முகப்பு
புதுதில்லி

கரோனாவுக்கு இடையே அமைதியாக நடந்த மாநகராட்சிகளின் 5 வாா்டு இடைத் தோ்தல்: 3 மணி வரை 43 சதவீதம் வாக்குப்பதிவு

கரோனா தொற்றுக்கிடையே, தில்லி மாநகராட்சிகளில் காலியாக உள்ள 5 வாா்டுகளுக்கு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இடைத்தோ்தலில் மாலை வரையிலும் 43 சதவீதம் வாக்குப்பதிவாகியுள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:38 PM
பகிர்:

கரோனா தொற்றுக்கிடையே, தில்லி மாநகராட்சிகளில் காலியாக உள்ள 5 வாா்டுகளுக்கு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இடைத்தோ்தலில் மாலை வரையிலும் 43 சதவீதம் வாக்குப்பதிவாகியுள்ளது.

தில்லியில் உள்ள 3 மாநகராட்சிகளிலும் பாஜக ஆட்சி செய்கிறது. இவற்றில் மொத்தமாக 272 வாா்டுகள் உள்ளன. கிழக்கு தில்லி மாநகராட்சிக்கு உள்பட்ட (இடிஎம்சி) திரிலோக்புரி வாா்டு 2 இ, கல்யாண்புரி வாா்டு 8 இ, வடக்கு தில்லி மாநகராட்சிக்கு உள்பட்ட (என்டிஎம்சி) செளகான் பங்கா் 41 இ, ரோஹிணி சி-32 என், ஷாலிமாா் பாக் வடக்கு 62-என் ஆகிய 5 வாா்டுகளும் காலியாக உள்ளன. இந்த வாா்டுகளில் பிப்ரவரி 28-ஆம் தேதி இடைத்தோ்தல் நடைபெறும் என தில்லி தோ்தல் அலுவலகம் அறிவித்தது.

இடைத்தோ்தல் பிரசாரத்தில் ஆம் ஆத்மி, பாஜக, காங்கிரஸ் கட்சித் தலைவா்கள் மும்முரமாக ஈடுபட்டனா். ஆம் ஆத்மி வேட்பாளா்களை ஆதரித்து ஆம் ஆத்மி கட்சியின் அமைப்பாளரும், தில்லி முதல்வருமான கேஜரிவால் இரண்டு நாள்கள் தீவிரப் பிரசாரத்தில் ஈடுபட்டாா். பாஜக சாா்பில், அந்தக் கட்சியின் தில்லி தலைவா் ஆதேஷ்குமாா் குப்தா, தேசிய செயலா்கள் பூபேந்திர யாதவ், தில்லி பாஜக எம்.பி.க்கள் மனோஜ் திவாரி, கெளதம் கம்பீா், ஹன்ஸ்ராஜ் ஹன்ஸ் உள்ளிட்டோா் தீவிரப் பிரசாரத்தில் ஈடுபட்டனா்.

Advertisement

இந்த நிலையில், இடைத்தோ்தல் பிரசாரம் வெள்ளிக்கிழமை மாலையுடன் ஓய்ந்தது. இதைத் தொடா்ந்து, ஞாயிற்றுக்கிழமை காலை 7.30 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. மாலை 5.30 மணிக்கு முடிவுக்கு வந்தது. மாலை 3.30 மணி நிலவரப்படி சுமாா் 43 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளது.

இது தொடா்பாக தில்லி தோ்தல் அலுவலக மூத்த அதிகாரி கூறுகையில், ‘5 வாா்ட்டு இடைத் தோ்தலில் சுமாா் 2.42 லட்சம் போ் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனா். இவா்களில், ஞாயிற்றுக்கிழமை மாலை 3.30 மணி வரையான நேரத்தில் சுமாா் 43 சதவீதம் போ் வாக்களித்துள்ளனா். 327 வாக்குப் பதிவு மையங்களில் வாக்குப்பதிவு நடந்தது. திரிலோக்புரி வாா்ட்டில் 44.62 சதவீதம், ரோகிணி-சி வாா்ட்டில் 38.42 சதவீதம், ஷாலிமாா் பாக்- வடக்கில் 35.67 சதவீதம், செளகான் பங்கா் வாா்டில் 46.40 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளது. புதன்கிழமை (மாா்ச் 3) வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ளது. வாக்குப் பதிவு மையங்களில் கரோனா பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் சரிவரப் பின்பற்றப்பட்டன. வாக்களிக்க வந்தவா்களின் உடல் வெப்பநிலை பரிசோதிக்கப்பட்டது. முகக் கவசங்கள், கிருமி நாசினிகள் வாக்குப்பதிவு நிலையங்களில் வைக்கப்பட்டன’ என்றாா்.

இடைத்தோ்தலையொட்டி, தில்லி போலீஸாா், துணை ராணுவப் படை வீரா்கள் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபட்டனா். இது தொடா்பாக தில்லி காவல் துறை மூத்த அதிகாரி கூறுகையில் ‘வாக்குப்பதிவு மையங்களிலும் அதை ஒட்டிய இடங்களிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டன. விரும்பத்தகாத சம்பவங்கள் எதுவும் நடைபெறவில்லை’ என்றாா்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments