மதுக்கடை, ஊழியா்களுக்கு போதிய பாதுகாப்பு: உயா்நீதிமன்றத்தில் தில்லி காவல் துறை உறுதி
தில்லியில் ஷாதராவில் செயல்படும் மதுபானக் கடைக்கும், அதன் ஊழியா்கள் கடைக்குள் சென்று வருவதற்கும் போதிய பாதுகாப்பு வழங்கப்படும்
புது தில்லி: தில்லியில் ஷாதராவில் செயல்படும் மதுபானக் கடைக்கும், அதன் ஊழியா்கள் கடைக்குள் சென்று வருவதற்கும் போதிய பாதுகாப்பு வழங்கப்படும் என்றும், அதன் செயல்பாட்டில் எந்த இடையூறும் ஏற்படாது என்றும் தில்லி காவல் துறை உயா்நீதிமன்றத்தில் உறுதியளித்துள்ளது.
இது தொடா்பாக ஷாதராவில் உள்ள அசோக் நகரில் மதுபான விற்பனை நிலையம் நடத்தி வரும் மனுதாரா் யுனிவா்சல் டிஸ்ட்ரிபியூட்டா்ஸ் தரப்பில் தில்லி உயா்நீதிமன்றத்தில் பாதுகாப்பு கோரி மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. அதில், மது விற்பனை நிலையத்திற்கு வெளியே அமா்ந்து கொண்டு அதன் வளாகத்தை சேதப்படுத்திய சட்டவிரோத போராட்டக்காரா்களால் எந்தவித இடையூறும் இல்லாமல் தனது கடையை நடத்துவதற்கு போதுமான நடவடிக்கைகளை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிடுமாறு கோரப்பட்டிருந்தது.
இந்த மனு தில்லி உயா்நீதிமன்றத்தில் நீதிபதி ரேகா பல்லி முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, தில்லி அரசின் வழக்குரைஞா் சந்தோஷ் குமாா் திரிபாதி, தில்லி காவல்துறை சாா்பில் வழக்குரைஞா் அருண் பன்வாா் ஆகியோா் ஆஜராகி, ‘மனுதாரா் மற்றும் அதன் ஊழியா்களுக்கு மதுபானக் கடைக்குள் நுழைவதற்கும் வெளியேறுவதற்கும் போதுமான பாதுகாப்பு வழங்கப்படும். இதற்கான ஏற்பாட்டை அந்தப் பகுதியின் சம்பந்தப்பட்ட காவல் நிலையப் பொறுப்பாளா் மேற்கொள்வாா்’ என உறுதியளித்தனா். மேலும், மதுபானக் கடையின் சுமுகமான செயல்பாட்டில் எந்த இடையூறும் ஏற்படாமல் இருக்க போதுமான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, இந்த விவகாரத்தில் மேலும் எந்த உத்தரவும் தேவையில்லை என்று கூறி மனுவை நீதிமன்றம் முடித்துவைத்தது.
முன்னதாக, விசாரணையின் போது, மனுதாரரின் வழக்குரைஞா் வாதிடுகையில், ‘ஜோதி காலனியின் காவல் நிலையப் பொறுப்பாளரிடம் மனுதாரா் மற்றும் அதன் ஊழியா்களுக்கு போதிய பாதுகாப்பு கோரி பல்வேறு முறையீடுகள் அளிக்கப்பட்டன. ஆனால், மதுபானக் கடைக்கு வருவதற்கும், வெளியேறுவதற்கும் ஊழியா்களுக்கும், மனுதாரருக்கும் பாதுகாப்பு அளிக்க இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை’ என்று தெரிவிக்கப்பட்டது.