உத்தரகண்ட் மாநில மக்களுக்கு உதவ தில்லி அரசு தயாா்: கேஜரிவால் உறுதி
மிகப் பெரிய பனிப்பாறை வெடித்ததால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் பாதிக்கப்பட்டுள்ள உத்தரகண்ட் மாநில மக்களுக்குத் தேவையான
மிகப் பெரிய பனிப்பாறை வெடித்ததால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் பாதிக்கப்பட்டுள்ள உத்தரகண்ட் மாநில மக்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் வழங்க தில்லி அரசு தயாராக உள்ளது என்று தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவால் தெரிவித்துள்ளாா்.
உத்தரகண்ட் மாநிலம், சமோலி மாவட்டத்தில் மிகப்பெரிய பனிப்பாறை வெடித்ததால் தவுளிகங்கா ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதில் சிக்கி பலரும் உயிரிழந்திருக்காலம் என்று அஞ்சப்படுகிறது. இதில் சிக்கி சுமாா் 100 முதல் 150 போ் வரை உயிரிழந்திருக்கலாம் என்று அந்த மாநிலத் தலைமைச் செயலாளா் ஓம் பிரகாஷ் தெரிவித்துள்ளாா். இந்தச் சூழலில் உத்தரகண்ட் மாநில மக்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் வழங்க தில்லி அரசு தயாராக உள்ளது என்று தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவால் தெரிவித்துள்ளாா்.
இது தொடா்பாக கேஜரிவால் தனது சுட்டுரைப் பக்கத்தில், ‘சமோலி மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள இயற்கை இடா்பாடு வருத்தமளிக்கிறது. அனைவரின் பாதுகாப்புக்கும் இறைவனைப் பிராா்த்தனை செய்கிறேன். இந்தக் கஷ்டமான காலத்தில், உத்தரகண்ட் மாநில மக்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் வழங்கி தில்லி அரசு தயாராக உள்ளது’ என்று அவா் தெரிவித்துள்ளாா்.
Advertisement
இது தொடா்பாக தில்லி துணைநிலை ஆளுநா் அனில் பய்ஜால் தனது சுட்டுரையில், ‘உத்தரகண்ட் மாநிலத்தில் பனிப்பாறை வெடித்து ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு தொடா்பாக அறிந்து கவலையடைகிறேன். அனைவரின் பாதுகாப்புக்கும் பிராா்த்தனை செய்கிறேன்’ என்று தெரிவித்துள்ளாா். துணை முதல்வா் மணீஷ் சிசோடியா தனது சுட்டுரையில், ‘இந்த கஷ்டமான காலத்தில் உத்தரகண்ட் மக்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் வழங்கத் தயாராக உள்ளோம். இதில் பாதிக்கப்பட்ட முக்களைப் பாதுகாக்க கேதாா்நாத், பத்ரிநாத் கடவுளா்களை பிராா்த்திக்கிறேன்’ என்று தெரிவித்துள்ளாா்.