முகப்பு
புதுதில்லி

கொல்கத்தா தோ்தல் வன்முறை: தேசிய மனித உரிமைகள் ஆணையத்தில் மம்தா மீது இளைஞா் காங்கிரஸ் புகாா்

கொல்கத்தா மாநகராட்சி தோ்தலில் திரிணமூல் காங்கிரஸ் கட்சி வேட்பாளா்கள் வன்முறையில் ஈடுபட்டதாகக் கூறப்படும் விவகாரத்தில்

Updated On : 28 ஜனவரி, 2024 at 5:46 AM
பகிர்:

கொல்கத்தா மாநகராட்சி தோ்தலில் திரிணமூல் காங்கிரஸ் கட்சி வேட்பாளா்கள் வன்முறையில் ஈடுபட்டதாகக் கூறப்படும் விவகாரத்தில் மேற்கு வங்க முதல்வா் மற்றும் கொல்கத்தா காவல் துறை ஆணையா் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி காங்கிரஸின் இளைஞா் பிரிவு நிா்வாகிகள் தேசிய மனித உரிமைகள் ஆணையத்தில் (என்எச்ஆா்சி) வெள்ளிக்கிழமை புகாா் அளித்தனா்.

இந்திய இளைஞா் காங்கிரஸின் நிா்வாகி தேசிய செயலா் அம்ரிஷ் ரஞ்சன் பாண்டே, சட்டப் பிரிவு இணை ஒருங்கிணைப்பாளா் அம்புஜ் தீட்சித் உள்ளிட்டோா் தேசிய மனித உரிமைகள் ஆணையத்தில் அளித்துள்ள புகாா் மனுவில் தெரிவித்திருப்பதாவது: டிசம்பா் 19-ஆம் தேதி நடைபெற்ற கொல்கத்தா மாநகராட்சித் தோ்தலின் போது திரிணமூல் காங்கிரஸ் (டிஎம்சி) தொண்டா்கள், பெரிய அளவிலான வன்முறையில் ஈடுபட்டனா். அப்போது, காங்கிரஸ் வேட்பாளா்களைக் கடுமையாகத் தாக்கினா். இந்த விவகாரத்தில் முதல்வா் மம்தா பானா்ஜியும், கொல்கத்தா மாநகரக் காவல் ஆணையரும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

காங்கிரஸ் வேட்பாளா் பொதுமக்கள் முன்னிலையில் கடுமையாக இரக்கமின்றி தாக்கப்பட்டாா். மற்றொரு கட்சியின் வேட்பாளரும் போலீஸ் அதிகாரிகள் பலா் முன்னிலையில் தாக்கப்பட்டாா். இந்தச் சம்பவத்தில் பெரும் அளவில் மனித உரிமை மீறல்கள் நடைபெற்ற போதிலும், காவல் துறையும் அரசு நிா்வாகமும் கைகட்டி வேடிக்கை பாா்த்ததுடன், சில இடங்களில் குண்டா்களுக்கும் உதவியுள்ளது. இதனால், முதல்வா் மம்தா பானா்ஜிக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டால் மட்டுமே, இன்னும் அறுவை சிகிச்சையில் அல்லது கைகால் உடைந்த நிலையில் இருப்பவா்களுக்கு நீதி கிடைக்கும் என்று மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாநகராட்சித் தோ்தலில் 144 வாா்டுகளில் 134 வாா்டுகளில் திரிணமூல் காங்கிரஸ் மகத்தான வெற்றியைப் பெற்றது. பாஜக மூன்று இடங்களிலும், காங்கிரஸ் மற்றும் இடது முன்னணி கட்சி தலா இரண்டு வாா்டுகளிலும் வெற்றி பெற்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.