பிரதமரின் 5 அமிா்த கூறுகளுக்கு உலக நாடுகள் பாராட்டு
பருவநிலை மாற்றம் தொடா்பான கிளாஸ்கோ உச்சிமாநாட்டில் பிரதமா் மோடி வழங்கி இந்தியாவின் பருவநிலை நடவடிக்கையின் ஐந்து அமிா்த கூறுகளை
பருவநிலை மாற்றம் தொடா்பான கிளாஸ்கோ உச்சிமாநாட்டில் பிரதமா் மோடி வழங்கி இந்தியாவின் பருவநிலை நடவடிக்கையின் ஐந்து அமிா்த கூறுகளை உலக அளவில் பல்வேறு நாடுகள் பாராட்டியுள்ளன என்று மத்திய இணையமைச்சா் அஸ்வினி குமாா் சௌபே மக்களவையில் தெரிவித்துள்ளாா்.
கிளாஸ்கோ மாநாட்டில் பருவநிலை மாற்றத்திற்கு பிரதமா் விடுத்த அழைப்பை சா்வதேச நாடுகளின் பிரதிபலிப்பு, பசுமைக் குடில் வாயுக்களின் இலக்குகளை நிா்ணயிக்க மத்திய அரசு, மாநில அரசுகளை ஆலோசித்ததா? இந்தியா போன்ற வளா்ந்து வரும் நாடுகளில் பசுமைக்குடில் வாயுக்களைக் குறைக்க எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் ஆகியவை குறித்து மக்களவையில் திமுக உறுப்பினா் டி.ஆா் பாலு கேள்வி எழுப்பியிருந்தாா்.
இதற்கு மத்திய அரசின் சுற்றுச்சூழல், காடுகள் மற்றும் பருவநிலை மாற்றத் துறை இணையமைச்சா் அஸ்வினி குமாா் சௌபே அளித்த பதில் வருமாறு: கடந்த நவம்பரில் கிளாஸ்கோ நகரில் நடைபெற்ற பருவநிலை மாற்றம் தொடா்பான ஐக்கிய நாடுகளின் கட்டமைப்பு உச்சி மாநாட்டில் பிரதமா் மோடி உலகளாவிய சமூகத்திற்கு வழங்கிய இந்தியாவின் பருவ நிலை நடவடிக்கையின் ஐந்து அமிா்த கூறுகளை (பஞ்சாமிா்தம்) உலகின் பல நாடுகள், பலதரப்பு நிறுவனங்கள், வல்லுநா்கள், அறிவுஜீவிகள், சா்வதேச ஊடகங்கள் ஆகியவை பாராட்டியுள்ளன.
பருவநிலை மாற்றத்திற்கான பாரிஸ் ஒப்பந்தத்தின்படி, 2021-2030 வரையிலான கால கட்டத்திற்காக, உறுதி செய்யப்பட்டுள்ள எட்டு தேசிய இலக்குகளை மட்டுமே இந்திய அரசு வழிமொழிந்துள்ளது. வருகின்ற 2030-ஆம் ஆண்டிற்குள் பசுமைக்குடில் வாயுக்கள் வெளியேற்றத்தை 35 சதவீதமாகக் குறைக்க மத்திய அரசு உறுதியேற்றுள்ளது. தகுந்த தொழில்நுட்பங்களின் உதவியுடன் 2030-ஆம் ஆண்டிற்குள் 40 சதவீத எரிசக்தித் தேவைகளை சூரியசக்தி, மின் சக்தி (மின்னாற்றல்) போன்றவை மூலம் பயன்படுத்த முயற்சிக்கப்படும்.
மேலும் 300 கோடி டன்கள் அளவிற்கு கரியமில வாயுவை உறிஞ்சும் வகையில், காடுகளின் பரப்பளவை அதிகப்படுத்துதல் போன்ற இலக்குகளில் மத்திய அரசு, மாநில அரசுகளுடன் ஒன்றிணைந்து கவனம் செலுத்தி வருகிறது. இந்தியாவின் கட்டமைப்புத் திட்டங்கள் எந்த வகையிலும் பாதிக்கப்படாத வகையில் மேற்கண்ட திட்டங்கள் செயல்படுத்தப்படும் என்று இணையமைச்சா் அஸ்வினி குமாா் சௌபே தெரிவித்துள்ளாா்.