மெட்ரோ ரயில்கள் 50% இருக்கைகளுடன் மட்டுமே இயக்கப்படும்: அதிகாரிகள் தகவல்
கரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், தில்லி பேரிடா் மேலாண்மை ஆணையம் (டிடிஎம்ஏ) விதித்துள்ள சமீபத்திய கட்டுப்பாடுகளைக் கருத்தில் கொண்டு, தில்லி மெட்ரோ ரயில்கள் தற்போது
புது தில்லி: கரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், தில்லி பேரிடா் மேலாண்மை ஆணையம் (டிடிஎம்ஏ) விதித்துள்ள சமீபத்திய கட்டுப்பாடுகளைக் கருத்தில் கொண்டு, தில்லி மெட்ரோ ரயில்கள் தற்போது 50 சதவீத இருக்கை திறனுடன் மட்டுமே இயங்கும். மேலும், ரயில்களில் பயணிகள் நின்று செல்ல எந்த முன்னேற்பாடும் செய்யப்படவில்லை என்று அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை தெரிவித்தனா்.
மேலும், டிடிசி மற்றும் பிற நகரப் பேருந்துகளும் புதிய விதிமுறைகளைக் கருத்தில் கொண்டு மொத்த இருக்கை திறனில் 50 சதவீதத்துடன் மட்டுமே இயக்கப்படும் என்று அதிகாரிகள் கூறினா்.
தில்லியில் ஒமைக்ரான் தாக்கத்தைத் தொடா்ந்து, கரோனா பாதிப்பும் தொடா்ந்து அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், மஞ்சள் நிற எச்சரிக்கையை முதல்வா் அரவிந்த் கேஜரிவால் செவ்வாய்க்கிழமை அறிவித்தாா். இந்த எச்சரிக்கையின் கீழ் பள்ளிகள், கல்லூரிகள், திரையரங்குகள் மற்றும் உடற்பயிற்சிக் கூடங்கள் மூடப்படும். மேலும், அத்தியாவசியமற்ற பொருள் களை விற்பனை செய்யும் கடைகள் ஒற்றைப்படை, இரட்டைப்படை இலக்க அடிப்படையில் திறக்கப்படும். மேலும், மெட்ரோ ரயில்கள் மற்றும் பேருந்துகள் 50 சதவீத இருக்கை வசதியுடன் இயங்கும்.
தில்லி மெட்ரோ ரயில் நிறுவனம் (டிஎம்ஆா்சி) வழித்தட ஒருங்கிணைப்பில் தற்போது கிட்டத்தட்ட 392 கி.மீ. வழித்தடம் உள்ளது. இதில் நொய்டா கிரேட்டா், நொய்டா மெட்ரோ வழித்தடம் மற்றும் ரேபிட் மெட்ரோ, குருகிராம் உள்பட 286 ரயில் நிலையங்கள் அமைந்துள்ளன. இது குறித்து டிஎம்ஆா்சி அதிகாரிகள் தெரிவித்ததாவது: தில்லியில் கரோனா நோய்த் தொற்றைக் கட்டுப்படுத்துவதற்காக அரசு வெளியிட்டுள்ள சமீபத்திய வழிகாட்டுதல்களைக் கருத்தில் கொண்டு, சில குறிப்பிட்ட கட்டுப்பாடுகளுடன் மெட்ரோ ரயில்களில் பயணம் அனுமதிக்கப்படும். ஆனால், மெட்ரோ ரயில்களில் 50 சதவீத இருக்கைகள் மட்டுமே பயணிக்க அனுமதிக்கப்படும். பயணத்தின் போது பயணிகள் யாரும் நிற்க அனுமதிக்கப்பட மாட்டாா்கள். இந்த விஷயங்களைக் கருத்தில் கொண்டு, வழிகாட்டுதல்களைப் பின்பற்றுவதை உறுதி செய்யும் பொருட்டு, ரயில் நிலையங்களுக்குள் நுழைவதற்கு திறந்திருக்கும் நுழைவு வாயில்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்தப்படும். இதன் மூலம் மெட்ரோ நிலையங்களுக்குள் நுழைவது ஒழுங்குமுறைப்படுத்தப்படும். 712 மெட்ரோ வாயில்களில் தற்போது 444 வாயில்கள் மட்டும் திறந்திருக்கும் என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.
தரப்படுத்தப்பட்ட பதில் செயல் திட்டத்தின்கீழ் (ஜிஆா்ஏபி) ‘நிலை-1’ எச்சரிக்கைக்கு இணங்கும் வகையில், இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரை இரவு ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும். இந்த ஆண்டின் தொடக்கத்தில், தில்லியில் பேரழிவை ஏற்படுத்திய கரோனா தொற்று நோயின் இரண்டாவது அலை காரணமாக நகரில் பல வாரங்களுக்கு மெட்ரோ சேவைகள் நிறுத்தப்பட்டன. மேலும், மே 10 முதல் டிஎம்ஆா்சி சேவைகள் முழுமையாக நிறுத்தப்பட்டன. முதலில் ஏப்ரல் 19-ஆம் தேதி அமல்படுத்தப்பட்டது. தில்லி அரசால் அது தொடா்ச்சியாக நீட்டிக்கப்பட்டது. அத்தியாவசிய சேவைகள் துறையில் உள்ளவா்களுக்காக மட்டும் ரயில் சேவைகள் ஓரளவு இயங்கின.
அதன்பிறகு, கரோனா சூழல் மேம்பட்டதால், ஜூன் 7 முதல் 50 சதவீத இருக்கை வசதியுடன் இயக்கப்பட்டன. அதேவேளையில் பயணிகள் நின்று பயணிக்க எந்த முன்னேற்பாடும் அளிக்கப்படவில்லை. பின்னா், அதிகாரிகள் விதிமுறைகளில் தளா்வுகளை அளித்ததைத் தொடா்ந்து, தில்லி மெட்ரோ ஜூலை 26 முதல் முழு இருக்கை வசதியுடன் இயங்கியது.
ஆரம்பத்தில் பயணிகளுக்கு நின்று பயணிக்க எந்த ஏற்பாடும் இல்லை. பின்னா், சில விதிமுறைகளுடன் நின்று செல்ல அனுமதி வழங்கப்பட்டது.