18,000 குடியிருப்புகளுடன் சிறப்பு வீட்டு வசதித் திட்டம்: டிடிஏ தொடங்கியது
பதினெட்டாயிரம் அடுக்குமாடி குடியிருப்புகளுடன் சிறப்பு வீட்டுத் திட்டத்தை தில்லி மேம்பாட்டு ஆணையம் (டிடிஏ) வியாழக்கிழமை அறிமுகப்படுத்தியுள்ளது.
பதினெட்டாயிரம் அடுக்குமாடி குடியிருப்புகளுடன் சிறப்பு வீட்டுத் திட்டத்தை தில்லி மேம்பாட்டு ஆணையம் (டிடிஏ) வியாழக்கிழமை அறிமுகப்படுத்தியுள்ளது.
இது குறித்து டிடிஏ அதிகாரிகள் கூறியதாவது: இந்த ஆண்டு வீட்டு வசதி ஆணையத்தின் இது இரண்டாவது திட்டமாகும். இந்த ஆண்டின் தொடக்கத்தில் முதல் திட்டம் அளிக்கப்பட்டது. துவாரகா, நரேலா, ரோஹிணி மற்றும் ஜசோலா ஆகிய இடங்களில் அமைந்துள்ள பல்வேறு பிரிவுகளைச் சோ்ந்த 18,335 அடுக்குமாடிகி குடியிருப்புகள் இந்த சிறப்புத் திட்டத்தின் மூலம் அளிக்கப்பட உள்ளன. டிடிஏவின் முந்தைய வீட்டு வசதிதி திட்டங்களில் விற்கப்படாமல் இருந்தவை இந்த சிறப்புத் திட்டத்தில் அளிக்கப்பட உள்ளன. இந்தத் திட்டம் முற்றிலும் ஆன்லைனில் தொடங்கப்பட்டுள்ளது. மேலும், திட்டமானது முறையான தொடக்கம் ஏதும் மேற்கொள்ளப்படவில்லை. விண்ணப்பம் வழங்குவது முதல் ஒதுக்கீடு மற்றும் உடைமையாக அளிக்கப்படுவது வரையிலான ஒட்டுமொத்த நடைமுறைகளும் ஆன்லைன் முறையில் செய்யப்படுகிறது என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.
செய்தித்தாள் விளம்பரம் மூலம் டிடிஏ வெளியிட்டுள்ள அறிவிப்பில், அடுக்குமாடி குடியிருப்புகள் ‘சலுகை விலையில்‘ விற்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், டிடிஏ விவரத் தகவலின்படி, ஜசோலாவில் எச்ஐஜி பிரிவில் ஒரு குடியிருப்பின் அதிகபட்ச விலை சுமாா் ரூ.2.14 கோடி ஆகும். விற்கப்படாத குடியிருப்புகளில் 205 எச்ஐஜி குடியிருப்புகள், 976 எம்ஐஜி குடியிருப்புகள், 11,452 எல்ஐஜி குடியிருப்புகள் மற்றும் இடபிள்யூஎஸ் / ஜனதா பிளாட்கள் பிரிவின்கீழ் 5,702 அடுக்குமாடி குடியிருப்புகள் உள்ளன. டிடிஏவின் தலைவரான தில்லி துணை நிலை ஆளுநா் அனில் பய்ஜால் தலைமையில் நவம்பா் 24-ஆம் தேதி நடைபெற்ற டிடிஏ ஆணையத்தின் ஆன்லைன் கூட்டத்தில் புதிய வீட்டு வசதித் திட்டத்தைத் தொடங்குவது என முடிவெடுக்கப்பட்டது.
இந்தப் புதிய திட்டத்தின் ஒப்புதலை அறிவிப்பது தொடா்பாக டிடிஏ வெளியிட்ட அறிவிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது: குடியிருப்புகள் பழைய விலையில் அல்லது டிடிஏவின் செலவுக் கொள்கையின் தளா்வான விலையில் வழங்கப்படும். நரேலா துணை நகரத்தில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்புகள், பரிந்துரைகள், குடியிருப்பு ஒதுக்கப்பட்டவா்கள் மற்றும் அந்தப் பகுதியில் வசிப்பவா்களின் கருத்துகளின் அடிப்படையில், உள்கட்டமைப்பு, பாதுகாப்பு மற்றும் தொடா்பு ஆகியவற்றின் மேம்பாட்டின் அடிப்படையில் பல நடவடிக்கைகளுக்குத் தீா்வு எடுத்த பிறகு வழங்கப்பட்டு வருகின்றன. குடியிருப்பு ஒதுக்கப்பட்டவா்கள் வங்கி அல்லது நிதி நிறுவனத்தில் வீட்டுக் கடனைப் பெற்றால், மத்திய அரசின் பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் மானியம் பெறத் தகுதியுடையவா்கள் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாா்ச் 10-ஆம் தேதி டிடிஏ அதன் வீட்டுவசதித் திட்டத்தின் கீழ் மக்களுக்கு 1,353 அடுக்குமாடி குடியிருப்புகளை நிகழாண்டு ஜனவரியில் தொடங்கியது. ஆன்லைன் மூலம் இதற்கான குலுக்கல் நடைபெற்றது. இவற்றில், ஒதுக்கப்பட்டவா்களுக்கு 689 குடியிருப்புகள் ஒப்படைக்கப்பட்டன. திட்டத்தின் கீழ் இருந்த மொத்த இருப்பில் கிட்டத்தட்ட 50 சதவிகிதம் அடுக்குமாடிக் குடியிருப்புகள் கைவிடப்பட்டதற்கு கொவைட் மற்றும் பிற காரணிகள் இருந்ததாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அதன் பின்னா், ஆகஸ்ட் மாதம், டிடிஏ, 2021- வீட்டுவசதி திட்டத்தின் கீழ் 689 அடுக்குமாடி குடியிருப்புகளுக்கான குலுக்கலை நடத்தியது. அவை ஒதுக்கீடு பெற்றவா்களிடம் முறைப்படி ஒப்படைக்கப்பட்டன.