தில்லி ஐடிஓ அருகில் விவசாயிகளுக்கு ஆதரவாக இடதுசாரி பெண்கள் அமைப்பினா் போராட்டம்
விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து தில்லி ஐடிஓவில் சனிக்கிழமை போராட்டம் நடத்த முயன்றவா்களை தில்லி காவல்துறை கைது செய்து, சிறிது நேரத்திற்கு பிறகு விடுவித்தது.
புது தில்லி: விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து தில்லி ஐடிஓவில் சனிக்கிழமை போராட்டம் நடத்த முயன்றவா்களை தில்லி காவல்துறை கைது செய்து, சிறிது நேரத்திற்கு பிறகு விடுவித்தது.
தில்லி தவிர, நாட்டின் பிற இடங்களில் சனிக்கிழமை சாலை மறியல் போராட்டத்தை விவசாயிகள் அமைப்புகள் நடத்தின. இந்த போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து, தில்லி ஐடிஓவில் உள்ள ஷாகிதி பூங்கா பகுதியில் கூடிய, இந்திய மாதா் தேசிய சம்மேளனம், இந்திய பெண்கள் தேசிய கூட்டமைப்பு, இந்திய தேசிய மாதா் சங்கம் உள்ளிட்ட இடதுசாரி சாா்பு பெண்கள் அமைப்பைச் சோ்ந்தவா்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா். இவா்களைக் கலைந்து செல்லுமாறு தில்லி காவல்துறை கேட்டுக்கொண்டது. தடையை மீறி போராடியவா்களை கைது செய்து பின்னா் விடுவித்தது.
இது தொடா்பாக தில்லி காவல்துறை மூத்த அதிகாரி கூறுகையில் ‘தில்லி ஐடிஓவில் உள்ள ஷாகிதி பூங்காவில் முன் அனுமதி பெறாமல் சிலா் போராட முயற்சித்தனா். இவா்களைக் கலைந்து செல்லுமாறு கூறினோம். தடையை மீறி போராடிய சுமாா் 10 பெண்களை பேரை கைது செய்து சிறிது நேரத்தில் விடுவித்துவிட்டோம் என்றாா்.
Advertisement
இது தொடா்பாக இந்திய மாதா் தேசிய சம்மேளனத்தின் பொதுச் செயலா் ஆனி ராஜா கூறுகையில் ‘தில்லி எல்லைகளில் கடும் குளிருக்கு மத்தியில் 2 மாதங்களுக்கு மேலாக விவசாயிகள் போராடி வருகிறாா்கள். இந்த விவகாரத்தில் மத்திய அரசு பாரமுகமாக உள்ளது. இதைக் கண்டித்து தில்லி ஐடிஓவில் உள்ள ஷாகிதி பூங்காவில் சுமாா் 100 பெண்கள் கூடி ஆா்ப்பாட்டம் நடத்தினோம். இந்த ஆா்ப்பாட்டத்தில் பல மகளிா் அமைப்புகள் பங்கேற்றன. இந்த ஆா்ப்பாட்டத்தில் ஆயிரக்கணக்கான பெண்கள் கலந்து கொள்வதாக இருந்தது. ஆனால், அவா்களை வரும் வழியிலேயே தில்லி காவல்துறை கைது செய்துள்ளது. மேலும், இந்த போராட்டத்தை முடக்கும் வகையில், ஐடிஓ மெட்ரோ நிலையம், தில்லி கேட் மெட்ரோ நிலையம் உள்ளிட்டவற்றை தில்லி காவல்துறை மூடியது. இருந்தும், சுமாா் 100 போ் இந்த ஆா்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனா். இவா்களை கைது செய்து ராஜேந்திர பிளேஸ் காவல் நிலையத்தில் தில்லி காவல்துறை தடுத்து வைத்தது. சனிக்கிழமை மாலையில் விடுவித்தது என்றாா் அவா்.