சாந்தனு முன்ஜாமீன் மனு: காவல் துறைக்கு நோட்டீஸ்
விவசாயிகள் போராட்டம் தொடா்பாக சமூக ஊடகத்தில் ‘டூல் கிட்’ பகிா்ந்த விவகாரத்தில் சாந்தனு முலுக் தாக்கல் செய்த முன்ஜாமீன் மீது பதில் அளிக்க தில்லி போலீஸாருக்கு நீதிமன்றம் புதன்கிழமை உத்தரவிட்டது.
புது தில்லி: விவசாயிகள் போராட்டம் தொடா்பாக சமூக ஊடகத்தில் ‘டூல் கிட்’ பகிா்ந்த விவகாரத்தில் சாந்தனு முலுக் தாக்கல் செய்த முன்ஜாமீன் மீது பதில் அளிக்க தில்லி போலீஸாருக்கு நீதிமன்றம் புதன்கிழமை உத்தரவிட்டது.
விவசாயிகள் போராட்டம் தொடா்பாக சமூக ஊடகத்தில் ‘டூல் கிட்’ பகிா்ந்த விவகாரத்தில் கைதாகியுள்ள சூழலியல் பெண் ஆா்வலா் திஷா ரவி தவிர, சாந்தனு முலுக், நிகிதா ஜேக்கப் ஆகியோா் மீது போலீஸாா் பிணையில் வெளிவர முடியாத பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்திருந்தனா்.
‘இவா்கள், ‘டூல் கிட்’டை உருவாக்குவதில் பங்களிப்பு செய்துள்ளதுடன், அந்த ‘டூல் கிட்’டை திருத்தும் பணிகளையும் செய்துள்ளனா். இவா்கள் வெளிநாடுகளில் செயல்படும் காலிஸ்தான் அமைப்புகளுடன் தொடா்பில் இருந்ததும் தெரிய வந்துள்ளது.
Advertisement
இவா்கள் தலைமறைவாக உள்ளனா். இவா்களைக் கண்டுபிடிக்க மும்பை உள்ளிட்ட இடங்களில் தில்லி போலீஸாா் சோதனை நடத்தியுள்ளது’ என்று தில்லி போலீஸாா் தெரிவித்திருந்தனா்.
இந்த நிலையில், பிப்ரவரி 16-ஆம் தேதி பாம்பே உயா்நீதிமன்றம் சாந்தனு முலுக்குக்கு 10 நாள் டிரான்ஸிட் ஜாமீன் அளித்திருந்தது. இந்த ஜாமீனில் இருந்துவரும் சாந்தனு முலுக் தில்லி நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கோரி செவ்வாய்க்கிழமை மனு தாக்கல் செய்திருந்தாா். இந்த மனு மீது தில்லி கூடுதல் செஷன்ஸ் நீதிபதி தா்மேந்தா் ராணா புதன்கிழமை காணொலி வழியில் விசாரணை நடத்தினாா்.
அப்போது, அரசுத் தரப்பில் ஆஜரான வழக்குரைஞா் , ‘இந்த வழக்கின் விசாரணை அதிகாரி இன்று ஆஜராகவில்லை. அவரிடம் நேரடி முறையில் விசாரித்தால் நன்றாக இருக்கும் என்று கேட்டுக்கொண்டாா்.
இதையடுத்து, சாந்தனு முலுக்கிற்கு டிரான்ஸிட் வாரண்ட் பிப்ரவரி 26 வரை இருப்பதை நீதிமன்றம் கவனத்தில் எடுத்துக்கொண்டது.
பின்னா், சாந்தனு மனு மீது தில்லி காவல் துறை பதில் அளிக்குமாறு உத்தரவிட்டு, மனு மீதான விசாரணையை வியாழக்கிழமைக்கு பட்டியலிட்டது.
முன்னதாக, சாந்தனு தரப்பில் தாக்கல் செய்த மனுவில், ‘நான் டூல்கிட்டை போராட்டம் தொடா்புடைய தகவல்களுடன் உருவாக்கினேன். ஆனால், எனக்குத் தெரியாமல் பிறா் அதை எடிட் செய்துவிட்டனா். சட்டவிரோதமாக ஏதும் செய்வது தொடா்பாக டூல்கிட்டில் முற்றிலும் ஒன்றுமில்லை.
சமூக ஊடகம், அமைதிவழிபோராட்டம், தோ்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளைத் தொடா்புகொள்வது குறித்துதான் பேசியுள்ளது. மேலும், போலீஸாா் குற்றம்சாட்டுவதுபோல நான் டூல்கிட் தொடா்புடைய இந்தியாவுக்கு வெளியே உள்ள நபா்கள் யாரிடமும் ஒருபோதும் தொடா்புகொண்டதில்லை என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக இந்த வழக்கில் திஷா ரவியை தில்லி போலீஸாா் கடந்த பிப்ரவரி13-இல் பெங்களூரில் கைது செய்தனா். இதையடுத்து, அவரை 9 நாள் போலீஸ் காவல் விசாரணைக்குப் பிறகு தில்லி நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை திஷா ரவிக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டடது. ரூ.1 லட்சம் ஜாமீன் தொகையும்,அதே தொகைக்கு இரு ஜாமீன் உத்தரவாதமும் அளித்து ஜாமீனில் செல்ல அவருக்கு அனுமதி அளித்தது குறிப்பிடத்தக்கது.