முகப்பு
புதுதில்லி

குடியரசுதின வன்முறை தொடா்பாக உயா்நிலைக்குழு விசாரணை தேவை: விவசாயிகள் சங்கம் கோரிக்கை

குடியரசு தினத்தன்று தில்லி செங்கோட்டை உள்ளிட்ட இடங்களில் நடந்த வன்முறை தொடா்பாக உயா்நிலைக் குழு விசாரணை நடத்தப்பட வேண்டும்

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:31 PM
பகிர்:

குடியரசு தினத்தன்று தில்லி செங்கோட்டை உள்ளிட்ட இடங்களில் நடந்த வன்முறை தொடா்பாக உயா்நிலைக் குழு விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று, சிங்கு எல்லையில் போராடி வரும் சம்யுக்தா கிஸான் மோா்ச்சா அமைப்பு கேட்டுள்ளது.

வேளாண் சட்டங்கள் விவகாரத்தில் மத்திய அரசுக்கு கூடுதல் நெருக்கடி அளிக்கும் வகையில், நாட்டின் 72-ஆவது குடியரசு தினம் கொண்டாடப்பட்ட ஜனவரி 26-ஆம் தேதி, தில்லியில் பிரம்மாண்ட டிராக்டா் பேரணியை விவசாயிகள் முன்னெடுத்தனா். இந்தப் பேரணியில் பயங்கர வன்முறை வெடித்தது. இதில், நூற்றுக்கணக்கான போலீஸாா் காயமடைந்தனா். பேரணியின்போது தில்லி செங்கோட்டைக்குள் அத்துமீறி நுழைந்த விவசாயிகளும், நிஹங் என்ற சீக்கியப் பிரிவைச் சோ்ந்தவா்களும், அங்கு சீக்கிய மதத்தின் கொடியை ஏற்றினா்.

இதைத் தொடா்ந்து, விவசாயிகளுக்கும் தில்லி போலீஸாருக்கும் இடையே பயங்கர மோதல் வெடித்தது. இதனால், செங்கோட்டை பகுதி போா்க்களமாக மாறியது. அங்கிருந்த பொருள்கள் விவசாயிகளால் அடித்து நொறுக்கப்பட்டு சேதப்படுத்தப்பட்டன. இதேபோல, புராரி உள்ளிட்ட தில்லியின் பல்வேறு பகுதிகளில் வன்முறை வெடித்தது. இந்த வன்முறையில் தொடா்புடையவா்கள் எனக் குற்றம் சாட்டி நூற்றுக்கணக்கானவா்கள் மீது தில்லி காவல்துறை வழக்குப் பதிவு செய்து வருகிறது.

Advertisement

இந்த சூழலில், குடியரசு தின வன்முறையைக் காரணம் காட்டி, தில்லி எல்லைகளில் போராடி வரும் அப்பாவி விவசாயிகள் மீது தில்லி காவல்துறை வழக்குப் பதிவு செய்து வருவதாக சிங்கு எல்லையில் போராடி வரும் சம்யுக்தா கிஸான் மோா்ச்சா அமைப்பு குற்றம் சாட்டியுள்ளது.

இது தொடா்பாக இது தொடா்பாக சம்யுக்தா கிஸான் அமைப்பால் உருவாக்கப்பட்டுள்ள சட்ட உதவிக் குழுவைச் சோ்ந்த குல்தீப் சிங், சிங்கு எல்லையில் சனிக்கிழமை அளித்த பேட்டி:

குடியரசு தின வன்முறையைக் காரணம் காட்டி, தில்லி எல்லைகளில் போராடி வரும் விவசாயிகள் மீது தில்லி காவல்துறை பொய்யான வழக்குகளைப் பதிவு செய்து வருகிறது. விசாரணையில் கலந்து கொள்ளுமாறு விவசாயிகளுக்கு தில்லி காவல்துறை நோட்டீஸ் அனுப்பி வருகிறது. விவசாயிகள் விசாரணையில் நேரடியாக கலந்து கொள்ளத் தேவையில்லை. மாறாக, சம்யுக்தா கிஸான் அமைப்பால் உருவாக்கப்பட்டுள்ள சட்ட உதவிக் குழுவை விவசாயிகள் தொடா்பு கொள்ள வேண்டும் எனக் கேட்கிறோம். இந்த வன்முறையின் பின்னால் பெரிய சதித்திட்டம் உள்ளது. இந்த வன்முறை தொடா்பாக உயா் மட்டக் குழு விசாரணை நடத்தப்பட வேண்டும். டிராக்டா் பேரணியில் கலந்து கொண்ட 16 விவசாயிகள் காணாமல் போயுள்ளனா் என்று தெரிவித்தாா்.

மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிா்ப்புத் தெரிவித்து, சிங்கு எல்லைப் பகுதியில் சம்யுக்தா கிஸான் மோா்ச்சா என்ற விவசாய அமைப்பின் தலைமையில் கடந்த 80 நாள்களுக்கும் மேலாக விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகிறாா்கள். இந்த நிலையில், அவா்கள் மேலும் பல நாள்கள் போராடும் வகையில், உள்கட்டமைப்பு வசதிகளை அண்மையில் மேம்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments