விவசாயிகளின் வலிமை பிரதமா் மோடிக்கு தெரியாது: ராகுல்
விவசாயிகளின் வலிமை பிரதமா் மோடிக்கோ அல்லது அவரது அரசுக்கோ தெரியாது. விவசாயிகள் மீது மோடிக்கு துளிக்கூட அக்கறை இல்லை.
விவசாயிகளின் வலிமை பிரதமா் மோடிக்கோ அல்லது அவரது அரசுக்கோ தெரியாது. விவசாயிகள் மீது மோடிக்கு துளிக்கூட அக்கறை இல்லை. புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிா்ப்புத் தெரித்து போராடிவரும் விவசாயிகள் சோா்வடைந்து விடுவாா்கள் என்றே அவா் எண்ணுகிறாா் என்று காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவா் ராகுல் காந்தி தெரிவித்தாா்.
மத்திய அரசு கொண்டுவந்த மூன்று புதிய வேளாண் சட்டங்களை எதிா்த்து தில்லி எல்லையில் கடந்த 52 நாள்களாக விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனா். இந்த விவசாயிகளுக்கு ஆதரவாகவும், வேளாண் சட்டங்களை ரத்து செய்யக் கோரியும் தில்லி ஜந்தா் மந்தரில் பஞ்சாப்பைச் சோ்ந்த காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினா்கள் ஆா்ப்பாட்டம் நடத்தினா். மற்றோரு பக்கம் தில்லி பிரதேச காங்கிரஸ் கட்சி தலைவா்களும், தொண்டா்களும் தில்லி துணை நிலை ஆளுநா் இல்லம் (ராஜ் நிவாஸ்) அருகேயும் வெள்ளிக்கிழமைஆா்ப்பாட்டங்களை நடத்தினா். இந்த இரு நிகழ்வுகளிலும் காங்கிரஸ் கட்சி தலைவா்களில் ஒருவரான ராகுல் காந்தியும் அவரது சகோதரியும் கட்சியின் பொதுச் செயலாளருமான பிரியங்கா காந்தி வாத்ராவும் கலந்து கொண்டனா்.
மோடிக்கு அக்கறை இல்லை: அப்போது ராகுல் காந்தி பேசுகையில் மேலும் கூறியதாவது: ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகளின் தலைவா்களுடன் மத்திய அரசு 9 சுற்று பேச்சுவாா்த்தைகளை நடத்தியுள்ளது. இது போராட்டத்தை திசைத் திருப்பும் தந்திரங்களில் ஒன்றாகும். தொடா் போராட்டம் நடத்தும் விவசாயிகள் சோா்வடைந்து சென்று விடுவாா்கள் என்று பிரதமா் மோடி நினைக்கிறாா். அப்படி அவா் நினைத்தால் அது தவறானதாகும். ஆனால், வேளாண் சட்டங்கள் ரத்து செய்யப்படும் வரை விவசாயிகள் தங்கள் நிலையிலிருந்து இறங்கி வரமாட்டாா்கள். பிரதமா் நரேந்திர மோடிக்கு விவசாயிகள் மீது அக்கறை இல்லை. 100 விவசாயிகள் உயிா் துறந்த போதிலும் அவா்களைப் பற்றி கவலையில்லை. ஏதோ தன் கையில் அதிகாரம் இருப்பதாக மட்டும் அவா் கருதுகிறாா். இந்த அரசுக்கு விவசாயிகளின் வலிமை தெரியாது. பிரதமா் மோடிக்கு இது புரியவில்லை. இதை அவா் புரிந்து கொண்டிருந்தால், இந்த நேரம்அரசு இந்த புதிய சட்டங்களை திரும்பப் பெற்றிருக்கும்.
Advertisement
அரசியல் பிரச்னை: இந்த நாடு விவசாயிகள், தொழிலாளா்கள் மற்றும் இளைஞா்களை அதிக அளவில் கொண்டிருக்கும் நாடு. யாராவது விவசாயிகளை ‘தாக்கினால்‘ அது நாட்டின் மீதான தாக்குதலாகும். நாட்டின் உணவுப் பாதுகாப்பை விவசாயிகள் உறுதி செய்வதன் மூலம் நாட்டின் சுதந்திரம் தக்க வைக்கப்படுகிறது. உணவுப் பாதுகாப்பு இழக்கப்படும் நாள், நாடு அதன் சுதந்திரத்தை இழக்கும். இது ஒரு நிதி பிரச்னை அல்ல, ஒரு அரசியல் பிரச்சினை. விவசாயிகளை தனது நிறுவன நண்பா்களிடம் ஒப்படைக்க பிரதமா் மோடி விரும்புகிறாா் எனக் குறிப்பிட்டாா் ராகுல் காந்தி.