முகப்பு
தமிழ்நாடு

உண்மையை சொன்னது ஏன்? சாத்தான்குளம் வழக்கில் முக்கிய சாட்சியமளித்த ரேவதி பேட்டி

உண்மையை சொன்னது ஏன் என்பது சாத்தான்குளம் வழக்கில் முக்கிய சாட்சியமளித்த ரேவதி பேட்டி

Updated On : 8 ஏப்ரல், 2026 at 8:02 AM
சாத்தான்குளம் வணிகர்கள் - ENS
பகிர்:

தமிழகத்தையே உலுக்கிய சாத்தான்குளம் தந்தை, மகன் கொலைச் சம்பவம் நடந்த 2020ஆம் ஆண்டு ஜூன் 19ஆம் தேதி, காவல்நிலையத்துக்குள் என்ன நடந்தது என்பது குறித்து தலைமைக் காவலர் ரேவதி எக்ஸ்பிரஸ் குழுவிடம் பகிர்ந்து கொண்டார்.

சாத்தான்குளம் வழக்கில் சாட்சியமளித்ததால், என் குடும்பத்தினர் என் பாதுகாப்பு குறித்து கவலைப்படுகிறார்கள் என்று பெண் தலைமைக் காவலர் ரேவதி தெரிவித்துள்ளார்.

சாத்தான்குளம் வியாபாரிகள் பி. ஜெயராஜ் (60) மற்றும் அவரது மகன் ஜே. பெனிக்ஸ் (31) ஆகியோரின் காவல்நிலைய மரண வழக்கில் தனது சக காவலர்களுக்கு எதிராக சாட்சியம் அளித்து, அவர்களுக்கு மரண தண்டனை கிடைக்க முக்கிய காரணமாக இருந்தவர் இவர்.

Advertisement

எக்ஸ்பிரஸ் குழுவிடம் அவர் பேசுகையில், கடந்த 2020 ஜூன் 19 அன்று சாத்தான்குளம் காவல் நிலையத்திற்குள் நடந்தது என்ன என்பது குறித்தும், சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்பதால்தான் உண்மையை வெளிக்கொணர முடிவு செய்தேன் என்றும் வெளிப்படையாகக் கூறுகிறார் 21 ஆண்டுகளாக தலைமைக் காவலராக பணியாற்றியவர்.

சம்பவம் நடந்த அன்று சாத்தான்குளம் காவல் நிலையத்தில் ரேவதி பணியில் இருந்துள்ளார். அன்று நடந்ததைப் போன்ற கொடூரத்தை நான் இதற்கு முன் கண்டதில்லை. பலியானவர்களின் மீது காவல்துறை இவ்வளவு கொடூரமாக நடந்துகொண்டதற்கு, கோபமூட்டும் ஒரே ஒரு தருணம்தான் காரணம். ஆனால் அது அவ்வளவு மோசமான ஒன்றல்ல.

காவலர் முத்துராஜ், தனது தந்தையை கடுமையாகத் தாக்குவதை பெனிக்ஸ் தடுத்தபோது, ​காவலரின் சட்டை பட்டன் அறுந்து விழுந்தது, இதுதான் காவலருக்கு கடும் ஆத்திரத்தை ஏற்படுத்தியது. காவல் நிலையத்திற்குள் இரத்தம் வழியும் நிலையில் இருந்த பெனிக்ஸையும் ஜெயராஜையும் பார்த்த ரேவதி, கடும் ஆக்ரோஷத்தில் இருந்த காவலர்கள் இருவரையும் அடிப்பதைத் தடுக்க முயன்றுள்ளார். ஆனால் அவர்களைக் கட்டுப்படுத்த முடியவில்லை.

காவலர்கள் கடுமையாகத் தாக்கியதால் அடிபட்டு ரத்த வெள்ளத்தில் இருந்த பெனிக்ஸால் ஒரு அடி கூட நடக்க முடியவில்லை, ஆனால் உதவி ஆய்வாளர்களில் ஒருவர், இரத்தம் படிந்த தரையைத் தனது பனியனைக் கொண்டு சுத்தம் செய்யும்படி அவரிடம் கூறினார்.

இந்த சம்பவத்தில், நான் உண்மையை வெளிப்படுத்தாமல் இருந்திருந்தால்கூட, நீதிமன்றம் அதை நிச்சயமாகக் வெளிக்கொண்டு வந்திருக்கும். அப்படி வந்திருந்தால் நானும் குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கப்பட்டிருக்கலாம் என்று கூறும் ரேவதி, உண்மையை சொல்வது என்று நான் முடிவெடுத்த பிறகு நான் சந்தித்த துன்புறுத்தல்கள் பற்றி எனக்கும் அந்தக் கடவுளுக்கும் மட்டுமே தெரியும். உண்மையில் தண்டனை பெற்ற காவலர்களின் குடும்பங்களுக்காக நான் மிகவும் வருந்துகிறேன், ஆனால் காவலர்கள் அந்த அளவுக்குக் கொடூரமாக நடந்திருக்கக் கூடாது. இன்று அந்த இரண்டு பேரும் உயிரோடு இல்லை என்று வருத்தத்தோடு கூறுகிறார் ரேவதி.

நான் முக்கிய சாட்சியமாக மாறிய பிறகும், விசாரணை நடந்துகொண்டிருந்தபோது, ​​காவல் நிலையத்தைச் சேர்ந்த பலர் நேரடியாகவும் மறைமுகமாகவும் என்னைத் தொடர்புகொண்டு, சம்பவத்தின்போது நான் காவல்நிலையத்தில் இல்லை என்று பொய் சாட்சியமளிக்குமாறு வற்புறுத்தினர். ஆனால், நான் பொய் சொல்ல விரும்பவில்லை. நான் செய்தது தவறு என அவர்கள் நினைப்பார்கள். ஆனால், ஒருநாள் உண்மையை அவர்கள் உணர்வார்கள் என்று கூறுகிறார் ரேவதி.

உண்மையை சொல்ல வேண்டும் என்று நான் எடுத்த முடிவுக்கு என் குடும்பத்தினர் ஆதரவளித்தனர். ஆனால், எனது எதிர்காலம் குறித்து அவர்கள் கவலைப்படுகிறார்கள்.

மாவட்ட நிர்வாகம் உத்தரவின்பேரில், ரேவதியின் இரண்டு மகள்களுக்கும் காவல்துறை பாதுகாப்புப் போடப்பட்டுள்ளது. எனினும், தன்னுடைய மற்றும் தன்னுடைய குடும்பத்தின் பாதுகாப்பு குறித்த அச்சம் ரேவதியின் மனதில் எப்போதும் இருக்கிறது என்பது அவரது பேச்சில் தெரிகிறது. சாத்தான்குளம் வணிகர்கள் பலரும் தலைமைக் காவலர் ரேவதிக்கு ஆதரவாக உள்ளனர்.

- Godson Wisely Dass

summary

Interview with Revathi, a key witness in the Satankulam case, on why she told the truth

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments