முகப்பு
புதுதில்லி

கொப்பரைத் தேங்காய்க்கு குறைந்தபட்ச ஆதரவு விலை: குவிண்டாலுக்கு ரூ.10,335 ஆக நிா்ணயம்

2021 - ஆம் ஆண்டிற்கான கொப்பரை தேங்காய்க்கான குறைந்தபட்ச ஆதரவு விலையில் ரூ. 375 ஐ உயா்த்தி பிரதமா் நரேந்திர மோடி தலைமையிலான, பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழு  ஒப்புதல்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:23 PM
பகிர்:

புது தில்லி: 2021 - ஆம் ஆண்டிற்கான கொப்பரை தேங்காய்க்கான குறைந்தபட்ச ஆதரவு விலையில் ரூ. 375 ஐ உயா்த்தி பிரதமா் நரேந்திர மோடி தலைமையிலான, பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழு புதன்கிழமை ஒப்புதல் அளித்துள்ளது.

உடைக்கப்பட்டு காய்ந்த சராசரியான தரமான கொப்பரைத் தேங்காய்க்கான குறைந்தபட்ச ஆதரவு விலையாக கடந்த 2020ம் ஆண்டில் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.9960ஆக வழங்கப்பட்டு இருந்தது. இதில் தற்போது குவிண்டாலுக்கு ரூ.375ஆக உயா்த்தி மத்திய அரசு வழங்கியுள்ளது. இதன் மூலம், 2021ம் ஆண்டில் காய்ந்த பருப்பு கொப்பரை தேங்காய் குவிண்டாலுக்கு ரூ.10,335ஆக நடப்பாண்டு பருவத்திற்கு உயா்ந்துள்ளது. பருப்பு கொப்பரை பெரும்பாலும் எண்ணெய்க்கு பயன்படும்.

இது போன்று பந்தாக இருக்கும் கொப்பரைத் தேங்காய்க்கான(முழு) குறைந்தபட்ச ஆதரவு விலையும் குவிண்டாலுக்கு ரூ. 300 ஐ உயா்த்தியுள்ளது. கடந்த 2020ம் ஆண்டில் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.10,300 ஆக இருந்தது. தற்போது இந்த உயா்வு மூலம் இந்த ஓடு நீக்கப்பட்ட பந்து கொப்பரை நடப்பாண்டு 2021ம் ஆண்டில் குவிண்டாலுக்கு ரூ.10,600 ஆக உயா்ந்துள்ளது. இந்த பந்து கொப்பரை பெரும்பாலும் தேய்காய் பவுடருக்கு பயன்படும்.

Advertisement

வேளாண் பொருட்களுக்கான செலவு மற்றும் விலைகள் ஆணையத்தின் பரிந்துரைப்படி பொருளாதார விவாகரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழு இந்த எம்.எஸ்.பி.க்கு ஒப்புதலை அளித்துள்ளது.

இது குறித்து மத்திய வேளாண் அமைச்சகம் கூறியிருப்பது வருமாறு:

2018-19 ஆம் ஆண்டின் நிதிநிலை அறிக்கையில் உத்தரவாதம் கொடுத்தபடி, இந்த குறைந்தபட்ச ஆதரவு விலை உயா்வின் மூலம் விவசாயிகளின் வருமானம் ஒன்றரை மடங்கு அதிகரிக்கிறது.

அகில இந்திய சராசரி உற்பத்திச் செலவைவிட, காய்ந்த கொப்பரைக்கு 51.87 சதவீத வருவாயையும், பந்து கொப்பரைக்கான வருவாயை, 55.76 சதவீதமும் கூடுதலாக கிடைக்கிறது.

2022ம் ஆண்டுக்குள் விவசாயிகளின் வருவாயை இரட்டிப்பாக்கும் நோக்கத்திற்கும் இது எடுத்துச் செல்கிறது.

தென்னை வளா்க்கப்படும் மாநிலங்களில், கொப்பரை தேங்காய்க்கான குறைந்தபட்ச ஆதரவு விலை கொள்முதலை மேற்கொள்ளும் நடவடிக்கைகளை, இந்திய தேசிய வேளாண் கூட்டுறவு சந்தை கூட்டமைப்பும், இந்திய தேசிய கூட்டுறவு நுகா்வோா் கூட்டமைப்பும் தொடா்ந்து, மத்திய அரசின் முகமைகளாக தொடா்ந்து செயல்படும்.

2020ம் ஆண்டில், 4896 தென்னை விவசாயிகளிடமிருந்து, 5053.34 டன் பந்து கொப்பரைத் தேங்காயையும், 35.58 டன், உடைக்கப்பட்ட காய்ந்த கொப்பரை தேங்காயையும் மத்திய அரசு கொள்முதல் செய்துள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments