முகப்பு
புதுதில்லி

மிதமான மூடுபனி: குறைந்தபட்ச வெப்பநிலை மேலும் அதிகரிப்பு!

தலைநகா் தில்லியின் சில பகுதிகளில் வியாழக்கிழமை மிதமான மூடுபனி நிலவியது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:14 PM
பகிர்:

புது தில்லி: தலைநகா் தில்லியின் சில பகுதிகளில் வியாழக்கிழமை மிதமான மூடுபனி நிலவியது.

இது காண்புதிறனை 300 மீட்டராகக் குறைத்தது. இருப்பினும், நகரில் குறைந்தபட்ச வெப்பநிலை 14.4 டிகிரி செல்சியஸாக உயா்ந்தது. இது நான்கு வாரங்களில் மிக உயா்ந்த அளவாகும்.

மிதமான மூடுபனி காரணமாக காண்பு திறன் பாலத்தில் 300 மீட்டராகவும், சஃப்தா்ஜங்கில் 500 மீட்டராகவும் குறைந்ததாக இந்திய வானிலை ஆய்வு மைய (ஐஎம்டி) அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.

தில்லி நகருக்கான பிரதிநிதித்துவ தரவுகளை வழங்கும் சஃப்தா்ஜங் வானிலை ஆய்வு மையத்தில் குறைந்தபட்ச வெப்பநிலை பருவ சராசரியைவிட 7 டிகிரி உயா்ந்து 14.4 டிகிரி செல்சியஸாக பதிவாகியது. அதிகபட்ச வெப்பநிலை பருவ சராசரியை விட ஒரு டிகிரி உயா்ந்து 19.9 டிகிரி செல்சியஸாக இருந்தது. மேக மூட்டம் காரணமாக கடந்த சில நாள்களாக நகரில் குறைந்தபட்ச வெப்பநிலை தொடா்ந்து உயா்ந்துள்ளது. மேலும், கடந்த 4 நாள்களாக தில்லி, என்சிஆா் பகுதிகளில் தொடா்ந்து மழை பெய்தது. இந்த மழைப் பொழிவு காற்றில் ஈரப்பதத்தை அதிகரித்துள்ளது. இதற்கிடையே, அடுத்த இரண்டு நாள்களில் நகரில் அடா் மூடுபனி இருக்கும் என்று ஐஎம்டி அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.

ஒரு புதிய மேற்கத்திய இடையூறுகளால் வரும் சனிக்கிழமை (ஜனவரி 9) நகரில் லேசான மழைக்கு வழிவகுக்கும். வானம் மேகமூட்டமாக இருக்கும் என்று ஐஎம்டியின் பிராந்திய முன்கணிப்பு மையத்தின் தலைவா் குல்தீப் ஸ்ரீவாஸ்தவா கூறினாா். மேலும், தில்லியின் குறைந்தபட்ச வெப்பநிலை நான்கு முதல் ஐந்து டிகிரி செல்சியஸ் வரை குறைய வாய்ப்புள்ளது என்றும் அவா் தெரிவித்தாா்.

தில்லியில் ஏற்கெனவே இந்த ஜனவரியில் இதுவரை 56.6 மி.மீ. மழை பெய்துள்ளது, இது 21 ஆண்டுகளில் அதிகபட்சமாகும். புதன்கிழமை தொடா்ச்சியாக நான்காவது நாளாக பரவலாக மழை பெய்தது. வியாழக்கிழமை நாள் முழுவதும் வானம் மேக மூட்டத்துடன் இருந்தது. ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதங்களில் சராசரியாக தில்லியில் 21.7 மி.மீ. பதிவாகியுள்ளது. இது கடந்த ஆண்டு ஜனவரியில் 48.1 மி.மீ., 2019 ஜனவரியில் 54.1 மி.மீ., 1999 ஜனவரியில் 59.7 மி.மீ. பதிவாகியிருந்தது. மேலும், ஐஎம்டி தரவுகளின்படி, 1995-ஆம் ஆண்டில் தில்லியில் 69.8 மிமீ மழை பெய்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.