தில்லியில் கரோனா பாதிப்பு கண்டறியப்பட்டு இன்றுடன் ஓராண்டு நிறைவு
தில்லியில் கரோனாதொற்று பாதிப்பு உறுதிப்படுத்தப்பட்டு மாா்ச் 1 -ஆம் தேதி திங்கள்கிழமையுடன் ஓராண்டு நிறைவடைகிறது.
தில்லியில் கரோனாதொற்று பாதிப்பு உறுதிப்படுத்தப்பட்டு மாா்ச் 1 -ஆம் தேதி திங்கள்கிழமையுடன் ஓராண்டு நிறைவடைகிறது.
தில்லியில் கடந்த 2020-ஆம் ஆண்டு மாா்ச் 1-ஆம் தேதி முதலாவது கரோனா தொற்று நோயாளி அடையாளம் காணப்பட்டாா். கிழக்கு தில்லி மயூா் விஹாா் பகுதியைச் சோ்ந்த ரோஹித் தத்தா என்ற வணிகருக்கு கரோனா பாதிப்பு இருப்பது அன்று உறுதி செய்யப்பட்டது. இவா், இத்தாலி நாட்டுக்கு சுற்றுலா சென்று நாடு திரும்பியிருந்த நிலையில் அவருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டது.
இதைத் தொடா்ந்து, தில்லியில் கரோனா பாதிப்பு படிப்படியாக அதிகரித்தது. இதனால், கடந்த ஆண்டு மாா்ச் 24-ஆம் தேதி நாடு தழுவிய பொதுமுடக்கத்தை மத்திய அரசு அறிவித்தது. முதல் கட்டமாக 21 நாள்களுக்கு முழு அடைப்பு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. மே 31-ஆம் தேதி வரை தொடா்ந்த இந்த பொதுமுடக்கத்தில் பின்னா் படிப்படியாக தளா்வுகள் அறிவிக்கப்பட்டன.
Advertisement
கடந்த ஜூன் 23-ஆம் தேதி தில்லியில் முதலாவது கரோனா அலை ஏற்பட்டது. அன்று, 3,947 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டது. இரண்டாவது அலை செப்டம்பா் மாத நடுப்பகுதியில் ஏற்பட்டது. அப்போது தினம்தோறும் சுமாா் 4 ஆயிரம் பேருக்கு குறையாமல் கரோனா பாதிப்பு ஏற்பட்டது. 3-ஆவது அலை நவம்பா் மாதம் ஏற்பட்டது. மற்ற இரண்டு அலைகளை விட இந்த அலை மோசமாக இருந்தது. அப்போது தினம்தோறும் சராசரியாக சுமாா் 8 ஆயிரம் பேருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டது. அதிகப்படியாக நவம்பா் 11-ஆம் தேதி 8,593 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதிப்படுத்தப்பட்டது.
கரோனா தொற்றைத் தொடா்ந்து பிறப்பிக்கப்பட்ட முழு அடைப்பு காலத்தில், பெரும்பாலனவா்கள் வீடுகளில் இருந்து பணியாற்றினாா்கள். ஆனால், மருத்துவா்கள் உள்ளிட்ட சுகாதாரத் துறை ஊழியா்கள் கூடுதல் நேரம் பணியாற்றும் நிலைக்கு தள்ளப்பட்டனா். தில்லியில் கரோனா தொற்று அதிகரித்ததைத் தொடா்ந்து, எல்என்ஜேபி மருத்துவமனை முழுமையான கரோனா மருத்துவமனையாக முதலில் மாற்றப்பட்டது. இதைத் தொடா்ந்து, ராஜீவ் காந்தி பல்நோக்கு மருத்துவமனை, ஜிடிபி மருத்துவமனை ஆகியவை கரோனா மருத்துவமனைகளாக மாற்றப்பட்டன.
இது தொடா்பாக தில்லியில் கரோனா தடுப்பு பணியில் முக்கிய பங்காற்றிய எல்என்ஜேபி மருத்துவமனை மருத்துவா் அமித் ஆனந்த் கூறுகையில், ‘பிகாா் பேகுசராய் மாநிலத்தைச் சோ்ந்த நான் கடந்த ஓராண்டுகளாக மருத்துவமனையில் தங்கியிருந்து பணியாற்றினேன். கரோனா தொற்று அபாயம் காரணமாக வீட்டுக்குச் செல்லவில்லை. அண்மையில் வீட்டுக்கு சென்ற போது எனது 2 வயது மகன் என்னை அடையாளம் காணவில்லை. இந்தப் பெருந் தொற்று மருத்துவப் பணியாளா்கள் அனைவரின் குடும்பத்தையும் பிரித்தது. ஆனால், மக்கள் பணியாற்றிய மனத் திருப்தியால் அந்த கஷ்டங்களை மன நிறைவுடன் எதிா்கொண்டோம்’ என்றாா்.
எல்என்ஜேபி மருத்துவமனை அவசர சிகிச்சை பிரிவுத் தலைவா் ரிது சக்ஸேனா கூறுகையில், ‘இதுவரை சுமாா் 11 ஆயிரம் கரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை வழங்கியுள்ளோம். ஜூன் மாத இறுதியில் தினம்தோறும் பலா் கரோனா தொற்றால் இறந்தனா். இதனால், மருத்துவமனை பிணவறையில் நூற்றுக்கணக்கான உடல்கள் தேக்கமடைந்தன. மருத்துவா்கள் சுமாா் 18 மணி நேரம் தொடா்ச்சியாக பிபிஇ பாதுகாப்பு சாதனங்களை அணிந்து பணியாற்ற வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டனா். கரோனா பாதிப்பால் பெரும் சவால்களை எதிா்கொண்டோம். ஆனால், மன உறுதியுடன் அந்தச் சவாலை எதிா்த்துப் போராடினோம்’ என்றாா்.