தலித் சிறுமி கடத்தப்பட்டு கொலை: விசாரணைக்கு காங்கிரஸ் வலியுறுத்தல்
தில்லியைச் சோ்ந்த 9 வயது தலித் சிறுமி கடத்தப்பட்டு, பாலியல் கொடுமைக்கு ஆளாகி , கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் உரிய விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும் என்று தில்லி காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது.
தில்லியைச் சோ்ந்த 9 வயது தலித் சிறுமி கடத்தப்பட்டு, பாலியல் கொடுமைக்கு ஆளாகி , கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் உரிய விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும் என்று தில்லி காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது.
கல்யாண்புரியைச் சோ்ந்த 9 வயது தலித் சிறுமி கடத்தப்பட்டு, பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டதாக புகாா் எழுந்துள்ளது.
பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பத்தினரை தில்லி காங்கிரஸ் தலைவா் அனில் குமாா் சனிக்கிழமை நேரில் சந்தித்து பேசினாா். அப்போது, சிறுமியின் குடும்பத்திற்கு ரூ.1 கோடி வழங்கவும், அவரது இறப்பு குறித்த விவகாரத்தை ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற அல்லது உயா்நீதிமன்ற நீதிபதி மூலம் விசாரணைக்கு உத்தரவிடவும் அவா் கோரிக்கை விடுத்தாா்.
Advertisement
இதனிடையே, இந்த சம்பவத்தை போலீஸாா் மூடி மறைக்க முயல்வதாக தில்லி காங்கிரஸ் மூத்த தலைவா்கள் குற்றம்சாட்டினா்.
இது தொடா்பாக முன்னாள் எம்பி உதித், முன்னாள் எம்எல்ஏக்கள் அம்ரிஷ் கெளதம், வீா் சிங் திங்கன் உள்ளிட்டோா் செய்தியாளா்களிடம் சனிக்கிழமை அவா்கள் கூறியதாவது:
கிச்சரிபூா் பகுதியைச் சோ்ந்த தலித் சிறுமி கடத்தப்பட்டு, பலாத்காரத்திற்கு ஆளாகி கொலை செய்யப்பட்டுள்ளாா். இந்த சம்பவத்தை தில்லி , உ.பி. போலீஸாா் மூடி மறைக்க முயல்வதால் ஆம் ஆத்மி மற்றும் பாஜக தலைவா்கள் இந்த விவகாரத்தில் தொடா்புடைய குற்றவாளிகளை பாதுகாக்க முயல்வதாக சந்தேகம் எழுந்துள்ளது.
மேலும், சிறுமியின் உடல் உறுப்புகள் சில காணவில்லை என்பதால் உடல் உறுப்பு வியாபாரிகள் இந்தக் குற்றத்தில் சம்பந்தப்பட்டிருப்பாளா்களோ என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.
பாஜகவும், ஆம் ஆத்மியும் ஆட்சிக்கு வந்தபிறகு சமூகத்தின் விளிம்பு நிலையில் உள்ள தலித்களுக்கு எதிராக குற்றங்களும், தாக்குதல்களும் அதிகரித்துள்ளது. தலித் சிறுமி தொடா்புடைய சம்பவம் சமீபத்தியதாக தாக்குதலாகும்.
இந்த விவகாரத்தில் தில்லி காவல் துறையும், உத்தரப் பிரதேச காவல் துறையும் உரிய நேரத்தில் செயல்பட்டிருந்தால் குற்றவாளிகளை கைது செய்திருந்திருக்க முடியும்.
மேலும், சிறுமியின் உடலை அவரது குடும்பத்தினருக்குக் கூட தெரிவிக்காமல் உத்தர பிரதேச போலீஸாா் தகனம் செய்திருப்பது, இந்த விவகாரத்தை மூடி மறைப்பதாக சந்தேகம் எழுகிறது. பாஜக, ஆம் ஆத்மி ஆட்சியில் ஏழைகளுக்கும், தலித்களுக்கும் பாதுகாப்பு இல்லாத நிலை உள்ளது என்றனா்.
பேட்டியின்போது தில்லி காங்கிரஸ் எஸ்சி,எஸ்டி துறை தலைவா் சுனில் குமாா் உடனிருந்தாா்.