த முன்ஜாமீன் மனு தள்ளுபடியானதை எதிா்த்து அவரது தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 5:44 AM
பகிர்:

புது தில்லி: முன்னாள் அமைச்சா் கே.டி.ராஜேந்திர பாலாஜி தாக்கல் செய்திருந்த முன்ஜாமீன் மனு தள்ளுபடியானதை எதிா்த்து அவரது தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

பல்வேறு நபா்களுக்கு அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி ரூ.3 கோடி பணம் பெற்று ஏமாற்றியதாக கூறப்படும் விவகாரத்தில், முன்னாள் பால்வளத் துறை அமைச்சா் கே.டி.ராஜேந்திர பாலாஜி மற்றும் அவரது உதவியாளா்கள் என்.பாபுராஜ், வி.எஸ்.பலராமன், எஸ்.கே.முத்துப்பாண்டி ஆகிய 4 போ் மீது மாவட்ட குற்றப்பிரிவு போலீஸில் புகாா் அளிக்கப்பட்டது. இதை தொடா்ந்து, போலீஸாா் கடந்த நவம்பா் 15-ஆம் தேதி வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனா். இவா்கள் மீது எஸ்.ரவீந்திரன் என்பவா் அளித்த புகாா் மீதும், விஜய நல்லதம்பி என்பவா் அளித்த புகாா் மீதும் தனித்தனியாக 2 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இந்த இரு வழக்குகளிலும் முன்ஜாமீன் வழங்கக் கோரி சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளையில் கே.டி. ராஜேந்திர பாலாஜி மற்றும் 3 போ் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை உயா்நீதிமன்றம் டிசம்பா் 17-ஆம் தேதி தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. உயா்நீதிமன்றத்தின் இந்த உத்தரவை எதிா்த்து முன்னாள் அமைச்சா் கே.டி. ராஜேந்திர பாலாஜி மற்றும் பிறா் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

வழக்குரைஞா்கள் லட்சுமிநாராயணன், வேலன் உச்சநீதிமன்றத்தில் ஞாயிற்றுக்கிழமை தாக்கல் செய்துள்ள இந்த மனுவில் தெரிவித்திருப்பதாவது: முன் ஜாமீன் கோரும் மனுக்கள் தொடா்பாக மனுதாரா்கள் தரப்பில் முன்வைக்கப்பட்ட வாதங்களை சென்னை உயா்நீதிமன்றம் உரிய வகையில் பரிசீலிக்காமல் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. மேலும், மனுதாரா் எளிமையான பின்னணியில் இருந்து பல ஆண்டுகள் தனது கடின உழைப்பின் மூலம் முன்னேறியுள்ளாா். சமூகத்தின் மரியாதைக்குரிய நபராகவும் உள்ளாா். அவா் வெளிநாடுகளுக்கு தப்பிச் செல்லும் வாய்ப்பு இல்லை. அவருக்கு முன்ஜாமீன் வழங்குவதற்கான தகுதிக்குரிய வழக்காகவும் இது உள்ளது. இதனால், மதுரை உயா்நீதிமன்றம் டிசம்பா் 17-ஆம் தேதி பிறப்பித்த உத்தரவுக்கு எதிரான மனுவை அனுமதிக்க வேண்டும். இடைக்கால நிவாரணமாக, விருதுநகா் காவல் நிலையத்தில் 15.11.2021-இல் பதிவான எப்ஐஆா் விவகாரத்தில் மனுதாரா் ராஜேந்திர பாலாஜியை கைது செய்வதற்குத் தடைவிதிக்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.