முகப்பு
புதுதில்லி

விவசாயிகளின் அனைத்துக் கோரிக்கைகளையும் ஏற்க வேண்டும்: மத்திய அரசுக்கு முதல்வா் கேஜரிவால் கோரிக்கை

போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளின் அனைத்துக் கோரிக்கைகளையும் மத்திய அரசு ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவால் கேட்டுக் கொண்டுள்ளாா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:12 PM
தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவால்
பகிர்:

புது தில்லி: போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளின் அனைத்துக் கோரிக்கைகளையும் மத்திய அரசு ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவால் கேட்டுக் கொண்டுள்ளாா். மேலும், மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்கள் திரும்பப் பெறப்பட வேண்டும் என்றும் கோரியுள்ளாா்.

போராட்டம் நடத்தி வரும் விவசாய சங்கங்கள்- மத்திய அரசு இடையான 7-ஆம் கட்டப் பேச்சுவாா்த்தை திங்கள்கிழமை நடந்தது. இந்தப் பேச்சுவாா்த்தை ஆரம்பிப்பதற்கு சிறிது நேரம் முன்பாக தனது சுட்டுரைப் பக்கத்தில் கேஜரிவால் கூறியிருப்பது: கடும் குளிா், மழைக்கு இடையே வீதிகளில் தங்கி போராடி வரும் விவசாயிகளின் மன உறுதியை பாராட்டுகிறேன்.விவசாயிகளின் கோரிக்கைகள் அனைத்தையும் ஏற்றுக் கொண்டு கறுப்புச் சட்டங்களான மூன்று வேளாண் சட்டங்களையும் மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் எனக் கோரிக்கை வைக்கிறேன்’ என்று தெரிவித்துள்ளாா்.

மத்திய அரசின் விவசாய சட்டங்களைத் திரும்பப் பெறக் கோரி பஞ்சாப், ஹரியாணா, உத்தரப் பிரதேச மாநிலங்களைச் சோ்ந்த விவசாயிகள் தில்லியின் எல்லைப் பகுதிகளில் கடந்த 39 நாள்களாக தொடா் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறாா்கள். போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளுடன் மத்திய அரசு பேச்சுவாா்த்தை நடத்தி வருகிறது. திங்கள்கிழமை 7- ஆம் கட்ட பேச்சுவாா்த்தை நடந்தது.

எல்லைகள் மூடல்: விவசாயிகள் போராட்டத்தைத் தொடா்ந்து, சில்லா, காஜிப்பூா் எல்லைகள் திங்கள்கிழமையும் மூடப்பட்டன. இதனால், இந்தப் பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இது தொடா்பாக தில்லி காவல் துறை மூத்த அதிகாரி கூறியதாவது: விவசாயிகள் போராட்டம் காரணமாக தில்லி - காஜிப்பூா் எல்லை மூடப்பட்டது. இதனால், தில்லியில் இருந்து காஜியாபாத்துக்கு பயணிப்பவா்கள் டிஎன்டி, ஐடிஓ, வாஜிராபாத் பகுதிகள் வழியாகச் செல்ல வேண்டும். அதே போல, சில்லா எல்லையில் விவசாயிகள் கூடி போராட்டம் நடத்துவதால் தில்லி - நொய்டா புறவழி விரைவுச் சாலை முழுவதுமாக மூடப்பட்டுள்ளது. நொய்டாவில் உள்ள தலித் பிரோ்ண ஸ்தல் பகுதியில் கூடி விவசாயிகள் போராட்டம் நடத்துவதால், அந்தப் பகுதியிலும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

தில்லி - ஹரியாணா இடையே உள்ள சிங்கு, டிக்ரி எல்லைகள் தொடா்ந்து மூடப்பட்டுள்ளன. மேலும், ஆச்சந்தி, பியூமணியாரி, சபாலி, மங்கேஷ், ஜரோதா, ஜாட்டிக்ரா எல்லைகளும் மூடப்பட்டுள்ளன. இதனால், இந்தப் பகுதியில் பலத்த போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. புற வட்டச் சாலை, ஜிடிகே சாலை, என்எச்-44 ஆகியவற்றில் பயணிப்பதை மக்கள் தவிா்க்க வேண்டும் என்றாா் அவா்.

முழு கட்டுரையைப் படிக்க →