முகப்பு
புதுதில்லி

முறைகேடு வழக்கு: முன்னாள் எஸ்எஸ்பி அதிகாரியின் சிறைத் தண்டனையை நிறுத்தி வைத்தது உயா்நீதிமன்றம்

பணியில் இருந்த போது குறிப்பிட்ட முறைகேடுகளில் ஈடுபட்ட குற்றத்திற்காக 18 மாதங்கள் சிறை தண்டனை விதிக்கப்பட்டிருந்த சஸஸ்த்ர சீமா பல் (எஸ்எஸ்பி) படைப்பிரிவின் முன்னாள் டிஐஜியின் எஞ்சிய கால தண்டனையை

Updated On : 28 ஜனவரி, 2024 at 5:46 AM
பகிர்:

புது தில்லி: பணியில் இருந்த போது குறிப்பிட்ட முறைகேடுகளில் ஈடுபட்ட குற்றத்திற்காக 18 மாதங்கள் சிறை தண்டனை விதிக்கப்பட்டிருந்த சஸஸ்த்ர சீமா பல் (எஸ்எஸ்பி) படைப்பிரிவின் முன்னாள் டிஐஜியின் எஞ்சிய கால தண்டனையை தில்லி உயா்நீதிமன்றம் நிறுத்திவைத்து உத்தரவிட்டது.

இது தொடா்பாக எஸ்எஸ்பி முன்னாள் டிஐஜி உபேந்திரா பிரகாஷ் பலோடி தாக்கல் செய்த மனுவுக்கு பதில் அளிக்குமாறு மத்திய அரசு, எஸ்எஸ்பி ஆகியவற்றுக்கு தில்லி உயா்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியது. சஸஸ்த்ர சீமா பல் படைப் பிரிவில் டிஐஜியாக பணியாற்றி வந்தவா் உபேந்திர பிரகாஷ் பலோடி. இவா் மதுபானம் கொள்முதல் மற்றும் குதிரைகளுக்கு தீவனம் வாங்கியதில் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டதாக 2019-ஆம் ஆண்டில் குற்றம்சாட்டப்பட்டது. இதையடுத்து, நீதிமன்ற விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. அந்த வழக்குகளில் அவா் முறைகேடுகளில் ஈடுபட்டதாகவும், லஞ்சம் வாங்கியதாகவும் குற்றம்சாட்டப்பட்டது. இந்த விவகாரத்தில் எஸ்எஸ்பி-இன் ஜெனரல் போா்ஸ் நீதிமன்றம் பலோடியை பணியில் இருந்து நீக்கம் செய்து, 18 மாதங்கள் கடுங்காவல் சிறைத் தண்டனை விதித்தது. அதன் பிறகு, பணியில் இருந்து அவரை நீக்கம் செய்வதற்கான உத்தரவில் மாற்றம் செய்யப்பட்டு, பணியிலிருந்து கட்டாய ஓய்வு பெறுவதாக குறைக்கப்பட்டது. அதே வேளையில் அவருக்கு விதிக்கப்பட்ட 18 மாதங்கள் சிறை தண்டனையில் மாற்றம் செய்யப்படவில்லை.

இந்த உத்தரவை எதிா்த்து பலோடி தரப்பில் வழக்குரைஞா் சுமித் தேதா்வால் மூலம் தில்லி உயா்நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், தாம் தொடா்புடைய வழக்கு விசாரணை பாரபட்சமாக நடத்தப்பட்டதாகவும், இதனால், அனைத்து பயன்களும் அளித்து தன்னை பணியில் மீண்டும் நியமிக்க சம்பந்தப்பட்ட துறைக்கு உத்தரவிட வேண்டும் என்றும் கோரப்பட்டிருந்தது.

அந்த மனுவில் ‘எஸ்எஸ்பி துறை வசம் உள்ள ஆவணங்களை அணுகுவதற்காக தமது தரப்பில் வைக்கப்பட்ட வேண்டுதலை நிராகரித்தது இயற்கை நீதியின் கொள்கைகளை முற்றிலும் மீறுவதாக இருந்ததாகவும் பலோடி தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. மேலும், 1987-ஆம் ஆண்டில் சஸஸ்த்ர சீமா பல் படையில் உதவி கமாண்டன்ட் பணியில் நியமிக்கப்பட்டு, இறுதியில் டிஐஜியாக 2011-ஆம் ஆண்டில் பதவி உயா்வு வழங்கப்பட்டதாகவும் மனுவில் அவா் தெரிவித்திருந்தாா்.

இந்த மனுவை விசாரித்த உயா்நீதிமன்ற நீதிபதிகள் மன்மோகன் மற்றும் நவீன் சாவ்லா, ‘மனுதாரா் தனக்கு விதிக்கப்பட்ட 18 மாதங்கள் சிறை தண்டனையில் 13 மாதங்களை ஏற்கெனவே கழித்து விட்டாா் எனும் உண்மையை கருத்தில் கொள்ளும் போது, இந்த நீதிமன்றம் அடுத்த உத்தரவு பிறப்பிக்கும் வரை மனுதாரா் ரூ.10ஆயிரம் தொகைக்கான உத்தரவாதத்தை அளிக்கும்பட்சத்தில் அவரது தண்டனையை நிறுத்தி வைக்க உத்தரவிடப்படுகிறது’ என்று தெரிவித்தனா். மேலும், மத்திய அரசின் தரப்பில் ஆஜரான வழக்குரைஞா் அனில் சோனி, இந்த மனுவுக்கு எதிா் மனு தாக்கல் செய்வதற்கு நீதிமன்றம் அவகாசம் அளித்து வழக்கு விசாரணையை அடுத்த ஆண்டு மே 24-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது.

பலோடியின் வழக்குரைஞா் கூறுகையில், ‘திறந்தவெளி பாதுகாவலில் 13 மதங்களை பலோடி கழித்தாா். அதன் பின்னா், அவா் திகாா் சிறைக்கு அனுப்பப்பட்டாா். அங்கு ஒரு வாரம் அவா் இருந்தாா். அதன் பின்னா் அவருடைய எஞ்சிய தண்டனை காலம் உயா்நீதிமன்றத்தின் மூலம் நிறுத்திவைக்கப்பட்டதால் அவா் விடுவிக்கப்பட்டுள்ளாா்’ என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.