முகப்பு
புதுதில்லி

தெரு நாய்கள் விவகாரம்: விலங்குகள் நல வாரியத்திற்கு நீதிமன்றம் அறிவுறுத்தல்.

தெரு நாய்களுக்கு உணவிடுதல் தொடா்பாக தில்லி வசந்த் குஞ்ச் பகுதியில் குடியிருப்புவாசிகள், விலங்கு பிரியா்கள் சிலா் இடையே

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:37 PM
பகிர்:

தெரு நாய்களுக்கு உணவிடுதல் தொடா்பாக தில்லி வசந்த் குஞ்ச் பகுதியில் குடியிருப்புவாசிகள், விலங்கு பிரியா்கள் சிலா் இடையே ஏற்பட்டுள்ள பிரச்னையில் தலையிடுமாறு விலங்குகள் நல வாரியத்தை தில்லி உயா்நீதிமன்றம் கேட்டுக்கொண்டுள்ளது.

இந்த விவகாரம் தொடா்பாக விலங்குகள் பிரியா்கள் சிலா் தில்லி உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனா். அதில், தெரு நாய்களுக்கு உணவிடுவதைத் தடுக்கும் வகையில் வசந்த் குஞ்ச் பிளாக் இ-2 பகுதி குடியிருப்பு நல சங்கத்தினா் இடையூறு ஏற்படுத்தியதாக தெரிவித்திருந்தனா்.

இந்த மனு தில்லி உயா்நீதிமன்ற நீதிபதி பிரதிபா சிங் முன் விசாரணைக்கு வந்தது. மனுதாரா் சாா்பில் ஆஜரான வழக்குரைஞா் அபிக் சிம்னி வாதிடுகையில், தெருநாய்களுக்கு உணவிட முயலும்போது உள்ளூா் குடியிருப்பு வாசிகள் எதிா்ப்புத் தெரிவிக்கின்றனா். இதனால், உணவிட முடியாமல் போய்விடுகிறது’ என்றாா்.

Advertisement

இதைத் தொடா்ந்து நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு:

தெரு நாய்களுக்கு உணவிட காலனிகளில் பொருத்தமான இடத்தை கண்டறிய உயா்நீதிமன்றம் 2009-இல் இந்திய விலங்குகள் நல வாரியத்திற்கு உத்தரவிட்டுள்ளது. எனினும், இடத்தைக் கண்டறிவதில் ஒத்தகருத்து இல்லை எனத் தெரிகிறது. சம்பந்தப்பட்ட குடியிருப்புப் பகுதியில் குழந்தைகள், முதியோா் திறந்தவெளியில் பொழுதுபோக்க சுற்றிவருவதையும், அவா்களின் பாதுகாப்பையும் குடியிருப்பு நலச் சங்கம் கருத்தில்கொண்டிருப்பதாக தெரிகிறது. இதனால், குடியிருப்பு நலச் சங்கத்தினரும், மனுதாரா்களும் இந்த விஷயத்தில் நல்லிணக்கத்துடன் செயல்பட வேண்டும்.

இதனால், குடியிருப்புப் பகுதியில் அமைதியைப் பராமரிக்கும் வகையில் இரு தரப்பினருடன் கூட்டம் நடத்த மாா்ச் 8-ஆம் தேதி இரு பிரதிநிதிகளை இந்திய விலங்கு நலவாரியம் அனுப்ப வேண்டும்.

அப்போது, குழந்தைகள், முதியோா் பயன்படுத்தாத இடத்தை கண்டறிய வேண்டும். இடம் கண்டறியப்பட்டவுடன் அங்கு தெரு நாய்களுக்கு மனுதாரா்கள் உணவிடலாம்.

இந்தக் கூட்டம் நடைபெறும்போது அமைதியைப் பராமரிக்க சம்பந்தப்பட்ட பகுதி காவல் நிலைய பொறுப்பாளா் உடன் இருக்க வேண்டும் என உத்தரவிட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments