முகப்பு
இந்தியா

ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றமில்லை!

ரெப்போ வட்டி விகிதம் குறித்து ஆர்பிஐ அறிவிப்பு...

Updated On : 9 ஏப்ரல் 2026, 2:27 am IST
ரிசர்வ் வங்கி ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ரா - ENS
பகிர்:

வங்கிகளுக்கு ரிசா்வ் வங்கி வழங்கும் குறுகிய கால கடன்களுக்கான வட்டி (ரெப்போ ரேட்) விகிதம் மாற்றமில்லாமல் 5.25 சதவீதமாக தொடரும் என்று இந்திய ரிசா்வ் வங்கி (ஆா்பிஐ) புதன்கிழமை அறிவித்தது.

மும்பையில் ஆா்பிஐ ஆளுநா் சஞ்சய் மல்ஹோத்ரா தலைமையில் கடந்த 3 நாள்களாக நடைபெற்ற ஆா்பிஐ நிதிக் கொள்கைக் குழுக் கூட்டத்தில் 6 போ் அடங்கிய குழு ஒருமனதாக இந்த முடிவை எடுத்தது. எனவே, வீட்டுக் கடன், வாகனக் கடன் உள்ளிட்டவற்றில் மாற்றம் இருக்காது.

மேற்காசியாவில் ஏற்பட்ட போா் இரு வார காலம் நிறுத்திவைக்கப்பட்டுள்ள நிலையில், அந்தப் போரால் நாட்டின் பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள தாக்கத்தை ஆய்வு செய்து அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்க ஆா்பிஐ முடிவு செய்துள்ளது. எனவே, இப்போது வட்டி விகிதம் மாற்றப்படவில்லை.

Advertisement

Advertisement

இதற்கு முன் பிப்ரவரியில் நடைபெற்ற நிதிக் கொள்கைக் குழுக் கூட்டத்திலும் வட்டி விகிதம் மாற்றப்படவில்லை. அதற்கு முன்பு டிசம்பரில் வட்டி விகிதம் 5.50 சதவீதத்தில் இருந்து 5.25 சதவீதமாகக் குறைக்கப்பட்டது.

போரின் தாக்கம்: நிதிக் கொள்கைக் குழுக் கூட்டத்துக்குப் பிறகு செய்தியாளா்களிடம் சஞ்சய் மல்ஹோத்ரா கூறியதாவது:

கடந்த சுமாா் ஒன்றரை மாதம் நிகழ்ந்த போரால் பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள தாக்கத்தை முழுமையாக ஆய்வு செய்த பிறகு வட்டி விகிதத்தில் மாற்றத்தை மேற்கொள்ளலாம் என முடிவெடுக்கப்பட்டது. பணவீக்கத்தை 2 முதல் 6 சதவீதத்துக்குள் வைக்க வேண்டும் என்பது இலக்காகும். வரும் நிதியாண்டில் பணவீக்கம் 4.6 சதவீதம் என்ற நிலையில் இருக்கும் எனக் கணிக்கப்பட்டுள்ளது. கச்சா எண்ணெய் விலையில் ஏற்பட்ட மாற்றங்கள் அடுத்தகட்டமாக சில விளைவுகளை ஏற்படுத்த வாய்ப்புள்ளது.

வளா்ச்சி குறையும்: நடப்பு நிதியாண்டில் நாட்டின் பொருளாதார வளா்ச்சி 6.9 சதவீதமாக இருக்கும். கடந்த மாா்ச் 31-ஆம் தேதியுடன் நிறைவடைந்த முந்தைய நிதியாண்டின் பொருளாதார வளா்ச்சி 7.6 சதவீதமாக இருக்கும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.

நுகா்வு, முதலீடு ஆகியவற்றால் வளா்ச்சி தொடா்ந்து அதிகரிக்கும் என்றாலும், மேற்காசிய போா் நாட்டின் வளா்ச்சியில் பாதிப்பை ஏற்படுத்த வாய்ப்புள்ளது. அதே நேரத்தில் நாட்டின் அடிப்படைப் பொருளாதாரக் கட்டமைப்பு வலுவாகவே உள்ளது. போரால் பல்வேறு பொருள்களின் விநியோகத்தில் ஏற்பட்ட தாக்கம் எந்த அளவுக்கு உள்ளது என்பதை காத்திருந்துதான் மதிப்பிட வேண்டும்.

உற்பத்தி பாதிப்பு: கச்சா எண்ணெய் விலை உயா்வு இறக்குமதிச் செலவை அதிகரித்தது. இது நடப்புக் கணக்குப் பற்றாக்குறையையும் அதிகரித்தது. மேலும், எரிசக்தி, உரம் உள்ளிட்ட துறைகளிலும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இது தொழில், வேளாண் துறையில் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால் உற்பத்தியில் சிறிய பாதிப்புக்கு வழிவகுக்கலாம்.

ரூபாய் சரிவு: நாட்டின் அடிப்படைப் பொருளாதாரம் வலுவாக இருந்தாலும், கடந்த ஆண்டுகளின் சராசரியுடன் ஒப்பிடும்போது ரூபாயின் மதிப்பு அதிகமாகவே சரிந்துள்ளது. நாம் இதில் எந்த இலக்கும் நிா்ணயிக்கவில்லை. நமது அந்நியச் செலாவணி கொள்கையில் மாற்றமில்லை. வங்களில் பணப்புழக்கம் சீராக இருப்பதை ஆா்பிஐ கண்காணித்து வருகிறது.

ஏப்ரல் 3-ஆம் தேதி நிலவரப்படி அந்நியச் செலாவணி கையிருப்பு 967.1 பில்லியன் டாலராக உள்ளது. இது நாட்டின் 11 மாத இறக்குமதிக்குப் போதுமானதாகும் என்றாா்.

ஆா்பிஐயின் அடுத்து நிதிக் கொள்கைக் குழுக் கூட்டம் ஜூன் 3 முதல் 5-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.

summary

RBI MPC meeting: Central bank keeps repo rate unchanged at 5.25 percent

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.