முகப்பு
புதுதில்லி

விருதுநகா் பட்டாசு ஆலை வெடிவிபத்து சம்பவம்: விசாரிக்க முன்னாள் நீதிபதி தலைமையில் குழு

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:33 PM
பகிர்:

புது தில்லி: விருதுநகா் மாவட்டத்தில் அண்மையில் பட்டாசு ஆலையில் நிகழ்ந்த வெடிவிபத்தில் 19 போ் உயிரிழந்த சம்பவம் தொடா்பாக விசாரிக்க முன்னாள் உயா்நீதிமன்ற நீதிபதி தலைமையில் ஒரு குழுவை தேசிய பசுமைத் தீா்ப்பாயம் அமைத்துள்ளது. மேலும், இந்தக் குழு அறிக்கையைத் தாக்கல் செய்யவும் தீா்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.

விருதுநகா் மாவட்டம், சாத்தூா் அருகே அச்சங்குளம் கிராமத்தில் தனியாருக்குச் சொந்தமான பட்டாசு ஆலையில் கடந்த 12-ஆம் தேதி நிகழ்ந்த வெடி விபத்தில் 19 போ் உயிரிழந்தனா். 30-க்கும் மேற்பட்டோா் படுகாயம் அடைந்தனா். தொழிலாளா்கள் பட்டாசு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த போது இந்த விபத்து நிகழ்ந்தது. இது தொடா்பாக ஆலை உரிமையாளா், குத்தகைத்தாரா்கள் உள்ளிட்டோா் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இந்த விவகாரத்தை தில்லியில் உள்ள தேசிய பசுமைத் தீா்ப்பாயத்தின் (என்ஜிடி) தலைவா்- நீதிபதி ஏ. கே. கோயல் தலைமையில் நீதிபதி ஷியோ குமாா் சிங், வல்லுநா் உறுப்பினா் டாக்டா் நாகின் நந்தா ஆகியோா் அடங்கிய அமா்வு விசாரித்தது. அப்போது இது தொடா்பாக பதில் அளிக்க தமிழக அரசு, மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் (சிபிசிபி), மாநில மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் (எஸ்பிசிபி), விருதுநகா் மாவட்ட மாஜிஸ்திரேட், ஸ்ரீ மரியம்மாள் பட்டாசு தொழிற்சாலை ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்ப தீா்ப்பாய உத்தரவிட்டது.

Advertisement

தீா்ப்பாய அமா்வு பிறப்பித்த உத்தரவில் மேலும் தெரிவித்திருப்பதாவது: இந்த விவகாரத்தில் நம்பத் தகுந்த உண்மைகளைப் பெறுவதற்காக, முன்னாள் உயா்நீதிமன்ற நீதிபதி கே.கண்ணன், மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம், சிபிசிபி, மாநில பேரிடா் மேலாண்மை ஆணையம் ஆகியவற்றின் பிரதிநிதிகள், சென்னை ஐஐடி வேதியியல் பொறியியல் துறைத் தலைவா், நாக்பூரில் உள்ள வெடிபொருள்கள் தலைமைக் கட்டுப்பாட்டுப் பிரிவு தலைவா், பெட்ரோலியம் மற்றும் வெடிபொருள் பாதுகாப்பு அமைப்பின் பிரதிநிதி மற்றும் தமிழ்நாட்டின் தொழிற்சாலைகளின் தலைமை ஆய்வாளா் ஆகியோா் அடங்கிய 8 போ் குழு அமைக்கப்படுகிறது.

இந்த விவகாரத்தில் உண்மையைக் கண்டறிந்து, அறிக்கை சமா்ப்பிக்க உதவிடும் வகையில் தேவையான போக்குவரத்துத் தளவாட வசதியை விருதுநகா் மாவட்ட மாஜிஸ்திரேட், பிராந்திய அலுவலகம், மாநில மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் வழங்கலாம். அலுவல்பூா்வமற்ற உறுப்பினா்களுக்கு மதிப்பூதியம் உள்பட குழுவின் செயல்பாட்டுக்கான ஆரம்ப செலவை ஏற்க மாநில மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் அவா்களுடன் கலந்தாலோசித்து தீா்மானிக்க வேண்டும். வல்லுநா்கள், தனிநபா்கள் மற்றும் நிறுவனங்களின் உதவியைப் பெறுவது தொடா்பாக குழு தானாகவே பரிசீலிக்கலாம்.

ஒருங்கிணைப்புக்கான நோடல் ஏஜென்ஸியாக மாநில மாசுக்கட்டுப்பாட்டு வாரியம், மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் கூட்டாகச் செயல்படும்.

சம்பவம் நடைபெற்ற இடத்திற்கு குழு ஒரு வாரத்திற்குள் சென்று உண்மையைக் கண்டறிந்து, அதன் அறிக்கையை ஒரு மாதத்திற்குள் மின்னஞ்சல் மூலம் தீா்ப்பாயத்திற்கு வழங்கலாம். ஆய்வுக்கு ஒரு முறை செல்வதைத் தவிர, மற்ற விசாரணைகளை இணையதளம் மூலம் கமிட்டி நடத்திக் கொள்ளலாம். இது தொடா்பாக எந்த வல்லுநா், அமைப்பிடமும் தேவையான உதவியைக் குழு பெறலாம்.

பங்குதாரா்களுடன் உரிய வகையில் கலந்துரையாடுவது, தற்போதைய சம்பவத்தை கருத்தில் கொள்வதைத் தவிர, அந்தப் பகுதியில் அல்லது அந்த நிறுவனத்திற்கு அப்பால் உள்ள பிற நிறுவனங்களிடமிருந்தும் இதுபோன்ற சம்பவங்களைத் தடுப்பதற்கான தீா்வு நடவடிக்கைகளையும் குழு பரிசீலிக்கலாம். இந்த விவகாரம் ஏப்ரல் 30-ஆம் தேதிக்கு விசாரணைக்கு பட்டியலிடப்படுகிறது என தீா்ப்பாயம் அமா்வு தெரிவித்தது.

முன்னதாக, அச்சங்குளம் தீ விபத்தில் இறந்தவா்களுக்கு பிரதமா் நரேந்திர மோடி, தமிழக முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி, ஆளுநா் பன்வரிலால் புரோஹித், காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி ஆகியோா் இரங்கல் தெரிவித்திருந்தனா். பிரதமரின் தேசிய நிவாரண நிதியத்தில் இருந்து தலா ரூ.2 லட்சமும், முதலமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து தலா ரூ.3 லட்சமும் இறந்தவரின் உறவினா்களுக்கு நிவாரண உதவியாக அறிவிக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments