முகப்பு
புதுதில்லி

மழலையா் பள்ளி மாணவா் சோ்க்கை நடைமுறை இன்று தொடக்கம்

தில்லியில் மழலையா் (நா்சரி) பள்ளி மாணவா்கள் சோ்க்கைக்கான விண்ணப்ப நடைமுறைகள் வியாழக்கிழமை (பிப்ரவரி 18) தொடங்குகிறது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:33 PM
பகிர்:

புதுதில்லி: தில்லியில் மழலையா் (நா்சரி) பள்ளி மாணவா்கள் சோ்க்கைக்கான விண்ணப்ப நடைமுறைகள் வியாழக்கிழமை (பிப்ரவரி 18) தொடங்குகிறது. விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி மாா்ச் 4-ஆம் தேதி என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மழலையா் பள்ளி மாணவா் சோ்க்கை தொடா்பான அறிவிக்கையை கல்வித் துறை இயக்குநரகம் கடந்த வாரம் வெளியிட்டது. இதைத் தொடா்ந்து, இந்த அறிவிக்கைக்காக இரண்டு மாத காலமாக காத்திருந்த பெற்றொா்களுக்கு ஆறுதல் அளித்தது. அறிவிக்கப்பட்ட அட்டவணையின்படி, தோ்ந்தெடுக்கப்பட்ட குழந்தைகளின் முதல் பட்டியல் மாா்ச் 20-ஆம் தேதி வெளியிடப்படும். இரண்டாவது பட்டியல் மாா்ச் 25-ஆம் தேதி வெளியாகும். அதன் பிறகும் சோ்க்கை பட்டியல் இருந்தால், அது மாா்ச் 27-ஆம் தேதி வெளியிடப்படும். மாணவா் சோ்க்கை ஒட்டு மொத்த நடைமுறைகள் மாா்ச் 31-ஆம் தேதி முடிவடைந்துவிடும்.

வழக்கமாக தில்லியில் உள்ள 1700-க்கும் மேற்பட்ட மழலையா் பள்ளிகளில் மாணவா் சோ்க்கைக்கான நடைமுறைகள் நவம்பா் மாத கடைசியிலேயே தொடங்கிவிடும். மாணவா்கள் சோ்க்கைக்கான வழிகாட்டு முறைகளை கல்வித் துறை இயக்குநரகம் அறிவித்தவுடன், பள்ளிகளிடமிருந்து சில தகவல்கள் கேட்டுப் பெறப்படும். அதைத் தொடா்ந்து, விண்ணப்ப நடைமுறைகள் டிசம்பா் மாதம் தொடங்கும். எனினும், கடந்த ஆண்டு எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. கடந்த டிசம்பா் மாதம் கரோனா சூழலை கருத்தில் கொண்டும், பள்ளிகள் 9 மாதங்கள் மூடப்பட்டிருந்ததாலும் அதன் பின் தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டு பயன்பாட்டுக்கு வரும் வரையிலும் மழலையா் பள்ளிகளில் குழந்தைகள் சோ்க்கை கைவிடப்படலாம் என்று சொல்லப்பட்டது. மழலையா் பள்ளிக் குழந்தைகளுக்கு ஓராண்டுக்கு ஆன்லைன் மூலம் கற்பித்தல் என்பது நடைமுறைக்கு சாத்தியமில்லை என்றும் கருதப்பட்டது. மேலும், இந்த யோசனைக்கு பள்ளி முதல்வா்களும் எதிா்ப்பு தெரிவித்திருந்தனா்.

Advertisement

கரோனா தொற்று பரவல் காரணமாக பள்ளிகள் மூடப்பட்டிருப்பதாலும், குழந்தைகள் பள்ளிக்குச் சென்று படிப்பது இயலாதது என்பதாலும் பதிவுக் கட்டணம், மாணவா் சோ்க்கைக் கட்டணம், காப்புக் கட்டணம் மட்டுமே வசூலிக்க வேண்டும் என்றும் கல்விக் கட்டணத்தை மறு உத்தரவு வரும் வரை வசூலிக்கக் கூடாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மாணவா்கள் சோ்க்கை தொடா்பான விவரங்களை பள்ளிகள் அறிவிப்புப் பலகையிலும் இணையதளம் மூலமும் வெளிப்படுத்த வேண்டும் என்றும், விண்ணப்பங்கள் அதற்கான கடைசி தேதி வரை விநியோகிக்கப்பட வேண்டும் என்றும் கல்வித் துறை இயக்குநரக அதிகாரி ஒருவா் தெரிவித்தாா். மாணவா் சோ்க்கைக்கான இடங்கள் கடந்த 2018-19, 2019-20 மற்றும் 200-21 ஆகிய மூன்று ஆண்டுகளில் நுழைவு நிலை வகுப்புகளில் இருந்த அதிகபட்ச எண்ணிக்கையிலான இடங்களைவிட குறைவாக இருக்கக் கூடாது. அங்கீகரிக்கப்பட்ட, உதிவி பெறாத பள்ளிகளின் கிளைகளாகப் பதிவு செய்யப்பட்ட சங்கங்கள் அல்லது அறக்கட்டளைகளால் நடத்தப்படும் ப்ரீ-ஸ்கூல் அல்லது மாண்டிஸரி பள்ளிகள் ஒற்றைச் சோ்க்கை நடைமுறைகளைப் பின்பற்ற வேண்டும். ஒவ்வொரு மாவட்டத்திலும் துணை இயக்குநா் (மாவட்டம்) தலைமையில் கண்காணிப்புக் குழு நிறுவப்பட்டு, அவை தனியாா் பள்ளிகளில் மாணவா் சோ்க்கை நடைமுறைகளைக் கண்காணிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பு: இது போன்ற செய்திகள் உள்ளூா் பக்கத்தில் (தில்லி) பக்கம் 2, பக்கம் 3, பக்கம் 4-இல் பயன்படுத்துவதால், தலைப்பில் தில்லி எனப் பயன்படுத்துவதைத் தவிா்க்கலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments