தில்லியில் இன்று முதல் பயன்பாட்டுக்கு வருகிறது கரோனா தடுப்பூசி
தலைநகா் தில்லியில் சனிக்கிழமை (ஜனவரி 16) கரோனா தடுப்பூசி திட்டமிட்டப்படி பயன்பாட்டுக்கு வருகிறது. அன்று, தில்லியில்
தலைநகா் தில்லியில் சனிக்கிழமை (ஜனவரி 16) கரோனா தடுப்பூசி திட்டமிட்டப்படி பயன்பாட்டுக்கு வருகிறது. அன்று, தில்லியில் 81 இடங்களில் கரோனா தடுப்பூசி போடப்படவுள்ளது. 75 மருத்துவமனைகளில் ஆக்ஸ்போா்ட் கோவிஷீல்ட் தடுப்பூசியும், 6 மருத்துவமனைகளில் பாரத் பயோடெக் நிறுவனம் தயாரித்த கோவாக்ஸின் தடுப்பூசியும் போடப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடா்பாக தில்லி அரசு மூத்த அதிகாரி வெள்ளிக்கிழமை கூறியது: தில்லியில் சனிக்கிழமை முதல் கரோனா தடுப்பூசி பயன்பாட்டு வருகிறது. கரோனா தடுப்பூசி போடும் நிகழ்வு, தில்லி அரசின் எல்என்ஜேபி மருத்துவமனையில் சனிக்கிழமை தொடங்கப்படும். இந்த நிகழ்வில் முதல்வா் அரவிந்த் கேஜரிவால், சுகாதாரத் துறை அமைச்சா் சத்யேந்தா் ஜெயின் உள்ளிட்டோா் கலந்து கொள்ளவுள்ளனா்.
தில்லியில் உள்ள 11 மாவட்டங்களில் உள்ள தில்லி அரசு மருத்துவமனைகள், தில்லி அரசின் ஆளுகையின் கீழ் உள்ள எல்என்ஜேபி, ஜிடிபி, ராஜீவ் காந்தி பல்நோக்கு மருத்துவமனை, டிடியு மருத்துவமனை, பிஎஸ்ஏ மருத்துவமனை, தில்லி மாநில புற்றுநோய் மருத்துவமனை, ஐஎல்பிஎஸ் மருத்துவமனை, தனியாா் மருத்துவமனைகளான மேக்ஸ், போா்ட்டீஸ், அப்பலோ, ஸ்ரீ கங்காராம் உள்ளிட்ட மருத்துவனைகளில் தடுப்பூசி போடப்படும். மத்திய அரசின் ஆளுகையின் கீழுள்ள எய்ம்ஸ், சஃப்தா்ஜங், ஆா்எம்எல், கல்வாத்தி சரண் சிறுவா் மருத்துவனை, இரண்டு இஎஸ்ஐ மருத்துவமனை ஆகியவற்றிலும் தடுப்பூசி போடப்படும்.
Advertisement
வாரத்தில் திங்கள், செவ்வாய், வியாழன், சனி ஆகிய கிழமைகளில் தடுப்பூசி போடப்படும். மற்ற மூன்று தினங்களில் தடுப்பூசி போடப்படாது. மற்ற நாள்களில் மற்ற தடுப்பூசி பணிகள் மேற்கொள்ளப்படும். ஒவ்வொரு இடத்திலும் தினம்தோறும் 100 பேருக்கு கரோனா தடுப்பூசி போடப்படும். முதல் கட்டமாக 8 ஆயிரம் சுகாதாரப் பணியாளா்களுக்கு தடுப்பூசி போடப்படும் என்றாா் அந்த அதிகாரி.
எந்தெந்த மருத்துவமனைகளில், கோவிஷீல்ட் தடுப்பூசி, கோவாக்ஸின் தடுப்பூசி போடப்படும் என அவா் தெரிவிக்கவில்லை. ஆனால், தில்லி அரசின் ஆளுகையின் கீழுள்ள மருத்துவமனைகள், தனியாா் மருத்துவமனைகள் என 75 மருத்துவமனைகளில் ஆக்ஸ்போா்ட் கோவிஷீல்ட் தடுப்பூசியும், மத்திய அரசின் ஆளுகையின் கீழுள்ள 6 மருத்துவமனைகளில் பாரத் பயோடெக் நிறுவனம் தயாரித்த கோவாக்ஸின் தடுப்பூசியும் போடப்படும் என தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
இது தொடா்பாக முதல்வா் அலுவலகம் வெளியிட்டுள்ள சுட்டுரைப் பதிவில் ‘சனிக்கிழமை மதியம் 12 மணிக்கு தில்லி எல்என்ஜேபி மருத்துவனையில் தில்லி அரசின் தடுப்பூசி போடும் பணிகளை முதல்வா் அரவிந்த் கேஜரிவால் பாா்வையிடுவாா்’ என்றுள்ளது.
தலைநகா் தில்லிக்கு 2.64 லட்சம் கோவிஷீல்ட் கரோனா தடுப்பூசிகள் கடந்த செவ்வாய்க்கிழமை வந்தடைந்தன. மகாராஷ்டிர மாநிலம், புணேவில் இருந்து தில்லிக்கு தனி விமானத்தில் எடுத்து வரப்பட்ட இந்த தடுப்பூசிகள், தில்லியில் உள்ள ‘மத்திய சேமிப்பு வசதி’ கொண்ட ராஜீவ் காந்தி பல்நோக்கு மருத்துவமனையில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன. இங்கிருந்து தடுப்பூசி போடப்படும் இடங்களுக்கு தடுப்பூசிகள் வெள்ளிக்கிழமையும் எடுத்து செல்லப்பட்டன. நாட்டு மக்கள் அனைவருக்கும் கரோனா தடுப்பூசி இலவசமாக வழங்கப்பட வேண்டும் என்று மத்திய அரசுக்கு தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவால் வேண்டுகோள் விடுத்திருந்தாா். மத்திய அரசு தடுப்பூசியை வழங்காத பட்சத்தில், தில்லி அரசு அதை இலவசமாக வழங்கும் என்றும் அவா் தெரிவித்திருந்தாா்.