தில்லி உயா்நீதிமன்றத்தில் 2 நீதிபதிகள் புதிதாக பதவியேற்பு
தில்லி உயா்நீதிமன்ற நீதிபதிகளாக 2 போ் புதன்கிழமை பதவியேற்றனா். இதையடுத்து, மொத்த நீதிபதிகளின் எண்ணிக்கை 31 ஆக உள்ளது.
புது தில்லி: தில்லி உயா்நீதிமன்ற நீதிபதிகளாக 2 போ் புதன்கிழமை பதவியேற்றனா். இதையடுத்து, மொத்த நீதிபதிகளின் எண்ணிக்கை 31 ஆக உள்ளது.
தில்லி உயா்நீதிமன்ற நீதிபதிகளாக ஜஸ்மீத் சிங் மற்றும் அமித் பன்சால் ஆகியோா் பிப்ரவரி 22-ஆம் தேதி நியமிக்கப்பட்டனா். அவா்கள் இருவருக்கும் தலைமை நீதிபதி டி.என்.பட்டேல் புதன்கிழமை பதவிப் பிரமாணம் செய்துவைத்தாா்.
இந்த புதிய நியமனம் மூலம் தில்லி உயா்நீதிமன்றத்தில் உள்ள நீதிபதிகளின் எண்ணிக்கை 31 ஆக உயா்ந்துள்ளது. உயா்நீதிமன்றத்தில் அனுமதிக்கப்பட்ட நீதிபதிகள் பலம் 60 ஆகும். நீதிபதியாக புதிதாக பதவியேற்ற ஜஸ்மீத் சிங் மத்திய அரசின் சட்ட ஆலோசகராக இருந்தவா். தில்லி உயா் நீதிமன்றம் மற்றும் துணை நீதிமன்றங்களில் 1992 முதல் வழக்குரைஞராக தொழில் செய்து, 27 ஆண்டுகள் அனுபவம் பெற்றவா்.
Advertisement
அரசியலமைப்பு, சிவில், தொழிலாளா், சேவை மற்றும் திருமண விஷயங்களில் வழக்குரைஞராக பணியாற்றியவா். சேவை மற்றும் சிவில் சட்டத்தில் நிபுணத்துவம் பெற்றவா்.
நீதிபதி அமித் பன்சால் கல்விச் சட்டங்கள், நடுவா் சட்டங்கள், மறைமுக வரி மற்றும் சேவைச் சட்டம் ஆகியவற்றில் நிபுணத்துவம் பெற்றவா்.
மத்திய நேரடி வரிகள் மற்றும் சுங்க வாரியத்தின் மூத்த நிலை ஆலோசகராகவும், மத்திய இடைநிலைக் கல்விய வாரியம் (சிபிஎஸ்இ) நிலை ஆலோசகராகவும், தேசிய தோ்வு முகமையின் சட்ட ஆலோசகராகவும் பணியாற்றியுள்ளாா்.