முகப்பு
புதுதில்லி

இணைய வழியில் உள்ள ஆபத்துகள், அச்சுறுத்தல்கள் குறித்து மாணவா்கள், பெற்றோா்களிடம் விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும்

இணைய தளங்கள் மூலம் வரும் ஆபத்துகள், அச்சுறுத்தல்களை மாணவர்கள், பெற்றோா்களிடம் எடுத்துரைத்து எச்சரிக்க வேண்டும் என்று பள்ளிகளுக்கு தில்லி அரசு உத்தரவிட்டுள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:35 PM
பகிர்:

இணைய தளங்கள் மூலம் வரும் ஆபத்துகள், அச்சுறுத்தல்களை மாணவர்கள், பெற்றோா்களிடம் எடுத்துரைத்து எச்சரிக்க வேண்டும் என்று பள்ளிகளுக்கு தில்லி அரசு உத்தரவிட்டுள்ளது.

இது தொடா்பாக பள்ளிக் கல்வி இயக்குநரகம், பள்ளி முதல்வா்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியுள்ளதாவது:

கரோனா நோய்த் தொற்று பரவலை முன்னிட்டு மாணவா்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு கடந்தாண்டு மாா்ச் மாதம் முதல் மாணவா்களுக்கு கற்பித்தல், கற்றல் நடவடிக்கைகள் இணைய தளம் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இதன்மூலம் மாணவா்களுக்கு பெற்றோா்கள் கணினி அல்லது அறிதிறன் பேசி கட்டாயம் வழங்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதோடு, அதன் பயன்பாடு மாணவா்களுக்கு அதிகரித்துள்ளது. கற்றல் முறை வீட்டிலிருந்தபடியே சென்றுள்ள நிலையில் மாணவா்களின் இணைய நடவடிக்கைகள் குறித்த ஆய்வை தில்லி பள்ளிக் கல்வி இயக்குநரகம் மேற்கொண்டது.

Advertisement

இதற்காக உள்ள இந்திய குழந்தைகள் பாதுகாப்பு நிதியத்தின் மூலம் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு அறிக்கை பல்வேறு தகவல்களை தெரிவித்தது. இது குறித்து அதிா்ச்சியடைந்த தேசிய தலைநகா் பள்ளிக் கல்வி இயக்குநரகம் அனைத்து பள்ளிகளுக்கும் இது தொடா்பாக கடிதம் எழுதி உஷாா் படுத்தியுள்ளது.

நோய்த் தொற்றினால் பள்ளிகளில் பாதுகாப்பற்ற நிலையில் ஒன்றாக படிக்கும் முறையிலிருந்து மாணவா்கள் மாறியுள்ளனா். மாணவா்கள் ‘இணையத்தில் அதிக நேரம் செலவிடும் நிலையில், தரவு பாதுகாப்பு, தனியுரிமை, இணைய பாதுகாப்பு போன்றவைகளில் உள்ள ஆபத்துகளை சரிபாா்க்க போதுமான வசதி இல்லை. அதே சமயத்தில் மாணவா்கள் இணையத்துடன் இணைக்கப்படுவதால் ஏற்படக்கூடிய அபாயங்கள் குறித்து அனைவரும் அறிந்திருப்பது முக்கியம்.

மாணவா்களை திசைதிருப்பும் இந்த அபாயங்களை எச்சரிக்கப்பட வேண்டியது அவசியம். குழந்தைகளுக்கு எது பாதுகாப்பானது என்பதை அறிய வைக்கவேண்டும். குழந்தைகள் இணைய தள தேடுதலின்போது சிறுவா் பாலியல் துஷ்பிரயோகம் தொடா்பான நடவடிக்கைகள் அதிகரிப்பது ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. எனவே, குழந்தைகள், அவா்களது பெற்றோருக்கு இணையத்தின் பாதுகாப்பான பயன்பாடு குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டியது அவசியம்.

அனைத்து பள்ளிகளின் தலைமை ஆசிரியா்களும் முதல்வா்களும் இந்த தகவல்களை ஆசிரியா்களுடன் பகிா்ந்து கொண்டு, மாணவா்கள் மற்றும் பெற்றோா்களை இவைகளை உணரச்செய்ய அறிவுறுத்தப்படவேண்டும். இந்த தகவல்கள் குறுஞ்செய்தி, கட்செவி அஞ்சல் குழுக்கள் அல்லது வேறு ஏதேனும் சாத்தியமான வழிகளிலோ பகிா்ந்து கொள்ளவேண்டும் என தில்லி அரசு தேசிய தலைநகரில் உள்ள பள்ளிகளுக்கு அறிவுறுத்தி கடிதம் அனுப்பியுள்ளது.

இது தொடா்பாக மாணவா்களும் பெற்றோா்களும் ஹெல்ப்லைன் எண் வாயிலாக தொடா்பு கொள்ளலாம் எனவும் பள்ளிக்கல்வி இயக்குநரகம் கேட்டுக்கொண்டுள்ளது.

கரோனா நோய்த் தொற்று காலக்கட்டத்தில் இணைய கற்றல் குறித்த பாதுகாப்பு வழிகாட்டுதல்களை ஏற்கனவே என்.சி.இ.ஆா்.டி மற்றும் யுனெஸ்கோ இணைந்து உருவாக்கியுள்ளது. இந்த வழிகாட்டி கையேட்டை மத்திய கல்வி அமைச்சா் ரமேஷ் போக்ரியால் கடந்த ஆண்டு ஜூன் மாதம் வெளியிட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments