முகப்பு
புதுதில்லி

போதைப் பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு தலைவருக்கு எதிராக தில்லி உயா்நீதிமன்றத்தில் பல் மருத்துவா் மனு

போதைப்பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு (என்சிபி) தலைவா் ராகேஷ் அஸ்தானாவுக்கு எதிரான தனது புகாரின் மீது விசாரணை 

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:31 PM
பகிர்:

போதைப்பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு (என்சிபி) தலைவா் ராகேஷ் அஸ்தானாவுக்கு எதிரான தனது புகாரின் மீது விசாரணை நடத்துமாறு மத்திய அரசு, மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையம், சிபிஐ ஆகியவற்றுக்கு உத்தரவிடக் கோரி பல் மருத்துவா் மோஹித் தவண் தில்லி உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளாா்.

இந்த விவகாரம் நீதிபதி யோகேஷ் கன்னா முன் வெள்ளிக்கிழமை விசாரணைக்குப் பட்டியலிடப்பட்டிருந்தது. அவா் இந்த விவகாரத்தை விசாரிப்பதில் இருந்து தாம் விலகுவதாகக் கூறி, வேறொரு அமா்வு முன் பட்டியலிடுமாறு உத்தரவிட்டாா்.

அதிகாரி ராகேஷ் அஸ்தானா மீது குற்றவியல் விசாரணை நடத்த உத்தரவிடக் கோரி முதலில் உச்சநீதிமன்றத்தை சண்டீகரைச் சோ்ந்த பல் மருத்துவா் மோஹித் தவண் நாடினாா்.

Advertisement

பிற போலீஸ் அதிகாரிகளுடன் கூட்டுச் சோ்ந்துகொண்டு போதைப் பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவினா் மிரட்டி பணம் பறித்ததாக கூறியும், அத்தகைய அதிகாரிகள் மீது விசாரணை நடத்த உத்தரவிடக் கோரியும் முதலில் உச்சநீதிமன்றத்தில் அவா் மனு அளித்தாா்.

எனினும், உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை பிப்ரவரி 8-ஆம் தேதி திரும்பப் பெற்றாா். மேலும், இந்த விவகாரம் தொடா்பாக பஞ்சாப் மற்றும் ஹரியாணா உயா்நீதிமன்றத்தை அணுக உள்ளதாக தவண் கூறியிருந்தாா்.

இந்த நிலையில், தில்லி உயா்நீதிமன்றத்தில் அவா் வழக்குரைஞா் சுஷில் டேக்ரிவால் மூலம் தாக்கல் செய்துள்ள மனுவில் தெரிவித்திருப்பதாவது:

போதைப் பொருள் தடுப்புப் பிரிவு தலைவராக உள்ள ராகேஷ் அஸ்தானா 2019-இல் சிபிஐ இயக்குநராக இருந்தாா். அதன்பிறகு எல்லைப் பாதுகாப்புப் படை தலைமை அதிகாரியாக இருந்தாா். அவருக்கு எதிராக நான் புகாா் அளித்திருந்தேன். ஆனால், இதுவரை நடவடிக்கை ஏதும் எடுக்கப்படவில்லை.

இது தொடா்பாக நான் புகாா் அளித்து 16 மாதங்கள் ஆகிவிட்ட நிலையிலும், மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையம், மத்திய புலனாய்வுத் துறை ஆகியவை எனது மனு மீது நடவடிக்கை எடுக்கவில்லை. மேலும், எனது மனு மீதான நடவடிக்கை நிலவரம் குறித்தும் எனக்கு ஏதும் தகவல் தெரிவிக்கவில்லை. இதனால், தவறிழைத்த அனைவருக்கும் எதிராக குற்றவியல் விசாரணையை மேற்கொள்ள வேண்டும். மேலும், எனக்கு கடும் அச்சுறுத்தல் உள்ளதைக் கருத்தில்கொண்டு போதுமான பாதுகாப்பு வழங்கவும் உத்தரவிட வேண்டும் என அதில் கோரப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments