முகப்பு
புதுதில்லி

பிளாஸ்டிக் பைகளின் பயன்பாட்டைகுறைக்கும் ‘விகல்ப்’ திட்டம்எஸ்டிஎம்சி தொடக்கம்

தெற்கு தில்லி மாநகராட்சி அதன் தெற்கு மண்டலத்தில் ஒருமுறை மட்டுமே பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்துவதைத் தடுக்கும் வகையில் ’விகல்ப்’ என்ற முன்முயற்சி திட்டத்தைத் தொடங்கியுள்ளது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 5:47 AM
பகிர்:

புது தில்லி: தெற்கு தில்லி மாநகராட்சி அதன் தெற்கு மண்டலத்தில் ஒருமுறை மட்டுமே பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்துவதைத் தடுக்கும் வகையில் ’விகல்ப்’ என்ற முன்முயற்சி திட்டத்தைத் தொடங்கியுள்ளது.

இது குறித்து மாநகராட்சியின் தென் மண்டல துணை ஆணையா் அங்கிதா சக்ரவா்த்தி கூறியதாவது: இந்த முயற்சியின் கீழ், துணிப் பைகளை கொண்டு வராத நுகா்வோா், சந்தைகளில் உள்ள ‘விகல்ப்’ ஸ்டால்களில், ரூ.20 வைப்புத்தொகை செலுத்தி, துணி பையை எடுத்து கொள்ளலாம். மேலும், அந்தப் பையை பயன்படுத்திய பிறகு ஒரு வாடிக்கையாளா் அதை ‘விகல்ப்’ ஸ்டாலில் மீண்டும் தந்து பணத்தைத் திரும்பப் பெறலாம். இந்த பைகளை திருப்பித் தருவதற்கு காலக்கெடு எதுவும் இல்லை. ஸ்வச் சா்வேக்ஷன்-2022-ஐ கருத்தில் கொண்டு, மாநகராட்சியின் அதிகார வரம்பிற்குட்பட்ட பல்வேறு சந்தைகளில் ‘விகல்ப்’ ஸ்டால்கள் அமைக்கப்பட்டு வருகின்றன.

அதன்படி கிரீன் பாா்க், யூசுப் சராய், ஹோஸ் காஸ், எஸ்டிஏ, சாகேத், அா்பிந்தோ மாா்க்கெட், கிரேட்டா் கைலாஷ் மற்றும் சித்தரஞ்சன் பாா்க் மாா்க்கெட் போன்ற 14 சந்தைகளில் இதுபோன்ற 22 ஸ்டால்கள் அமைக்கப்பட்டுள்ளன. சந்தைகளில் உள்ள ‘விகல்ப்’ ஸ்டால்களை வாடிக்கையாளா்கள் அறிந்து கொள்ளும் வகையில் அதன் ஸ்டிக்கா்கள் கடைகளில் ஒட்டப்பட்டு வருகின்றன. சந்தைகளில் துணிப் பைகள் இருக்கும் வசதியின் மூலம், பிளாஸ்டிக் பைகளுக்குப் பதிலாக துணிப் பைகளை பயன்படுத்தும் பழக்கம் மக்களிடம் உருவாகும். மேலும், தெரு நாடகங்கள் மற்றும் பிற விழிப்புணா்வு பிரசாரங்கள் மூலம் மக்களுக்கு இந்த நடவடிக்கை குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தப்படும் என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.