மேற்கு வங்கத்தில் பிரதமர் மோடி நாளை பிரசாரம்!
மேற்கு வங்கத்தில் பிரதமர் நரேந்திர மோடி நாளை பிரசாரம் மேற்கொள்வது குறித்து...
மேற்கு வங்கத்தில், பிரதமர் நரேந்திர மோடி வரும் வியாழக்கிழமை (ஏப். 9) தேர்தல் பிரசாரம் மேற்கொள்வதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேற்கு வங்கம் மாநிலத்தில் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு வரும் ஏப். 23 மற்றும் ஏப். 29 ஆகிய தேதிகளில் 2 கட்டங்களாக நடைபெறவுள்ளன.
இதையடுத்து, ஆளுங்கட்சியான திரிணமூல் காங்கிரஸ், எதிர்க்கட்சியான பாஜக மற்றும் அவர்களின் கூட்டணிக் கட்சிகள் தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றன.
Advertisement
இந்த நிலையில், மேற்கு வங்கத்தில் பாஜக சார்பில் மக்களிடையே நாளை பிரதமர் மோடி தேர்தல் பிரசாரம் மேற்கொள்கிறார். மேலும், ஹால்டியா, அசன்சோல் மற்றும் சியூரி ஆகிய இடங்களில் நடைபெறும் பிரசாரக் கூட்டங்களில் அவர் கலந்துகொள்வார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து, காலை 9.30 மணியளவில் புர்பா மெதினிபூர் மாவட்டத்தின் ஹால்டியாவிலும், மதியம் அசன்சோலிலுள்ள திறந்தவெளி மைதானத்திலும், பின்னர் மதியம் 2 மணியளவில் சியூரியின் சந்த்மாரி மைதானத்திலும் நடைபெறவுள்ள 3 வெவ்வேறு பிரசாரக் கூட்டங்களில் பிரதமர் மோடி பங்கேற்கவுள்ளார்.
முன்னதாக, மேற்கு வங்கத்தின் எதிர்க்கட்சித் தலைவரான பாஜகவைச் சேர்ந்த சுவேந்து அதிகாரியின் செல்வாக்கு மிகுந்த பகுதியாகக் கருதப்படும் ஹால்டியாவில் நடைபெறவுள்ள பிரதமர் மோடியின் பிரசாரக் கூட்டத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் திரள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், அங்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.
ஏற்கெனவே, மேற்கு வங்க சட்டப் பேரவைத் தேர்தலுக்கான தனது பிரசாரத்தை, பிரதமர் மோடி கடந்த ஏப். 5 அன்று கூச் பெஹாரில் இருந்து துவங்கியது குறிப்பிடத்தக்கது.
PM Modi will campaign for the Assembly elections in West Bengal April 9.