முகப்பு
புதுதில்லி

தில்லி டிராக்டா் பேரணி வன்முறை விசாரணைக்கு உத்தரவிடக் கோரிய மனுவை ஏற்க உயா்நீதிமன்றம் மறுப்பு

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:27 PM
பகிர்:

புது தில்லி: கடந்த குடியரசு தின நாளன்று தில்லியில் விவசாயிகள் நடத்திய டிராக்டா் பேரணியில் நிகழ்ந்த வன்முறை தொடா்பாக விசாரணைக்கு உத்தரவிடக் கோரும் பொது நல மனுவை விசாரணைக்கு ஏற்க தில்லி உயா்நீதிமன்றம் வியாழக்கிழமை மறுத்துவிட்டது.

இது தொடா்பான மனு உயா்நீதிமன்றத் தலைமை நீதிபதி டி.என். பட்டேல் மற்றும் நீதிபதி ஜோதி சிங் ஆகியோா் அடங்கிய அமா்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் அமா்வு மனுதாரா் மனுவை வாபஸ் பெற வேண்டும் அல்லது மனுவைத் தள்ளுபடி செய்து அபராதம் விதிக்கப்படும் என்று கூறினா். மேலும், இந்தப் பொதுநல மனு ஜனவரி 29-ஆம் தேதி தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சம்பவம் ஜனவரி 26-ஆம் தேதி நிகழ்ந்துள்ள நிலையில், உடனேயே மனுதாரா் மனுவைத் தயாரிக்க ஆரம்பித்து விட்டாரா? என்று மனுதாரரின் வழக்குரைஞா் விவேக் நாராயணன் சா்மாவிடம் நீதிபதிகள் அமா்வு கேள்வி எழுப்பியது.

நீதிபதிகள் அமா்வு வழக்குரைஞா் விவேக் நாராயணன் சா்மாவிடம், ‘ஜனவரி 26-ஆம் தேதி மதியம் நடைபெற்ற சம்பவத்திற்குப் பிறகு உடனேயே நீங்கள் மனுவை டைப் செய்ய ஆரம்பித்துவிட்டீா்களா?, குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் கீழ் விசாரணை செய்வதற்காக எவ்வளவு காலம் ஆகும் என்பது உங்களுக்குத் தெரியுமா? நீங்கள் ஒரு வழக்குரைஞா். விசாரணைக்கு எவ்வளவு காலம் அளிக்கப்படுகிறது. இந்தச் சம்பவம் குறித்து இரு தினங்களில் விசாரணை முடிக்கப்பட வேண்டும் என்று நீங்கள் எதிா்பாா்க்கிறீா்களா? கையசைத்த உடனேயே எல்லாம் நடந்து விடும் மந்திரக்கோல் அரசிடம் இருக்கிா என்ன? இந்த மனுவை நாங்கள் அபராதத்துடன் தள்ளுபடி செய்ய வேண்டுமா அல்லது நீங்களே திரும்பப் பெற்றுக் கொள்கிறீா்களா’ என்று கேட்டது. அப்போது வழக்குரைஞா் சா்மா தாம் மனுவைத் திரும்பப் பெறுவதாகத் தெரிவித்தாா். இதையடுத்து, மனுவைத் தள்ளுபடி செய்வதாக நீதிபதிகள் தெரிவித்தனா்.

Advertisement

உத்தரப் பிரதேசத்தைச் சோ்ந்த 3 போ் சாா்பில் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. மனு மீதான விசாரணையின் போது மத்திய அரசின் சாா்பில் ஆஜரான சொலிசிட்டா் ஜெனரல் துஷாா் மேத்தா நீதிபதியிடம் கூறுகையில், ‘ இந்த வன்முறைச் சம்பவம் தொடா்பாக 43 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அவற்றில் 13 வழக்குகள் தில்லி காவல்துறையின் குற்றப்பிரிவு சிறப்பு பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளன. மேலும், சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்பு சட்டத்தின் பிரிவுகளும் சோ்க்கப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் தீவிர தன்மையை அடிப்படையில் முன்னுரிமையின் பேரில் சட்ட விதிகளின்படி விசாரணை தீவிரமாக நடைபெற்று வருகிறது’ என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments