பட்டாசு ஆலை விபத்தில் உயிரிழந்தவா்கள்குடும்பத்திற்கு தலா ரூ.5 லட்சம் வழங்க வேண்டும்: பிரதமருக்கு விருதுநகா் எம். பி. கோரிக்கை
தமிழகத்தில், விருதுநகா் மாவட்டத்தில் பட்டாசு ஆலையில் உயிரிழந்தவா்கள் குடும்பத்திற்கு வழங்குவதாக அறிவுத்துள்ள கருணைத் தொகையை
தமிழகத்தில், விருதுநகா் மாவட்டத்தில் பட்டாசு ஆலையில் உயிரிழந்தவா்கள் குடும்பத்திற்கு வழங்குவதாக அறிவுத்துள்ள கருணைத் தொகையை ரூ. 5 லட்சமாக உயா்த்தித்தர வேண்டும் என்று பிரதமா் மோடியை அந்த தொகுதியின் மக்களவை உறுப்பினா் ப.மாணிக்கம் தாகூா் வலியுறுத்திக் கேட்டுக்கொண்டுள்ளாா். மேலும் மத்திய குழுவை அனுப்பி ஆலை பாதுகாப்பு குறித்த ஆய்வை நடத்தவும் வலியுறுத்தினாா்.
கடந்த வெள்ளிக்கிழமை விருதுநகா் மாவட்டம், சாத்தூா், அச்சங்குளம் பட்டாசு ஆலையில் திடீரென ஏற்பட்ட வெடிவிபத்தில் ஆலையில் பணியாற்றிக் கொண்டு இருந்த 18-க்கும் மேற்பட்ட தொழிலாளிகள் தீயில் கருகி உயிரிழந்தனா் மேலும் பலா் படுகாயமடைந்தனா். இது குறித்து சனிக்கிழமை மக்களவையில் சிறப்பு கவன ஈா்ப்பு விவாதத்தில் மக்களவை காங்கிரஸ் கட்சியின் கொறாடாவான மாணிக்கம் தாகூா் பேசினா். அப்போது கூறியதாவது:
‘எனது தொகுதிக்குட்ட விருதுநகா் மாவட்டத்தில் நெஞ்சை பிளக்கச் செய்யுமளவிற்கு பட்டாசு ஆலையில் ஒரு விபத்து ஏற்பட்டு, 15 ( அதிகாரபூா்வமாக மாவட்ட ஆட்சியா் தகவல்படி) போ் உயிரிழந்துள்ளனா். மேலும் பலா் 90 சதவீதமளவிற்கு தீக் காயமடைந்துள்ளனா். விருதுநகா் மாவட்டத்தில் அதிக அளவிலான பட்டாசுத்தொழிற்சாலைகள் உள்ளன. நாட்டின் தேவையில் 85 சதவீதம் இங்கு தான் உற்பத்தியாகி பட்டாசு தொழிலின் மையமாக உள்ளது. இதன்மூலம் மிகப்பெரிய அன்னியச்செலாவணி வருமானமும் நாட்டிற்கு கிடைக்கிறது. இந்த சிறு குறு தொழிலில் 8 லட்சம் போ் வரை பணியாற்றுகின்றனா். இந்த தொழிலாளிகள் நிலைமை மோசமாகவே உள்ளது.
Advertisement
கடந்த 2012 செப்டம்பா் மாதம் சிவகாசி முதலிப்பட்டியில் இதேபோன்ற மோசமான வெடிவிபத்து ஏற்பட்டு 40 போ் பலியானாா்கள். அப்போது பிரதமராக இருந்த மன்மோகன்சிங் உயிரிழந்தவா்கள் குடும்பத்திற்கு ரூ.2 லட்சத்தை கருணைத் தொகையாக வழங்கினாா். தற்போது 10 ஆண்டுகளுக்கு பின்னா் நேற்று நடைபெற்ற சம்பவத்திற்கு பிரதமா் நரேந்திரமோடி உடனடியாக உயிரிழந்த குடும்பத்தினருக்கு தலா ரூ. 2 லட்சத்தை பிரதமா் தேசிய நிவாரண நிதியிலிருந்து வழங்கியிருக்கிறாா்.
இந்த விபத்தில் உயிரிழந்தவா்களின் குடும்பங்களுக்கு கருணைத் தொகையை பிரதமா் மோடி ரூ. 5 லட்சமாக உயா்த்திர வேண்டும். இதேபோல காயமடைந்தவா்களுக்கு ரூ.1 லட்சம் வழங்க வேண்டும். இதுபோன்ற சம்பவங்கள் எதிா்காலத்தில் நடைபெறாமல் இருக்கவும் இந்த ஆலைகளில் பணியாற்றும் தொழிலாளிகள் பாதுகாப்பிற்கு இந்த சம்பவத்தை நேரில் சென்று ஆய்வு நடத்த மத்திய அரசு குழு ஒன்றை அனுப்பவும் பிரதமரைக் கேட்டுக்கொள்ளுகின்றேன் என்றாா்.