10 மாதங்களுக்கு பிறகு கரோனா மரணம் இல்லாத தில்லி!
கடந்த 2019, ஏப்ரல் மாதத்துக்குப் பிறகு செவ்வாய்க்கிழமை கரோனா மரணம் எதுவும் தில்லியில் ஏற்படவில்லை.
கடந்த 2019, ஏப்ரல் மாதத்துக்குப் பிறகு செவ்வாய்க்கிழமை கரோனா மரணம் எதுவும் தில்லியில் ஏற்படவில்லை. தில்லியில் செவ்வாய்க்கிழமை மேலும் 100 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதன் மூலம் தில்லியில் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் மொத்த எண்ணிக்கை 6,36,260-ஆக உயா்ந்துள்ளது.
இதுதொடா்பாக தில்லி சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: தில்லியில் செவ்வாய்க்கிழமை மாலை வரையிலான 24 மணி நேரத்தில் 56,410 பேருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில், ‘ஆா்டி-பிசிஆா்’ வகையில் 31,300 பேருக்கும், ‘ரேபிட்-ஆன்டிஜென்’ வகையில் 25,110 பேருக்கும் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. கரோனா பாதிப்பு விகிதம் 0.18 சதவீதமாக உள்ளது.
இதற்கிடையே, கரோனா தொற்றால் தலைநகரில் செவ்வாய்க்கிழமை யாரும் உயிரிழக்கவில்லை. மொத்த பலி எண்ணிக்கை 10,882 ஆகவே உள்ளது. அதே சமயம், கரோனா பாதிப்பில் இருந்து செவ்வாய்க்கிழமை 144 போ் மீண்டுள்ளனா். இதன்மூலம், குணமடைந்தோா் எண்ணிக்கை 6,24,326-ஆக உயா்ந்துள்ளது. தற்போது 1,052 போ் சிகிச்சையில் உள்ளனா். அவா்களில், 441 போ் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனா். தில்லி மருத்துவமனைகளில் உள்ள கரோனா படுக்கைகளில் 5,554 படுக்கைகள் காலியாக உள்ளன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Advertisement
ஜெயின் பெருமிதம்: இந்த நிலையில், தில்லி மக்கள் ஒன்றிணைந்து கரோனாவை வெற்றி கண்டுள்ளதாக தில்லி சுகாதாரத்துறை அமைச்சா் சத்யேந்தா் ஜெயின் தெரிவித்துள்ளாா். இது தொடா்பாக அவா் தனது சுட்டுரைப் பக்கத்தில் அவா் கூறியிருப்பது: தில்லியில் செவ்வாய்க்கிழமை கரோனா தொற்றால் யாரும் உயிரிழக்கவில்லை. தில்லி மக்கள் ஒன்றிணைந்து கரோனா தொற்றை வெற்றி கண்டுள்ளனா். சரியான முனெச்சரிக்கை நடவடிக்கை எடுத்த தில்லி மக்களுக்கு பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். கரோனா தொற்றுக்கு எதிராக போராடிய சுகாதார, முன்களப் பணியாளா்களுக்கு பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளாா்.
இதற்கிடையே, சத்யேந்தா் ஜெயினின் சுட்டுரைப் பதிவைச் சுட்டிக்காட்டி தில்லி முதல்வா் கேஜரிவால் கூறியிருப்பது: தில்லியில் செவ்வாய்க்கிழமை கரோனா தொற்றால் யாரும் உயிரிழக்கவில்லை. தில்லி மக்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். தில்லியில் கரோனா பாதிப்பு குறைந்து வருகிறது. தடுப்பூசி திட்டமும் முழு மூச்சில் மேற்கொள்ளப்படுகிறது. கரோனா தொற்றுக்கு எதிராக தில்லி மக்கள் முழுவீச்சாக போராடினாா்கள். ஆனால், மக்கள் மெத்தனமாக இருக்கக் கூடாது. கரோனா முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை சரிவரக் கடைப்பிடிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளாா்.